Published:Updated:

` ஏமாற்றத் தெரிந்தது; தப்பிக்க வழி தெரியல!' - `நவரத்தினக் கல்' திருடன் தானாகச் சிக்கிய ருசிகரத் தகவல்

எஸ்.மகேஷ்
` ஏமாற்றத் தெரிந்தது; தப்பிக்க வழி தெரியல!' - `நவரத்தினக் கல்' திருடன் தானாகச் சிக்கிய ருசிகரத் தகவல்
` ஏமாற்றத் தெரிந்தது; தப்பிக்க வழி தெரியல!' - `நவரத்தினக் கல்' திருடன் தானாகச் சிக்கிய ருசிகரத் தகவல்

சென்னை தி.நகர் பகுதியில் டீக்கடையில் அமர்ந்திருந்த ஒருவர், போலீஸைப் பார்த்ததும் தலைதெறிக்க ஓடினார். அவரை பொதுமக்கள் உதவியுடன் பிடித்த போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். போலீஸ் விசாரணையில் பிடிப்பட்டவர் நவரத்தின கற்களைத் திருடியவர் என்று தெரிந்தது.

` ஏமாற்றத் தெரிந்தது; தப்பிக்க வழி தெரியல!' - `நவரத்தினக் கல்' திருடன் தானாகச் சிக்கிய ருசிகரத் தகவல்

தேனி மாவட்டம் முல்லை நகர், அரண்மனைப்புதுாரைச் சேர்ந்தவர் செல்வம். இவர் கடந்த 20 ஆண்டுகளாக நவரத்தின கற்கள் விற்பனை செய்து வருகிறார். சில நாள்களுக்குமுன் மதுரையைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர், செல்வத்திடம் பேசினார். அப்போது, 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான நவரத்தின கற்கள் வேண்டும் எனச் செல்வத்திடம் பாஸ்கரன் கேட்டுள்ளார். அதற்கு சம்மதம் தெரிவித்த செல்வம், நவரத்தின கற்களுக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறியுள்ளார். இந்தநிலையில், பாஸ்கருக்கு போன் செய்த செல்வம், நீங்கள் கேட்ட நவரத்தின கற்கள் தயாராக உள்ளன. அதை வாங்க பணத்துடன் தி.நகருக்கு வாருங்கள் என்று கூறியுள்ளார். 

இதையடுத்து பாஸ்கர் மற்றும் அவரின் நண்பர்கள் செல்வம் கூறிய விடுதிக்குச் சென்றார். அவர்களிடம் நவரத்தின கற்களை பாஸ்கர் காண்பித்தார். அதைப் பார்த்த பாஸ்கர் மற்றும் அவரின் நண்பர்கள் விலையைக் குறைத்துத் தரும்படி பேரம் பேசியுள்ளனர். இந்தச் சமயத்தில் கழிவறைக்குச் சென்றார் செல்வம். அப்போது, மேஜையின் மேல் இருந்த நவரத்தின கற்களை எடுத்துக்கொண்டு பாஸ்கர் மற்றும் அவரின் நண்பர்கள் எஸ்கேப் ஆகினர்.  

கழிவறையிலிருந்து வெளியில் வந்த செல்வத்துக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. மேஜையின் மேல் இருந்த நவரத்தின கற்களும், பாஸ்கர் மற்றும் அவரின் நண்பர்களும் அங்கு இல்லை. அவர்களை விடுதியில் பல இடங்களில் தேடினார். ஆனால் அவர்கள் அங்கு இல்லை. இதையடுத்து போலீஸாருக்கும் விடுதி ஊழியர்களுக்கும் செல்வம் தகவல் தெரிவித்தார்.  விடுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது பாஸ்கர் மற்றும் அவரின் நண்பர்கள் அங்கிருந்து அவசர அவசரமாக வெளியில் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. 

தகவல் அறிந்ததும் மாம்பலம் போலீஸார் சம்பந்தப்பட்ட விடுதிக்கு வந்து விசாரித்தனர். சி.சி.டி.வி. கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். இதையடுத்து 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான நவரத்தின கற்களோடு மாயமான பாஸ்கர் மற்றும் அவரின் நண்பர்களை போலீஸார் பல இடங்களில் தேடினர். பாஸ்கர் மற்றும் அவரின் நண்பர்களின் செல்போன்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால் அவர்கள் பதுங்கியிருக்கும் இடத்தை போலீஸாரால் கண்டுப்பிடிக்க முடியவில்லை. 

` ஏமாற்றத் தெரிந்தது; தப்பிக்க வழி தெரியல!' - `நவரத்தினக் கல்' திருடன் தானாகச் சிக்கிய ருசிகரத் தகவல்

இந்தச் சமயத்தில் ரோந்து வாகனத்தில் போலீஸார் தி.நகர் பகுதியில் சென்றனர். அப்போது ஒரு கடையில் டீ குடிக்க ரோந்து போலீஸார் சென்றனர். அந்தக் கடையில் அமர்ந்திருந்த நபர், போலீஸ், வாகனத்திலிருந்து இறங்கி கடைக்கு வருவதை பார்த்துக் கொண்டிருந்தார். டீக்கடையின் அருகே போலீஸார் வந்ததும் அந்த நபர் அங்கிருந்து தலைதெறிக்க ஓட்டம் பிடித்தார். இதைப்பார்த்ததும் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக அந்த நபரை போலீஸார் விரட்டிச் சென்று பிடித்தனர். அப்போது அந்த நபர், `என்னை விட்டுவிடுங்கள், நவரத்தின கற்களைக் கொடுத்துவிடுகிறேன்' என்று பயத்தில் உளறினார். இதனால் போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். தங்களிடம் சிக்கிய நபரிடம் `நீ யார்? எதற்காக எங்களைப்பார்த்ததும் ஓடினாய்? என விசாரித்தனர். விசாரணையில் அந்தநபர்தான் செல்வத்திடமிருந்து நவரத்தின கற்களைத் திருடிச் சென்ற பாஸ்கர் என போலீஸாருக்கு தெரியவந்தது. 

அதன்பிறகுதான் போலீஸாருக்கே நாம் பிடித்தது நவரத்தின கற்கள் திருடன் பாஸ்கர் எனத் தெரிந்ததும் மாம்பலம் காவல் நிலையத்துக்கு போனில் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவரிடமிருந்த 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான நவரத்தின கற்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர், பாஸ்கரை மாம்பலம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பாஸ்கர் பிடிப்பட்ட தகவல் கிடைத்ததும் காவல் நிலையத்துக்கு செல்வம் வந்தார். விசாரணைக்குப் பிறகு பாஸ்கர், சிறையில் அடைக்கப்பட்டார். அவரோடு வந்தவர்களை போலீஸார் தேடிவருகின்றனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ப்ளூ சபையர் எனப்படும் நவரத்தின கற்களைத்தான் செல்வத்திடமிருந்து பாஸ்கர் திருடிச் சென்றுள்ளார். அவரைப் பல இடங்களில் நாங்கள் தேடிய சமயத்தில் ரோந்து போலீஸாரிடம் பாஸ்கர் சிக்கிக் கொண்டார். பொதுமக்களின் உதவியோடு அவரை நாங்கள் பிடித்துள்ளோம். பாஸ்கர் குறித்து விசாரணை நடத்திவருகிறோம். அவரோடு வந்தவர்களின் விவரங்களைச் சேகரித்துள்ளோம். விரைவில் அவர்களையும் கைது செய்வோம்" என்றனர். 

Vikatan