திருப்பூர் மாவட்டம், அவிநாசியைச் சேர்ந்தவர் பழனிக்குமார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். இவரின் மனைவி சுபஶ்ரீ, ஒரு பனியன் கம்பெனியில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராகப் பணியாற்றிவருகிறார். இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.

இந்நிலையில், சுபஶ்ரீ கடந்த 11-ம் தேதி காலை கோவை பூண்டி அருகேயுள்ள ஈஷா யோகா மையத்துக்கு ஒரு வார கால பயிற்சிக்குச் சென்றிருக்கிறார். பயிற்சி முடிந்து 18-ம் தேதி அவர் வீடு திரும்பியிருக்க வேண்டும்.
ஆனால் சுபஶ்ரீ வரவில்லை. இது தொடர்பாக பழனிக்குமார் ஆலந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர். இது குறித்து பழனிக்குமார் கூறுகையில், "கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பே என் மனைவி ஈஷா யோகா மையம் நடத்திய ‘Silence’ பயிற்சியில் கலந்துகொண்டார்.

அதேபோலத்தான் இந்த முறையும் கலந்துகொண்டார். 11-ம் தேதி காலை 6 மணி அளவில் நான்தான் அவரை ஈஷா யோகா மையத்தில் விட்டேன்.
அவரை அழைத்து வருவதற்காக 18-ம் தேதி காலை மீண்டும் ஈஷா சென்றேன். 11 மணிக்கு பயிற்சி முடிந்து வெளியில் வந்திருக்க வேண்டும். அவர் வராததால், 3 மணி அளவில் நான் உள்ளே சென்று விசாரித்தேன். அப்போது வகுப்பு முடிந்து எல்லோரும் சென்றுவிட்டதாகக் கூறினர்.

அங்கிருந்த சிசிடிவி-யை ஆய்வுசெய்ததில், என் மனைவி காலை 9:30 மணிக்கு வகுப்பு முடிந்து சர்ப்ப வாசல் வழியாக வெளியே சென்றிருக்கிறார். எனது செல்போனுக்கு ஒரு புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்திருந்தது. எடுக்க முடியாததால் மீண்டும் அந்த எண்ணுக்கு நான் அழைத்தேன்.
அதில் பேசியவர், ‘என் கணவருக்குப் பேச வேண்டும் என்று ஒரு பெண் என்னிடம் போன் வாங்கினார். போன் எடுக்காததால் திருப்பிக் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டதாகக் கூறினார். மேலும் என் மனைவி ஒரு காரில் லிஃப்ட் கேட்டு, செம்மேடு முட்டத்துவயல் பகுதியில் இறங்கியிருக்கிறார்.

அதன் பிறகு அவரை யாரும் பார்த்ததாகத் தெரியவில்லை. அக்கம் பக்கம் யாரிடம் கேட்டும் என் மனைவியைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. அதனால்தான் போலீஸில் புகார் அளித்துள்ளேன்” என்றார்.
பயிற்சிக்காக ஈஷா யோகா மையம் சென்று சுபஶ்ரீ, கையில் ஒரு பை, செல்போன் ஆகியவற்றை எடுத்துச் சென்றிருக்கிறார். இந்நிலையில் வெளியே வரும்போது கையில் எதுவும் இல்லாமல் வெள்ளை நிற உடையில் சுபஶ்ரீ சாலையில் ஓடும் சிசிடிவி காட்சி ஒன்று வெளியாகியிருக்கிறது.

சுபஶ்ரீ எதற்காக அவசரமாக வெளியில் ஓடினார், அவர் எங்கே சென்றார் என போலீஸார் விசாரித்துவருகின்றனர்.