Published:Updated:

`ஒரே காரு ஓகோன்னு வாழ்க்கை!'- திருடர்களின் அதிர்ச்சி வாக்குமூலம் 

எஸ்.மகேஷ்
`ஒரே காரு ஓகோன்னு வாழ்க்கை!'- திருடர்களின் அதிர்ச்சி வாக்குமூலம் 
`ஒரே காரு ஓகோன்னு வாழ்க்கை!'- திருடர்களின் அதிர்ச்சி வாக்குமூலம் 

சென்னை கானத்தூர் காவல் நிலையத்தில் சிக்கிய கார் திருடர்களின் வாக்குமூலம் போலீஸாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. விற்ற காரை திருடி மீண்டும் அதை விற்றதாக திருடர்கள் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளனர். 

`ஒரே காரு ஓகோன்னு வாழ்க்கை!'- திருடர்களின் அதிர்ச்சி வாக்குமூலம் 

சென்னை, மதுரவாயலைச் சேர்ந்தவர் தணிகை (36). சினிமா பட தயாரிப்பாளர். இவர் கானத்தூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில் தன்னுடைய கார், திருட்டு போய்விட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். தணிகை கொடுத்த கார் விவரங்கள் அடிப்படையில் போலீஸார் சிசிடிவி கேமரா உதவியுடன் திருடர்கள் குறித்த விவரங்களைச் சேகரித்தனர். அப்போது திருடர்கள் குறித்து முக்கிய தகவல்கள் போலீஸாருக்கு கிடைத்தன. அதன்படி, நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த கணேசன், நீலகிரியைச் சேர்ந்த பாரதி, சத்யா மற்றும் ரிச்சர்டு ஆகியோரை போலீஸார் பிடித்தனர். அவர்களிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சினிமா தயாரிப்பாளர் தணிகை, கடந்த 7-ம் தேதி கணேசன், பாரதி, சத்யா, ரிச்சர்டு ஆகியோரிடம் சொகுசு கார் ஒன்றை 6 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார். அந்த காரில் கடந்த 10-ம் தேதி கானத்தூரில் உள்ள ரிசார்ட்டுக்கு தணிகை சென்றுள்ளார். ரிசார்ட்டில் காரை நிறுத்தியுள்ளார். மறுநாள் அவரின் கார், திருட்டு போயிருந்தது. இதனால் எங்களிடம் அவர் புகார் கொடுத்தார். அதன்பேரில் ரிசார்ட்டில் உள்ள சிசிடிவி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தோம். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள், காரை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அந்த சிசிடிவி பதிவுகளை தணிகையிடம் காண்பித்தபோது காரைத் திருடியவர்கள்தான் தன்னிடம் காரை விற்றார்கள் என்று தணிகை எங்களிடம் கூறினார். இதையடுத்து, காரைத் திருடிய கும்பலை மடக்கிப்பிடித்தோம். காரையும் பறிமுதல் செய்துள்ளோம்" என்றனர். 

கார் திருடர்கள் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ``தணிகையிடம் விற்ற காரை நெல்லையைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து விலைக்கு வாங்கினோம். அந்த காரை நவநீதகிருஷ்ணன் என்பவருக்கு 6 லட்சம் ரூபாய்க்கு விற்றோம். பிறகு அவருக்குத் தெரியாமல் அந்தக் காரைத் திருடினோம். பிறகு வாட்ஸ்அப் மூலம் கார் விற்பனைக்கு உள்ளது என்று விளம்பரப்படுத்தினோம். அதைப் பார்த்து தணிகை எங்களிடம் காரை விலைக்கு வாங்கினார். தற்போது கார், தணிகையிடம் உள்ளதால் நவநீதகிருஷ்ணன் போலீஸில் புகார் கொடுத்தாலும் அவர்தான் சிக்குவார் என்று கருதினோம். இதற்கிடையில் நவநீதகிருஷ்ணன் போலீஸில் புகார் கொடுக்கவுள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. இதனால்தான் தணிகையிடமிருந்து காரைத் திருடினோம்" என்று கூறியுள்ளனர். 

ஒரே காரை நவநீதகிருஷ்ணன், தணிகை ஆகியோருக்கு விற்ற இந்தக் கும்பலின் பின்னணி குறித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

Vikatan