Published:Updated:

`அவளை நீ காதலிக்காதே..!' - சென்னையில் கல்லூரி முன் நடந்த பயங்கரம் 

எஸ்.மகேஷ்
`அவளை நீ காதலிக்காதே..!' - சென்னையில் கல்லூரி முன் நடந்த பயங்கரம் 
`அவளை நீ காதலிக்காதே..!' - சென்னையில் கல்லூரி முன் நடந்த பயங்கரம் 

சென்னை பழைய மகாபலிபுரம் சாலை, துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி முன், இன்று மாலை மாணவர்களுக்குள் நடந்த மோதலில் ஒரு மாணவர் கொலை செய்யப்பட்டார். 
 

`அவளை நீ காதலிக்காதே..!' - சென்னையில் கல்லூரி முன் நடந்த பயங்கரம் 

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் கென்டமெலா ஷெவன்குமார் (20). இவர், சென்னை பழைய மகாபலிபுரம் சாலை, துரைப்பாக்கத்தில் உள்ள பிரபல ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்துவந்தார். கல்லூரி முடிந்து கென்டமெலா ஷெவன்குமார் மற்றும் மாணவர்கள் வெளியில் வந்தனர். 

 திடீரென கென்டமெலா ஷெவன்குமாரை மூன்று மாணவர்கள் சரமாரியாகத் தாக்கினர். அதை சில மாணவர்கள் தடுத்தனர். இந்தச் சமயத்தில் கென்டமெலா ஷெவன்குமாரைப் பார்த்து, ''அவளை நீ காதலிக்காதே என்று பலமுறை எச்சரித்தும் நீ கேட்கவில்லை. இதனால் நீ இருப்பதைவிட சாவதே மேல்'' என்று கூறியபடி கத்தியால் குத்தினர். இதில், ரத்த வெள்ளத்தில் மாணவன் கென்டமெலா ஷெவன்குமாமர் கீழே சரிந்தார். இதையடுத்து, மாணவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம்பிடித்தனர். 

 உயிருக்குப் போராடிய கென்டமெலா, ஷெவன்குமாரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள்  தெரிவித்தனர். இதையடுத்து அவரின் சடலம், பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனை பிணவறைக்குக் கொண்டுசெல்லப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்ததும், துரைப்பாக்கம் உதவி கமிஷனர் லோகநாதன், இன்ஸ்பெக்டர் கிளாட்சன் ஜோஸ் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். மாணவனைக் கொலை செய்ததாக சண்முகம் என்பவரை போலீஸார் பிடித்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.  விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

`அவளை நீ காதலிக்காதே..!' - சென்னையில் கல்லூரி முன் நடந்த பயங்கரம் 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``ஆந்திராவைச் சேர்ந்த கென்டமெலா ஷெவன்குமார், ஒரு பெண்ணைக் காதலித்துள்ளார். அந்தப் பெண், சண்முகத்தின் உறவினர். இதனால் அவளை காதலிக்கக் கூடாது என்று சண்முகம் பலமுறை கென்டமெலா ஷெவன்குமாரை எச்சரித்துள்ளார். ஆனால் அவர் கேட்கவில்லை. இதனால்தான் சண்முகம் மற்றும் அவரின் நண்பர்கள் மூன்று பேர் சேர்ந்து கென்டமெலா ஷெவன்குமாரை கொலை செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. கொலை செய்யப் பயன்படுத்திய கத்தியையும் பறிமுதல்செய்துள்ளோம்" என்றனர். 

 சென்னையில், காதல் விவகாரத்தில் கொலை நடப்பது தொடர் கதையாகிவருகிறது. அதிலும் ஒருதலைக் காதல் விவகாரத்தில் சென்னையில் இளம்பெண்கள் கொலை செய்யப்பட்ட நிலையில், துரைப்பாக்கத்தில் கல்லூரி முன் மாணவர் கொலை செய்யப்பட்ட தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``கென்டமெலா ஷெவன்குமாரும் சண்முகமும் நண்பர்களாக இருந்துள்ளனர். ஆனால், இவர்களின் நட்பில் சில மாதங்களாக விரிசல் ஏற்பட்டுள்ளது. சண்முகத்தின் உறவுக்கார பெண்ணை கென்டமெலா ஷெவன்குமார் பின்தொடர்ந்து தொல்லை கொடுத்ததாக சண்முகம் எங்களிடம் தெரிவித்தார். இதனால் ஏற்பட்ட தகராறில்தான் கென்டமெலா ஷெவன்குமாரை கொலை செய்யும் நோக்கத்தில் கத்தி, அரிவாளோடு சண்முகம் மற்றும் அவரின் நண்பர்கள் 2 பேர் வந்துள்ளனர். கல்லூரி முடிந்து வெளியில் வந்த கென்டமெலாவை வழிமறித்து, 3 பேரும் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர். இதில், சம்பவ இடத்திலேயே கென்டமெலா இறந்துவிட்டார். தப்பி ஓட முயன்ற சண்முகம் மற்றும் அவரின் நண்பர்களைப் பிடித்துள்ளோம். கென்டமெலா கொலை செய்யப்பட்ட தகவல், அவரின் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் தெரிவித்துள்ளோம்" என்றார்.

Vikatan