பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களுக்குக் கடுமையான தண்டனைகள் கொடுக்கப் பட்டாலும் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமான திடுக்கிடும் குற்றங்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் ஹைதராபாத்தில் பிரபல இனிப்பகத்தின் உரிமையாளர், தன் மனைவியை வரதட்சணைக் கொடுமை செய்து, வீட்டுக்குள் இருந்து வெளியே வர இயலாதபடி சுவர் எழுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த முன்னாள் அரசியல் பிரமுகரும், தொழிலதிபருமான மறைந்த புல்லாரெட்டியின் பேரன் ஏக்நாத். இவருக்கும் பிரக்னயா என்ற பெண்ணுக்கும் 2014-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின்போது வரதட்சணையாக பிரக்னயா குடும்பத்தார் 75 லட்ச ரூபாயை வழங்கியுள்ளனர். மேலும் 55 லட்சம் ரூபாய் மதிப்புக்கு ஆபரணங்கள் கொடுத்துள்ளனர். பிரக்னயா அவரின் குடும்பத்தில் ஒரே பெண் வாரிசு என்பதால், ஏக்நாத் குடும்பத்தில் வரதட்சணையாகக் கூடுதல் பணம் கேட்க ஆரம்பித்துள்ளனர்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஒரு கட்டத்துக்கு மேல் பிரக்னயா மறுத்ததால், அவரையும் அவரின் 7 வயது மகளையும் ஏக்நாத் குடும்பத்தினர் துன்புறுத்தத் தொடங்கியுள்ளனர். இதன் உச்சக்கட்டமாக பிரக்னயாவையும் அவரின் மகளையும் வீட்டுக்குள் ஓர் அறைக்குள் அடைத்து, அங்கிருந்து வெளியே வர முடியாதபடி கற்களால் சுவர் எழுப்பி, உணவு மற்றும் தண்ணீர் கொடுக்காமல் கொடுமை செய்துள்ளனர். இதையடுத்து தெலுங்கானா பஞ்ச குட்டா காவல் நிலையத்தில் ஏக்நாத் மற்றும் அவரின் குடும்பத்தார் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
பிரக்னயா கொடுத்துள்ள புகாரில், `ஏக்நாத் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர். இதைத் திருமணத்துக்கு முன் என்னிடமிருந்தும் என் குடும்பத்திடம் இருந்தும் மறைத்து விட்டனர். திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே ஏக்நாத் குடும்பத்தினர் பணம் கேட்டு என்னைத் துன்புறுத்தி வந்தனர். ஒரு கட்டத்துக்கு மேல், என் குடும்பத்திடம் பணம் கேட்க முடியாது என்று நான் சொல்ல ஆரம்பித்தபோது என் மகளைக் கொன்று விடுவதாக மிரட்டி பணம் வாங்க ஆரம்பித்தனர்.

நாளுக்கு நாள் துன்புறுத்தல் அதிகமானது. கடந்த 10-ம் தேதி நான் தூங்கிக்கொண்டிருந்தபோது, என் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி, மூச்சுத்திணறச் செய்து என்னைக் கொலை செய்ய முயற்சி செய்தார்கள். பெரும்பாடுபட்டு அதிலிருந்து தப்பித்தேன். அதன் பின் என்னையும், என் மகளையும் ஓர் அறையில் அடைத்தனர், அன்று இரவே அந்த அறையைச் சுற்றி சுவர் எழுப்பி வெளியே போக முடியாதபடி செய்தனர்.
அவர்களுக்குத் தெரியாமல், காவல் துறையினரையும், என் பெற்றோரையும் தொடர்பு கொண்டேன். காவல்துறையினர் என்னையும் என் மகளையும் மீட்டுள்ளனர். நானும், என் மகளும் மனதால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறோம்' என்று கூறியுள்ளார். இதையடுத்து வரதட்சணை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.