Published:Updated:

`நைட் வீட்டுக்கு வரல; என் குழந்தைகளுக்கு என்ன பதில் சொல்லப்போகிறேன்? - கதறும் பார் உரிமையாளர் மனைவி

எஸ்.மகேஷ்
`நைட் வீட்டுக்கு வரல; என் குழந்தைகளுக்கு என்ன பதில் சொல்லப்போகிறேன்? - கதறும் பார் உரிமையாளர் மனைவி
`நைட் வீட்டுக்கு வரல; என் குழந்தைகளுக்கு என்ன பதில் சொல்லப்போகிறேன்? - கதறும் பார் உரிமையாளர் மனைவி

ஆளுங்கட்சியைச் சேர்ந்த அந்தநபரைப் பார்த்துவிட்டு வருகிறேன் என்று வீட்டிலிருந்து புறப்படும்போது என்னிடம் கடைசியாக அவர் கூறினார். ஆனால், அவரை இந்த நிலைமையில் இப்படியா நான் பார்க்கணும் என்று தற்கொலை செய்த பார் உரிமையாளரின் மனைவி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.  

`நைட் வீட்டுக்கு வரல; என் குழந்தைகளுக்கு என்ன பதில் சொல்லப்போகிறேன்? - கதறும் பார் உரிமையாளர் மனைவி

நெல்லை மாவட்டம், பாப்பான்குளத்தைச் சேர்ந்த நெல்லையப்பன், காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் குடும்பத்தோடு குடியிருந்துவந்தார். இவர், அந்தப்பகுதியில் 8 டாஸ்மாக் பார்களை நடத்திவந்தார். இந்தநிலையில் நேற்று மாமல்லபுரம் டி.எஸ்.பி. அலுவலகம் முன் நெல்லையப்பன் தீக்குளித்தார். அதன்பிறகு அவர் சிகிச்சை பலனின்றி இன்று இறந்தார். 

அவர் இறப்பதற்கு முன் செங்கல்பட்டு மாஜிஸ்திரேட் காயத்ரிதேவி, செங்கல்பட்டு டி.எஸ்.பி.கந்தன் ஆகியோரிடம் மரண வாக்குமூலம் அளித்துள்ளார். அதன்அடிப்படையில் திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

என்ன நடந்தது நெல்லையப்பனுக்கு என்று அவரின் மனைவி சுகுமதியிடம் பேசினோம். ``எனக்கு சொந்த ஊர் திருவாரூர். என் கணவர் நெல்லையப்பனுக்கு சொந்த ஊர் நெல்லை மாவட்டம். எங்கள் இருவருக்கும் திருமணமாகி 7 வயதில் ஒரு பெண் குழந்தையும் ஒரு மாத ஆண் குழந்தையும் உள்ளனர். நெல்லையப்பன், தண்டலம் பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் ஒருவரிடம் மேல்வாடகைக்கு டாஸ்மாக் பார்களை நடத்திவந்தார். அந்த அ.தி.மு.க. பிரமுகர் திடீரென மேல் வாடகையை உயர்த்தியதால் பணம் கொடுக்க முடியாமல் தவித்தோம். 

வீட்டுக்கு வரும் அ.தி.மு.க. பிரமுகர் நெல்லை இருக்கிறாரா என்று கேட்பார். அவர் வீட்டில் இல்லை என்றதும் கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்கச் சொல்லுமா என்று கூறிவிட்டுச் சென்றுவிடுவார். என் கணவரும் தொழிலில் கிடைத்த வருமானத்தை விட கடன் வாங்கி அ.தி.மு.க. பிரமுகருக்குப் பணம் கொடுத்துவந்தார். கடந்த ஒருவாரமாக அவர், கடன் தொல்லை காரணமாக புலம்பிக் கொண்டிருந்தார். கடைசியாக அவர் என்னிடம்,  அ.தி.மு.க. பிரமுகரைப் பார்த்துவிட்டு வருகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றார். அன்றைய தினம் இரவு அவர் வீட்டுக்கு வரவில்லை. திடீரென என்னுடைய போனில் பேசிய போலீஸ்காரர் ஒருவர், நெல்லையப்பன் தீக்குளித்துவிட்டார் என்று கூறினார். அதைக்கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன்.

`நைட் வீட்டுக்கு வரல; என் குழந்தைகளுக்கு என்ன பதில் சொல்லப்போகிறேன்? - கதறும் பார் உரிமையாளர் மனைவி

பார்த்துவிட்டு வீட்டுக்கு வருகிறேன் என்றுகூறிவிட்டுச் சென்ற அவரை இப்படியா நான் பார்க்கணும் என்றவரால் தொடர்ந்து பேச முடியவில்லை. சிறிது நேர அமைதிக்குப் பிறகு அவரோ தொடர்ந்தார். அவர் சிகிச்சை பெறும் ஆஸ்பத்திரிக்கு கைக்குழந்தையுடன் சென்றேன். அங்கு அவர் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். என்னைப்பார்க்க வேண்டும் என்று கூறினார். அவர் இருந்த நிலைமையைப் பார்த்து என்னால் அவரின் அருகில் செல்ல முடியவில்லை. என் கணவரின் சாவுக்கு நீதி கிடைக்க வேண்டும். என் குழந்தைகள் அப்பா எங்கே என்று கேட்டால் என்ன பதில் சொல்லப் போகிறேன் என்று தெரியவில்லை" என்றார் கண்ணீருடன். 

போலீஸார் கூறுகையில், ``நெல்லையப்பனை திருப்போரூர் பகுதியில் தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள். அந்தளவுக்கு அவர் பிரபலமானவர். பார், ரிசார்ட்களை வாடகைக்கு எடுத்து பிசினஸ் செய்து வந்தார். அவர் இறப்பதற்கு முன் பதிவு செய்த வீடியோவில் காவல் துறையைச் சேர்ந்த சிலருக்கும் அ.தி.மு.க. பிரமுகருக்கும் லட்சக்கணக்கில் பணம் கொடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அதுபோல அவர் அளித்த மரண வாக்குமூலத்திலும் யார், யாருக்கெல்லாம் பணம் கொடுத்தேன், எவ்வளவு கடன் என்று தெளிவாகச் சொல்லியுள்ளார். அதுதொடர்பாக விசாரணை நடந்துவருகிறது. 

பார் மற்றும் பணம் விவகாரம் தொடர்பாகத்தான் திருப்போரூர் காவல் நிலையத்தில் நெல்லையப்பன் புகார் கொடுத்துள்ளார். ஆனால் புகாரை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால்தான் மாமல்லபுரம் டி.எஸ்.பி. அலுவலகத்துக்கு வந்து புகார் கொடுத்துள்ளார். அங்கேயும் ஆளுங்கட்சி பிரமுகர் மீதும் இன்ஸ்பெக்டர் மீதும் புகார் என்றதும் நிராகரித்துவிட்டனர். இதனால்தான் அங்கேயே தீக்குளித்துள்ளார். நெல்லையப்பன் தற்கொலை குறித்து விசாரணை நடந்துவருகிறது" என்றனர். 

`நைட் வீட்டுக்கு வரல; என் குழந்தைகளுக்கு என்ன பதில் சொல்லப்போகிறேன்? - கதறும் பார் உரிமையாளர் மனைவி

நெல்லையப்பனின் நண்பர்கள் கூறுகையில், ``சமையல்மாஸ்டராகப் பணியாற்றிவந்த நெல்லையப்பன் கேரளா, பெங்களூருவில் வேலை பார்த்துவந்துள்ளார். சென்னைத் திருப்போரூக்கு வந்தபோதுதான் பார் அனுமதி பெற்ற அ.தி.மு.க. பிரமுகருடன் நட்பு கிடைத்துள்ளது. அதன்பிறகே மேல் வாடகைக்கு பார்களை நெல்லையப்பன் நடத்திவந்துள்ளார். கூவத்தூர் ரிசார்ட்டில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டிருந்தபோது நெல்லையப்பன் நடத்திய பாரில் இருந்துதான் மதுபானங்கள் சப்ளை செய்யப்பட்டுள்ளன. கோயில் திருவிழா உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிக்கும் நெல்லையப்பன் நன்கொடையாக ஆயிரக்கணக்கில் பணத்தைக் கொடுப்பார். அந்தளவுக்கு வசதியாக வாழ்ந்த நெல்லையப்பனுக்கு இன்று லட்சக்கணக்கில் கடன் உள்ளது. அவரின் மனைவி சுகுமதியின் நகைகளையும் அடகு வைத்து சிலருக்குப் பணம் கொடுத்துள்ளார். 

 டாஸ்மாக் பார்களுக்கான அனுமதி பெறும் ஆளுங்கட்சியைச் சேர்ந்த சிலர், அதை மேல்வாடகை என்ற பெயரில் சிலரிடம் கொடுத்துவிடுகின்றனர். இதனால் அரசின் கஜனாவுக்குச் செல்ல வேண்டிய பணம் தனிநபர் பாக்கெட்டிற்குச் செல்கிறது. நீண்ட காலமாக நடந்துவரும் பார் மேல்வாடகை பிசினஸ், நெல்லையப்பன் தற்கொலை மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. ஆனால், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் அதிகாரிகள் பார் உரிமை பெற்றவர்கள் ஆளுங்கட்சியினர் என்பதால் எந்தவிட நடவடிக்கையும் எடுப்பதில்லை. நெல்லையப்பன் தற்கொலை சம்பவத்துக்குப் பிறகாவது அரசு அதிகாரிகள் தங்களின் கடமையைச் செய்வார்களா"என்றனர். 

ராயப்பேட்டை அரசு மருத்துவமனை பிணவறையின் முன் கைக்குழந்தையுடன் கண்ணீரோடு காத்திருந்த நெல்லையப்பனின் மனைவி சுகுமதிக்கு உறவினர்கள் ஆறுதல் கூறினர். ஆனால், அவரின் மடியில் படுத்திருந்த பச்சிளம் குழந்தையின் அழுகைக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்துக்கொண்டிருந்தாள் சுகுமதி. 

Vikatan