Published:Updated:

குமரி: `எங்களையும் என் புருஷன்கிட்டயே அனுப்பிவையுங்க!’ - மகள்களுடன் விபரீத முடிவெடுத்த பெண்

கணவன் ரஞ்சித்குமாருடன் ராசி
கணவன் ரஞ்சித்குமாருடன் ராசி

`நான் எனக்கு ஒரு வருஷம் டைம் கொடுத்து, அதுக்குப் பிறகுதான் இந்த முடிவு எடுத்திருக்கேன். உங்க யாராலயும் இதைத் தாங்கிக்க முடியாதுனு எனக்குத் தெரியும். ஆனாலும் என்னால இப்பிடி ஒரு வாழ்க்கையை வாழ முடியாது.’

கன்னியாகுமரி மாவட்டம்,  நாகர்கோவில் அருகே நெசவாளர்  காலணி பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (32). இவர் ஒரு ஆண்டுக்கு முன்னர் நிகழ்ந்த விபத்துக்குப் பின்னர் ஏற்பட்ட உடல்நலக்குறைவால்  உயிரிழந்தார். ரஞ்சித் குமாருக்கு திருமணமாகி ராசி (29) என்ற மனைவியும், அக்சயா (5), அனியா (3) ஆகிய மகள்களும் இருந்தனர். ரஞ்சித்குமாரின் மறைவுக்குப் பிறகு அவரின் தாய் தந்தையுடன் அவரது வீட்டிலேயே ராசி வசித்துவந்தார்.

ரஞ்சித்குமாரின் தந்தை ராமதாஸ் (72) கூலி வேலைக்குச் சென்று குடும்பத்தை கவனித்துவந்திருக்கிறார். இந்தநிலையில் கடந்த சில நாள்களாக ராசி மனச்சோர்வுடன்  காணப்பட்டிருக்கிறார். இந்தநிலையில் நேற்று தனது வாட்ஸ்அப்  ஸ்டேட்டஸில், `கணவனைப் பிரிந்து வாழ இயலவில்லை’ போன்ற கருத்துகளை அவர் பதிவிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில், நேற்று இரவு தனது இரண்டு மகள்களுக்கும் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளைக் கொடுத்ததோடு, அவரும் தூக்க மாத்திரை சாப்பிட்டிருக்கிறார்.

ஆனால் ராசி அதிகாலையில் மயக்கம் தெளிந்து எழுந்து குழந்தைகளை பார்த்திருக்கிறார். குழந்தைகள் இறந்தநிலையில் இருந்ததைக் கண்ட ராசி அவரது அறையிலிருந்த பாத்ரூமுக்குச் சென்று உடலில் தீ வைத்திருக்கிறார். தீ லேசாக எரிந்த நிலையில் அணைந்திருக்கிறது. ஆனால் மீண்டும் மயக்கமடைந்த ராசி அதே இடத்தில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

ராசியின் குழந்தைகள்
ராசியின் குழந்தைகள்

இன்று காலையில் நீண்ட நேரமாகியும் ராசியின் அறைக் கதவு  திறக்காததால் ,ரஞ்சித்குமாரின் பெற்றோர் சந்தேகம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினரின்  உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ராசியும், இரண்டு குழந்தைகளும் இறந்து கிடந்திருக்கிறார்கள். இந்தச் சம்பவம் குறித்து நேசமணிநகர் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு சென்ற போலீஸார் மூன்று உடல்களையும் மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக ஆசாரிப்பள்ளத்திலுள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் போலீஸார் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இதில் ராசி எழுதிய கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.

அந்தக் கடிதத்தில், `ராசி எழுதுவது. செழியன் அண்ணா, சரிதா அண்ணி, செந்தில் அண்ணா, ரேகா அவர்களுக்கு, நானும் பிள்ளைகளும் ஸ்லீப்பிங் டேப்லெட் சாப்பிட்டோம். தயவுசெய்து என்னை மன்னிச்சிருங்க. நான் எனக்கு ஒரு வருஷம் டைம் கொடுத்து அதுக்குப் பிறகுதான் இந்த முடிவு எடுத்திருக்கேன். உங்க யாராலயும் இதைத் தாங்கிக்க முடியாதுன்னு எனக்குத் தெரியும். ஆனாலும் என்னால இப்பிடி ஒரு வாழ்க்கையை வாழ முடியாது. பிளீஸ்... சாரி, என்னையும் என் பிள்ளைங்களையும் என் புருஷன்கிட்ட அனுப்பிவையுங்க. ப்ளீஸ், என் போன்ல வீடியோ போட்டிருக்கேன் அதைப் பாருங்க" என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தற்கொலை செய்துகொண்ட ராசி
தற்கொலை செய்துகொண்ட ராசி

இது குறித்து போலீஸார் கூறுகையில், "ராசியின் கணவர் மெடிக்கல் ஸ்டோர் வைத்திருந்தார். அதற்காகக் கடன் வாங்கியிருக்கிறார். பின்னர் ஒரு விபத்து ஏற்பட்டதில் காயமடைந்தவர் குணமான பின்னர், மருந்து சரியாக எடுத்துக்கொள்ளாத காரணத்தால் இறந்ததாகக் கூறப்படுகிறது. கணவன் வாங்கிய கடன் சுமை அதிகமாக இருந்ததாலும், கணவன் இறந்த சோகத்தாலும் ராசி தற்கொலை செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவருகிறது. தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம்” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு