Published:Updated:

`போதைக்காக டாஸ்மாக்கைக் கொள்ளையடித்தோம்; கொலை செய்தோம்!' - போலீஸாரை அதிரவைத்த இளைஞர்கள்

சி.ய.ஆனந்தகுமார்
`போதைக்காக டாஸ்மாக்கைக் கொள்ளையடித்தோம்; கொலை செய்தோம்!' - போலீஸாரை அதிரவைத்த இளைஞர்கள்
`போதைக்காக டாஸ்மாக்கைக் கொள்ளையடித்தோம்; கொலை செய்தோம்!' - போலீஸாரை அதிரவைத்த இளைஞர்கள்
`போதைக்காக டாஸ்மாக்கைக் கொள்ளையடித்தோம்; கொலை செய்தோம்!' - போலீஸாரை அதிரவைத்த இளைஞர்கள்


திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்துள்ளது பூவாளூர் கிராமம். இந்த ஊரில் சிறுகனூர் சாலையில் ராஜா என்பவருக்குச் சொந்தமான கட்டடத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்தக் கடைக்கு பெருமாநல்லூர் வடக்கு புதுத் தெருவைச் சேர்ந்த பாலையா என்பவர் காவலாளியாக பணியாற்றி வந்தார். இவர் தினமும் இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரை பணியில் ஈடுபட்டு வந்தார். பணியில் இருந்த பாலையா கடந்த 20-ம் தேதி காலை, தலை, கழுத்து மற்றும் கைகளில் பலத்தக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டுப் பிணமாகக் கிடந்தார். அதை அவ்வழியாகச் சென்ற பாதசாரிகள் பார்த்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார் நடத்திய விசாரணையில், `பாலையா டாஸ்மாக் கடையில் ஒப்பந்த அடிப்படையில் தினக்கூலியாகப் பணியாற்றி வந்திருக்கிறார். அந்தக் கடையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்த கண்ணன் உள்ளிட்ட டாஸ்மாக் கடையின் பணியாளர்கள் சம்பவத்தின் முதல் நாள் இரவு 12 மணிவரை கணக்கு பார்த்ததாகவும் பிறகு அவர்கள் தங்களது வீடுகளுக்குச் சென்றுவிட்டதாகவும் தெரியவந்தது. இதையடுத்து பாலையா, வழக்கம்போல் இரவு நேரத்தில் காவல் பணியில் இருந்தார் என்றும் தெரியவந்தது. அதன்பிறகே கொலை சம்பவம் நடந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்த போலீஸார், பாலையாவைக் கொலை செய்த குற்றவாளிகளைப் பிடிப்பதற்கு லால்குடி டிஎஸ்பி ராஜசேகரன் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் லால்குடி முத்துகுமார், சிறுகனூர் ராஜா ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்தனர்.

தனிப்படை போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதனடிப்படையில் சிறுகனூர் அடுத்துள்ள நெடுங்குழு கிராமத்தைச் சேர்ந்த அசோக் குமார், செல்வம் மகன் சௌந்தரராஜன் மற்றும் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூரை அடுத்த அய்யனார்புரம் பகுதியைச் சேர்ந்த சந்துரு ஆகியோரைப் பிடித்து விசாரணை செய்தனர். அப்போது, அவர்கள் மூவரும் டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்க முயன்றதைத் தடுத்ததால் காவலாளியைக் கொலை செய்ததாக மூவரும் ஒப்புக்கொண்டனர். மேலும், மூவரும் இதற்கு முன்பு ஒரு டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்ததும் தெரியவந்தது.

`போதைக்காக டாஸ்மாக்கைக் கொள்ளையடித்தோம்; கொலை செய்தோம்!' - போலீஸாரை அதிரவைத்த இளைஞர்கள்

குற்றவாளிகள் மூவரும் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், `நாங்க மூன்று பேரும் சின்னச் சின்ன திருட்டுச் சம்பவங்களைச் செய்து வந்தோம். அதில் கிடைக்கும் பணத்தில் நாங்கள் மது வாங்கிக் குடித்து வந்தோம். நாங்கள் திருடும் பணத்தில் அதிகமாகச் சரக்குக்கே செலவானதால், இனி டாஸ்மாக் கடைகளை குறிவைத்துத் திருடினால் நமக்குச் சிக்கல் இருக்காது என முடிவு செய்தோம்.

அதையடுத்து, கடந்த சில வாரங்களுக்கு முன்பு பப்பாளி பகுதியிலிருந்த டாஸ்மாக் கடையில் 60,000 மதிப்புள்ள மது பாட்டில்களை கொள்ளையடித்தோம். அந்த மது பாட்டில்களை தச்சன்குறிச்சி வனப்பகுதியில் மறைத்து வைத்துக் குடித்து வந்தோம். அந்தச் சரக்கு முழுவதும் தீர்ந்துவிட்டதால், அடுத்து டாஸ்மாக் கடையைத் தேடி அலைந்தோம். அந்த வகையில் கடந்த 19-ம் தேதி இரவு திருப்பூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை அடிக்க முயற்சி செய்தோம்.

அப்போது சத்தம் கேட்டுக் கண்விழித்த காவலாளி பாலையா எங்களைத் தடுக்க முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த நாங்கள் இரும்புக் கம்பியால் அவரின் தலையில் தாக்கினோம். நாங்கள் தாக்கியதில் படுகாயமடைந்த காவலாளி பாலையா சம்பவ இடத்திலேயே இறந்தார். அதையடுத்து, நாங்கள் அங்கிருந்து தப்பிச் சென்றோம்" என்றார்கள். கைதான மூவரும் 21 வயதுக்குக் குறைவானவர்கள். இவர்கள் போதைக்கு அடிமையானதால், டாஸ்மாக் கடைகளை குறிவைத்துக் கொள்ளையடித்ததும், தடுக்க வந்த காவலாளி பாலையாவைக் கொலை செய்ததும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Vikatan