Published:Updated:

தஞ்சாவூர்: 5 சவரன் நகைக்காக கொலை செய்யப்பட்ட பெண்! - சிக்கிய வேலைக்காரப் பெண், அவரின் கணவர்

கொலை செய்யப்பட்ட பெண்
கொலை செய்யப்பட்ட பெண்

யாருக்கும் சந்தேகம் வராமலிருக்க ஜோஸ்பின் மேரி உடலைப் பார்த்து ஆரோக்கிய டென்சி கதறியழுது நடித்திருக்கிறார்.

தஞ்சாவூரில், வீடு ஒன்றில் வேலை பார்த்துவந்த வேலைக்காரப் பெண் ஒருவர், தனியாக இருந்த வீட்டு உரிமையாளரான வயதான பெண்ணை ஐந்து சவரன் நகைக்காக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அந்த வேலைக்காரப் பெண்ணையும், அவரின் கணவரையும் போலீஸார் கைதுசெய்தனர்.

போலீஸ் கைதுசெய்த ஆரோக்கிய டென்சி
போலீஸ் கைதுசெய்த ஆரோக்கிய டென்சி

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையிலுள்ள சேக்கிழார் தெருவைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவருடைய மனைவி ஜோஸ்பின் மேரி, வயது 65. இவர்களுடைய மகன் பிராங்க்ளின் மதுரை ரயில்வேயில் டிடிஆராக வேலை செய்துவருகிறார். அந்தோணிசாமி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

சேக்கிழார் தெருவில் சொந்த வீட்டில் ஜோஸ்பின் மேரியும், அவரின் மகன் பிராங்க்ளினும் வசித்துவந்தனர். பிராங்க்ளினின் மனைவி லதா, அவருடைய அம்மா வீட்டில் இருந்துவருகிறார். இந்தநிலையில், கடந்த 14-ம் தேதி பிராங்க்ளின் மதுரைக்கு வேலைக்குச் சென்றுவிட்டார். இதையடுத்து 15-ம் தேதி இரவு பிராங்க்ளின், தனது அம்மா ஜோஸ்பின் மேரிக்கு போன் செய்திருக்கிறார். பல முறை போன் செய்தும் அவரது அம்மா நம்பருக்கு போன் போகவில்லை.

கோவை: நகை காணவில்லை எனப் புகாரளித்த பெண் தற்கொலை; விசாரணையில் அதிர்ச்சித் தகவல்!

இதையடுத்து அருகேயுள்ள வீட்டில் வசிப்பவருக்கு போன் செய்து, ``பல முறை போன் செய்தும் அம்மா போன் போக மாட்டேங்குது கொஞ்சம் என்னன்னு பார்த்துட்டு அம்மாவைப் பேசச் சொல்லுங்க’’ என்று கூறியிருக்கிறார். பின்னர் அருகில் வசிப்பவர் தகவல் சொல்வதற்காக ஜோஸ்பின் மேரி வீட்டுக்குச் சென்றிருக்கிறார். வீட்டினுள் சோபாவில் ஜோஸ்பின் மேரி இறந்தநிலையில் கிடந்திருக்கிறார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தவர், உடனடியாக பிராங்க்ளினுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவரும் உடனடியாக மதுரையிலிருந்து புறப்பட்டு தஞ்சாவூர் வந்தார்.

தனது அம்மாவுக்கு அடிக்கடி ஃபிட்ஸ் வரும். அன்றைக்கும் ஃபிட்ஸ் வந்ததால் இறந்திருக்கலாம் என பிராங்க்ளின் முதலில் நினைத்தார். ஆனால் தனது அம்மா அணிந்திருந்த 5 சவரன் செயின், வளையல் உள்ளிட்ட தங்க நகைகள் மற்றும் அம்மா வைத்திருந்த செல்போன் ஆகியவற்றைக் காணவில்லை. இதனால் சந்தேகமடைந்த பிராங்க்ளின் அம்மா சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி விசாரணை நடத்த வேண்டும் என போலீஸில் புகார் கொடுத்தார்.

கணவர் யோபேல் விக்டர்
கணவர் யோபேல் விக்டர்

இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீஸார் ஜோஸ்பின் மேரியின் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். ஜோஸ்பின் மேரியின் உடல் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல்கூறாய்வு செய்யப்பட்டது. இதில் ஜோஸ்பின் மேரி கொலை செய்யப்பட்டு இறந்திருப்பதாக அறிக்கை வந்தது. இதையடுத்து ஜோஸ்பின் மேரி வீட்டில், வீட்டு வேலை பார்த்துவந்த மனோஜிப்பட்டியைச் சேர்ந்த ஆரோக்கிய டென்சி (34) என்ற பெண்ணிடம் போலீஸார் விசாரித்தனர். இதில் நகைக்காக ஜோஸ்பின் மேரி கொலை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து போலீஸ் தரப்பில் விசாரித்தோம். ``ஆரோக்கிய டென்சி சுமார் ஐந்து மாதங்களாக ஜோஸ்பின் மேரி வீட்டில் வீட்டு வேலை செய்துவந்துள்ளார். சம்பவத்தன்று ஜோஸ்பின் மேரிக்கு கழுத்துவலி ஏற்பட்டுள்ளது. அப்போது ஆரோக்கிய டென்சியிடம் கழுத்துப் பகுதியை அமுக்கச் சொல்லியிருக்கிறார். இதைப் பயன்படுத்திக்கொண்ட அவர், ஜோஸ்பின் மேரி கழுத்தில் இருந்த ஐந்து பவுன் தங்க செயினைக் கழற்றியிருக்கிறார்.

நாங்குநேரி: மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்; நகைக்காக மருமகனே கொலை செய்த கொடூரம்!

`ஏன் செயினைக் கழட்டுறே’ என்று கேட்டு ஜோஸ்பின் மேரி சத்தம் போட்டிருக்கிறார். இதையடுத்து கழுத்தை நெரித்து, வாயில் துணியை வைத்து திணித்து கொலை செய்ததுடன் கழுத்தில் இருந்த செயின், வளையல், ஏ.டி.எம் கார்டு ஆகியவற்றை எடுத்துகொண்டதுடன் ஜோஸ்பின் மேரி செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்து தண்ணீர் டேங்க்கில் போட்டுவிட்டு தன் கணவரை வரவைத்து அவருடன் டூ வீலரில் தப்பிச் சென்றுவிட்டார்.

இதில் வேடிக்கை என்னவென்றால் யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க, ஜோஸ்பின் மேரி உடலைப் பார்த்து ஆரோக்கிய டென்சி கதறி அழுது நடித்துள்ளார். தனக்குக் கடன் இருப்பதாகவும், அதற்காக செயினை எடுக்கும்போது கொலை செய்துவிட்டதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஆரோக்கிய டென்சி மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த அவரின் கணவர் யோபேல் விக்டர் என்கிற யோகேஷ் ஆகிய இருவரையும் கைதுசெய்தோம்’’ என்று தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு