Published:Updated:

`முதலில் பாராட்டு, அடுத்து சிறை!'- மணப்பெண்ணிடம் நல்லவன்போல நடித்த திருடன் சிக்கியது எப்படி?

எஸ்.மகேஷ்
`முதலில் பாராட்டு, அடுத்து சிறை!'- மணப்பெண்ணிடம் நல்லவன்போல நடித்த திருடன் சிக்கியது எப்படி?
`முதலில் பாராட்டு, அடுத்து சிறை!'- மணப்பெண்ணிடம் நல்லவன்போல நடித்த திருடன் சிக்கியது எப்படி?

சென்னை புரசைவாக்கத்தில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், மணப்பெண்ணின் கைப்பையைத் திருடிய திருடன், நகைகளை எடுத்துக்கொண்டு வெறும் பையை திரும்பக் கொடுத்துள்ளான். சி.சி.டி.வி கேமரா உதவியால் அந்தத் திருடனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

`முதலில் பாராட்டு, அடுத்து சிறை!'- மணப்பெண்ணிடம் நல்லவன்போல நடித்த திருடன் சிக்கியது எப்படி?

சென்னை பல்லாவரம், பம்மல், பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் கிரேசி எலிசபெத். இவரின் மகள் தபிதா ஜெபராணிக்கு திருமணம் நடத்த குடும்பத்தினர் முடிவுசெய்தனர். அதன்படி கடந்த 17-ம் தேதி, புரசைவாக்கம் வடமலை தெருவில் உள்ள சர்ச்சில் மணப்பெண் தபிதா ஜெபராணிக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதனால், திருமண வீட்டினர் பிஸியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தனர். வரவேற்பு நிகழ்ச்சிக்கு உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் வந்திருந்தனர். 

இந்தச் சமயத்தில், மணப்பெண்ணின் கைப்பை திடீரென மாயமானது. இந்தத் தகவல் காட்டுத் தீ போல பரவியது. உடனே வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அனைவரும் கைப்பையைத் தேடினர். அப்போது, மணப்பெண்ணின் கைப்பையை ஒருவர் கையில் வைத்திருந்தார். அவர், அதை மணப்பெண்ணிடம்  கொடுத்தார். இந்தப் பை கீழே கிடந்ததாகவும் அவர் கூறினார். இதனால் அந்த நபரை மணப்பெண்ணும் மணப்பெண்ணின்  வீட்டினரும் பாராட்டினர். பாராட்டு மழையில் நனைந்த அந்த நபர், கம்பீரத்துடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், மணப்பெண் வீட்டினர் வீட்டுக்குச் சென்றுவிட்டனர். 

அங்கு வைத்து கைப்பையைத் திறந்துபார்த்த மணப்பெண், கடும் அதிர்ச்சியடைந்தார். பையிலிருந்த செயின், கம்மல் கொலுசு ஆகியவற்றைக் காணவில்லை. இதையடுத்து, மணப்பெண்ணின் அம்மா கிரேசி எலிசபெத் வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், கைப்பையில் வைத்திருந்த 4 சவரன் நகைகளும் ஒரு ஜோடி வெள்ளிக்கொலுசும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திருடு போய்விட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். வரவேற்பு நிகழ்ச்சி நடந்த இடத்தில் உள்ள சி.சி.டி.வி கேமராவை போலீஸார் ஆய்வுசெய்தனர். அப்போது, மணப்பெண்ணிடம் கைப்பையைக் கொடுத்தவர்தான் அதைத் திருடியதும் பிறகு, பையிலிருந்த நகைகளை எடுத்துவிட்டு, நல்லவன்போல பையை மணப்பெண்ணிடம் தைரியமாகத் திரும்பக் கொடுப்பதும் சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியிருந்தது. 

`முதலில் பாராட்டு, அடுத்து சிறை!'- மணப்பெண்ணிடம் நல்லவன்போல நடித்த திருடன் சிக்கியது எப்படி?

அந்த நபர் யார் என்று மணப்பெண்ணின் வீட்டினரிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது, இவர்தான் கைப்பையை என்னிடம் கொடுத்தவர் என்று மணப்பெண் கூறினார். ஆனால், அவர் யாரென்று தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தியதில், மணப்பெண்ணிடம் நல்லவன் போல நடித்த நகைகளைத் திருடியவர் குறித்த விவரம் தெரியவந்தது. உடனடியாக அவரைப் பிடித்து நகைகளை போலீஸார் பறிமுதல்செய்தனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``மணப்பெண்ணின் கைப்பையைத் திருடியவர், ஓட்டேரியைச் சேர்ந்த விமல் (39) என்று தெரியவந்தது. உடனடியாக அவரைப் பிடித்து  3 சவரன் செயின், ஒரு சவரன் கம்மல், ஒரு ஜோடி கொலுசு ஆகியவற்றைப் பறிமுதல் செய்தோம். விமல் மீது ஓட்டேரி காவல் நிலையத்தில் சி.சி.டி.வி கேமராவை உடைத்த வழக்கு நிலுவையில் உள்ளது. திருமண நிகழ்ச்சிக்குச் சென்ற விமல், மணப்பெண் தபிதா ஜெபராணியின் கவனத்தை திசைதிருப்பி கைப்பையை எடுத்துள்ளார்.

பிறகு, அந்தப் பையை எல்லோரும் தேடியபோது மாட்டிக்கொள்ளாமல் இருக்க நகைகளை எடுத்துவிட்டு அதை திரும்பக் கொடுத்துள்ளார். அப்போதே மணப்பெண்ணின் வீட்டினர் கைப்பையைத் திறந்து பார்த்திருந்தால், விமலைப் பிடித்திருக்கலாம். திருமண பிஸியிலும் கைப்பை கிடைத்த சந்தோஷத்திலும் மணப்பெண் தபிதா ஜெபராணி, கைப்பையை எடுத்துக் கொடுத்த விமலை பாராட்டி அனுப்பியுள்ளார். சி.சி.டி.வி கேமரா உதவியால் விமலைப் பிடித்துவிட்டோம். எனவே, திருமண வீட்டினர் விலை உயர்ந்த பொருள்களைக் கவனமாக பாதுகாத்துக்கொள்ள வேண்டும். திருமண வீடுகளில் திருடுவதற்கென தனி டீம் உள்ளது. தொடர்ந்து விமலிடம் விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர். 

Vikatan