Published:Updated:

வேலூர்: `என்னையும் மகளையும் சித்ரவதை செய்கிறார்கள்!’ - போலீஸ் மீது புகார் வாசிக்கும் பெண்

ஷாலினி
ஷாலினி

‘‘கணவர் எங்கு இருக்கிறார் என்றே எனக்குத் தெரியாது. அவருக்கும் எனக்கும் தொடர்பே இல்லை’’ என்கிறார் ஜானியின் மனைவி ஷாலினி. 

வேலூரை நடுங்கவைக்கும் பிரபல ரௌடி ஜானி, 2018-ம் ஆண்டு முதல் தலைமறைவாக இருக்கிறார். இந்த நிலையில், ஜானியின் மனைவி ஷாலினி, ‘‘என் கணவரைத் தேடுகிறேன் என்று சொல்லி என்னையும் என் குழந்தையையும் சித்ரவதை செய்கிறார்கள்’’ என்று வேலூர் போலீஸுக்கு எதிராக பகீர் புகார் கிளப்பியிருக்கிறார்.

இதையடுத்து மதுரையில் இயங்கி வரும் காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கம் ஷாலினிக்கு ஆதரவு குரல் கொடுத்துள்ளது. ஜூலை 30-ம் தேதியன்று போலீஸாரைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினரும் வேலூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஜானி
ஜானி

இதுதொடர்பாக திருமாவளவனும் கூட்டியக்கத்தினரும் தனித்தனியே விடுத்திருக்கும் அறிக்கைகளில், ``காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் புகழ் உள்ளிட்ட போலீஸார் ஷாலினியையும் 9 வயது மகளையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று சித்ரவதை செய்துள்ளனர். ஷாலினியை லத்தியால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். 2018-ல் பதிவான வழக்கு ஒன்றில், ஷாலினியை வேண்டுமென்றே இணைத்துச் சிறைக்கு அனுப்பியிருக்கிறார்கள்.

குற்றவியல் நடுவரிடம், சட்டவிரோத காவல் சித்ரவதை குறித்து ஷாலினி சொன்னதால், மேலும் ஒரு பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். காவல்துறையினர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உயர் நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய ஷாலினி, ‘‘கணவர் எங்கு இருக்கிறார் என்றே எனக்குத் தெரியாது. அவருக்கும் எனக்கும் தொடர்பே இல்லை. ஆனால், தேவை இல்லாமல், எங்களைச் சித்ரவதை செய்கிறார்கள். மகளின் படிப்பு பாழாகி வருகிறது. எங்களுக்கு உரிய நீதி வேண்டும்’’ என்று சொன்னார்.

ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்

‌வேலூர் போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ஷாலினி சொல்லும் குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை. திருமாவளவன் சமூகரீதியாக ஜானி விவகாரத்தில் தலையிடுகிறார். ரௌடியிசத்தைக் கட்டுப்படுத்துவது, காவல்துறையின் கடமை. அதைச் சரியாகத்தான் நாங்கள் செய்கிறோம். நாங்கள் தவறு செய்திருந்தால், ஆதாரத்துடன் உயர் அதிகாரிகளைச் சந்தித்து புகார் கொடுக்கலாம்’’ என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு