Election bannerElection banner
Published:Updated:

சென்னை: அதிகாலையில் காரில் கடத்தல்... கணவனை இழந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

 பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

சென்னை, கீழ்ப்பாக்கம் பகுதியில் கணவனை இழந்த பெண்ணை காரில் கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த டீக்கடையில் வேலை பார்த்தவரைப் போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

சென்னை, கீழ்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (பெயர் மாற்றம்). இவர், 30.4.2021-ல் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், ``என் தங்கையின் பெயர் சித்ரா (35) (பெயர் மாற்றம்). அவருக்குத் திருமணமாகி கணவர் இறந்துவிட்டார். 9 வயதில் மகன் இருக்கிறார். கடந்த 30-ம் தேதி அதிகாலை முதல் சித்ராவைக் காணவில்லை. எனவே, அவரைக் கண்டுபிடித்துத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். அதன் அடிப்படையில் கீழ்ப்பாக்கம் போலீஸார் சித்ராவைத் தேடிவந்தனர்.

மாயம்
மாயம்

சம்பவம் நடந்த இடத்திலுள்ள சிசிடிவி கேமராக்களை போலீஸார் ஆய்வுசெய்தனர். அப்போது அதிகாலை நேரத்தில் சித்ராவை இளைஞர் ஒருவர் அழைத்துச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அதன் பிறகு இருவரும் சற்று தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏறிச் செல்வதை போலீஸார் சிசிடிவி மூலம் கண்டறிந்தனர். அதனால் போலீஸார் காரின் பதிவு நம்பர் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கினர்.

`எங்கே போனார் வணக்கம் சோமு?' -பெண் பேராசிரியைக் கடத்தல் வழக்கில் அலைக்கழிக்கும் அ.தி.மு.க புள்ளி

இந்தநிலையில் சித்ராவை காரில் அழைத்துச் சென்றது சக்திவேல் என்பவர் என்று தெரிந்தது. இவர், சித்ராவின் சகோதரர் சங்கர் குடியிருக்கும் பகுதியிலுள்ள டீக்கடையில் வேலை பார்த்துவருகிறார். அதனால் சங்கருடன் சக்திவேலுக்குப் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதன் பிறகு சங்கரின் தங்கை சித்ராவும் சக்திவேலுக்கு அறிமுகமாகியிருக்கிறார். இந்தச் சமயத்தில்தான் சித்ராவை அழைத்துச் சென்ற சக்திவேல், அவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு சித்ராவை அடைத்துவைத்து பாலியல் தொல்லை கொடுத்தது விசாரணையில தெரியவந்தது.

கைது
கைது

இதையடுத்து சித்ராவை அடைத்துவைத்திருந்த இடத்தை போலீஸார் கண்டறிந்தனர். அங்குச் சென்ற போலீஸார் சித்ராவை மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் சக்திவேல் மீது சித்ரா சரமாரியாகப் புகாரளித்தார். அதன்பேரில் சக்திவேலை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

அதிகாலை நேரத்தில் இளம்பெண்ணை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு