Published:Updated:

`திருடுவது எப்படி?'- பெண்ணின் ஐடியாவைக் கேட்டு கதிகலங்கிய போலீஸ்!

எம்.திலீபன்
`திருடுவது எப்படி?'- பெண்ணின் ஐடியாவைக் கேட்டு கதிகலங்கிய போலீஸ்!
`திருடுவது எப்படி?'- பெண்ணின் ஐடியாவைக் கேட்டு கதிகலங்கிய போலீஸ்!

எதிர் வீட்டில் நகை, பணம் இருப்பதைத் தெரிந்துகொண்ட ஒரு பெண் அவற்றைக் கொள்ளையடிக்க, அவர் எடுத்த முயற்சியைப் பார்த்து, `இப்பெண்ணுக்கு இப்படிப்பட்ட மூளையா' என காவல்துறையினரே கதிகலங்கிப் போயுள்ளனர். இந்த வழக்கைத் திறம்படச் செயல்பட்டு குற்றவாளிகளைக் கைது செய்த காவல்துறையினரை நேரில் வரவைத்து வெகுவாகப் பாராட்டினார் அரியலூர் எஸ்.பி சீனிவாசன்.

`திருடுவது எப்படி?'- பெண்ணின் ஐடியாவைக் கேட்டு கதிகலங்கிய போலீஸ்!

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள மேல நெடுவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் ஆண்டிமடம் தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கத்தில் செயலாளராகப் பணிபுரிந்தவர். மூன்று மாதத்துக்கு முன்பு ஓய்வுபெற்ற இவர், தனது வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவரது ஊரில் மாரியம்மன் கோயில் திருவிழா மே மாதம் ஐந்து நாள்கள் நடைபெற்றது. அதற்காக ராமச்சந்திரன் தன்னுடைய மனைவி மற்றும் மகள்களை சாமி கும்பிடுவதற்காக முன்னரே அனுப்பிவிட்டுள்ளார். ராமச்சந்திரன் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். இரவு 9 மணியளவில் சாமிக்கு தீபாராதனை நடைபெறும் நேரத்தில் அவரின் மகள் தந்தைக்கு போன் செய்து கோயிலுக்கு அழைத்துள்ளார். இதனால் வீட்டைப் பூட்டிவிட்டு கோயிலுக்குச் சென்றுவிட்டார். சாமி கும்பிட்டுவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உள்பக்கம் தாழிடப்பட்டிருந்தது.

பின்னர் பின்பக்க கதவு வழியாகச் சென்று பார்த்தபோது கதவு திறந்துகிடந்தது. இரும்பு பீரோ உடைக்கப்பட்டுக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். வீட்டின் மேல்பகுதியில் உள்ள ஓட்டை பிரித்து உள்ளே இறங்கிய மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 60 பவுன் நகை மற்றும் 50,000 பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. அடுத்த மாதத்தில் அவரின் மகளுக்கு நடைபெற இருந்த திருமணத்துக்காக வாங்கி வைத்திருந்த நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளது அந்தக் கும்பல். இதைப் பார்த்த ராமச்சந்திரன் பதறிப்போய் ஆண்டிமடம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இவ்வழக்கு சம்பந்தமாக வசந்தி, ஹாஜாமுகைதீன், அசோக்குமார் ஆகிய 3 பேரையும் ஆண்டிமடம் காவல்துறையினர் கைது செய்து செய்துள்ளனர்.
 
இவர்கள் எப்படி சிக்கினார்கள் என இவ்வழக்கை விசாரித்து வரும் காவல்துறையினர் சிலரிடம் பேசினோம். ``இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்தோம். ராமச்சந்திரனின் வீட்டின் எதிர்புறம் வசிக்கும் சுரேஷ் என்பவரின் மனைவி வசந்தி மட்டும் முன்னுக்குப் பின் முரணான கருத்துகளைச் சொல்லிக்கொண்டே இருந்தார். அவரை எங்களது பாணியில் விசாரிக்கத் தொடங்கினோம். பின்பு அவரே ஒத்துக்கொண்டார். அதில், ராமச்சந்திரனின் ஓய்வூதியப் பணம் மற்றும் அவரின் மகளுக்குத் திருமணம் நடத்துவதற்காக நகைகளைச் சேர்த்து வைத்துள்ளதைத் தெரிந்துகொண்ட வசந்தி திட்டமிட்டு அவருடைய உறவினர்கள் துணையோடு கொள்ளையடிக்க திட்டமிட்டிருக்கிறார்.

பூட்டை உடைக்க இங்குள்ளவர்களைப் பயன்படுத்திக்கொண்டால் எப்படியும் மாட்டிக்கொள்வோம் என்று தெரிந்துகொண்டு கோயமுத்தூரிலிருந்து ஹாஜாமுகைதீன் என்பவரையும், இவரின் நண்பர் குனியமுத்தூரைச் சேர்ந்த அசோக்குமார் ஆகியோர் துணையுடன் ராமச்சந்திரன் கோயிலுக்குச் சென்றிருந்த நேரத்தில் மூன்று நாள்களாக திருட முயற்சி செய்திருக்கிறார்கள் முடியவில்லை. கடைசி நாளன்று அவர் சாமி கும்பிடப் போகும் நேரத்தில் ஓட்டை பிரித்து பணம் நகையைத் திட்டமிட்டுக் கொள்ளையடித்துள்ளனர்" என்று தெரிவித்தனர். இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக வசந்தி, காஜா முகைதீன், அசோக்குமார் ஆகிய 3 பேரையும் ஆண்டிமடம் போலீஸார் கைதுசெய்து அவர்களிடமிருந்து 20 பவுன் நகையை மீட்டனர். சிறப்பாக செயல்பட்ட போலீஸாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Vikatan