Published:Updated:

`நெஞ்சில் இரண்டு; காலில் ஒன்று!' - ரவுடி வல்லரசு என்கவுன்டர் பின்னணி

எஸ்.மகேஷ்
`நெஞ்சில் இரண்டு; காலில் ஒன்று!' - ரவுடி வல்லரசு என்கவுன்டர் பின்னணி
`நெஞ்சில் இரண்டு; காலில் ஒன்று!' - ரவுடி வல்லரசு என்கவுன்டர் பின்னணி

சென்னை மாதவரத்தில் இன்று அதிகாலை ரவுடி வல்லரசு போலீஸாரால் என்கவுன்டர் செய்யப்பட்டார். அதன்பின்னணியில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

`நெஞ்சில் இரண்டு; காலில் ஒன்று!' - ரவுடி வல்லரசு என்கவுன்டர் பின்னணி

சென்னை மாதவரம் பஸ் நிலையத்தின் அருகில் உள்ள மைதானம் பரபரப்பாகவே காணப்பட்டது. ரவடி வல்லரசுவை போலீஸார் என்கவுன்டர் செய்துவிட்டதாக வாக்கிடாக்கி அலறின. சென்னையில் என்கவுன்டர் நடந்து சில ஆண்டுகள் கடந்தநிலையில் இன்று மாதவரத்தில் போலீஸார் துப்பாக்கியைத் தூக்கியதன் பின்னணியில் சில காரணங்கள் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``வியாசர்பாடியில் தங்கியிருந்த வல்லரசு, தற்போது மாதவரத்தில் குடியிருக்கிறார். இவர் மீது கொலை வழக்கு, கொலை முயற்சி, அடி தடி, செயின் பறிப்பு என 8 வழக்குகள் நிலுவையில் உள்ளன. வல்லரசு,  பிரபல ரவுடி ஒருவரின் கூட்டாளி.  வல்லரசுவை போலீஸார் தேடிவந்தநிலையில் வியாசர்பாடி காவல் நிலையத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தலைமைக் காவலர் பவுன்ராஜ் மற்றும் காவலர் ரமேஷ் ஆகியோர் வல்லரசு பதுங்கி இருந்த இடத்துக்குச் சென்றனர். அப்போது ரவுடி வல்லரசு, கதிரவன், கார்த்திக் ஆகியோர் அங்கு இருந்தனர். ரவுடி கும்பலுக்கும் காவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்தச் சமயத்தில்தான் வல்லரசு, காவலர் ரமேஷை வெட்ட முயன்றுள்ளார். அவர் தப்பிவிட அந்தக் கத்தி தலைமைக் காவலர் பவுன்ராஜின் தலையில் வெட்டு விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே பவுன்ராஜ் சரிந்தார். 

`நெஞ்சில் இரண்டு; காலில் ஒன்று!' - ரவுடி வல்லரசு என்கவுன்டர் பின்னணி

இதையடுத்து வல்லரசு மற்றும் அவரின் கூட்டாளிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பவுன்ராஜை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தோம். அங்கு அவருக்கு 28 தையல்கள் போடப்பட்டுள்ளன. உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் இருப்பதால் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. ரவுடி வல்லரசுவைப் பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் ரவி, ஜார்ஜ் மில்லர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரேம்குமார், தீபன் மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. 

மாதவரம் பஸ் நிலையம் அருகில் உள்ள மைதானத்தில் ரவுடி வல்லரசு பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்தது. உடனடியாக தனிப்படை போலீஸார் அங்கு சென்றனர். அப்போது நடந்த மோதலில் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர்கள் ரவியும் ஜார்ஜ் மில்லரும் வல்லரசுவை சரணடையுமாறு எச்சரிக்கை விடுத்தனர். ஆனால், அவரோ போலீஸாரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பிச் செல்லும் நோக்கத்தில் இருந்தார். 

`நெஞ்சில் இரண்டு; காலில் ஒன்று!' - ரவுடி வல்லரசு என்கவுன்டர் பின்னணி

ஒருகட்டத்தில் தனிப்படை போலீஸாரை மீண்டும் ரவுடி வல்லரசு வெட்ட முயன்றார். அப்போது தற்பாதுகாப்புக்காக இன்ஸ்பெக்டர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் இரண்டு குண்டுகள் வல்லரசுவின் நெஞ்சுப் பகுதியிலும், ஒரு குண்டு இடது கால் தொடைப்பகுதியிலும் துளைத்தன. கீழே விழுந்த ரவுடி வல்லரசுவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கு அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். என்கவுன்டர் குறித்த தகவலை உயரதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது" என்றனர். 

வல்லரசுவின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த என்கவுன்டர் சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் விஜயலட்சுமி விசாரணை நடத்தி வருகிறார். சம்பவம் நடந்த இடத்தை கூடுதல் கமிஷனர் தினகரன் ஆய்வு நடத்தினார். ரவுடி வல்லரசு என்கவுன்டர் சம்பவத்தில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் ரவி, வேளச்சேரி வங்கிக் கொள்ளையர்கள் என்கவுன்டர் சம்பவத்திலும் பங்கேற்றவர். 2012ம் ஆண்டு நடந்த வங்கிக் கொள்ளையர்கள் என்கவுன்டர் சம்பவத்துக்குப் பிறகு அதாவது 7 ஆண்டுகளுக்குப் பின்னர் துப்பாக்கியைக் கையில் எடுத்துள்ளார் இன்ஸ்பெக்டர் ரவி என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள். 

`நெஞ்சில் இரண்டு; காலில் ஒன்று!' - ரவுடி வல்லரசு என்கவுன்டர் பின்னணி

என்கவுன்டர் குறித்து போலீஸாரிடம் கேட்டதற்கு, ரவுடி வல்லரசு மற்றும் அவரின் கூட்டாளிகளைப் பிடிக்க தலைமைக் காவலர் பவுன்ராஜ் சென்றபோது அவரை வெட்டிவிட்டு தப்பி ஓடியது ரவுடி கும்பல். இதில் வல்லரசுவைத் தவிர மற்ற இருவரையும் நேற்றிரவு போலீஸார் பிடித்தனர். அவர்களிடம் விசாரித்தபோதுதான் மாதவரம் பஸ் நிலையத்தின் பின்னால் உள்ள மைதானத்தில் வல்லரசு பதுங்கிய தகவல் போலீஸாருக்குக் கிடைத்தது. அங்கு அவரைப் பிடிக்கச் சென்றபோது மீண்டும் ரவுடி வல்லரசு போலீஸாரை வெட்டியுள்ளார். இதனால்தான் என்கவுன்டர் செய்யப்பட்டார் வல்லரசு. 

தலைமைக் காவலர் பவுன்ராஜ், தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். 2009-ம் ஆண்டு தமிழகக் காவல்துறையில் காவலராகப் பணியில் சேர்ந்தார். இவரின் சகோதர் சிறைத்துறையில் பணியாற்றுகிறார். பவுன்ராஜிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் சந்தித்தார். அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். 

`நெஞ்சில் இரண்டு; காலில் ஒன்று!' - ரவுடி வல்லரசு என்கவுன்டர் பின்னணி

ரவுடி வல்லரசு என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது திட்டமிட்ட கொலை என்று ரவுடி வல்லரசு தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர். அவர் தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், `என்கவுன்டர் நடந்த இடத்தில் ரத்தத் தூளிகள் இல்லை. இதனால் இந்த என்கவுன்டர் சம்பவத்தில் எங்களுக்கு பல சந்தேகங்கள் உள்ளன'' எனத் தெரிவித்தனர். ஆனால், இது, என்கவுன்டர்தான் என்று போலீஸார் கூறுகின்றனர்.

மாஜிஸ்திரேட் விசாரணையில் என்ன நடந்தது என்று தெரியவரும்.

Vikatan