Published:Updated:

``திருடியிருந்தா கண்டிச்சிருக்கலாமே... கொன்னா போடுவீங்க!’’ - கரூர் சிறுவனின் பெரியம்மா

மு.பார்த்தசாரதி

``அய்யய்யோ சாமி ஏன்டா இப்புடி வெளியில படுத்துருக்கேன்னு ஓடிப்போயி பாத்தா கை, காலெல்லாம் வெறகுக் கட்டை மாதிரி மறத்துப் போயி இருந்துச்சு. அவனை அசைக்கக் கூட முடியல. பாவிங்க புள்ளைய அடிச்சே கொன்னுருக்காங்க தம்பி!”

``திருடியிருந்தா கண்டிச்சிருக்கலாமே... கொன்னா போடுவீங்க!’’ - கரூர் சிறுவனின் பெரியம்மா
``திருடியிருந்தா கண்டிச்சிருக்கலாமே... கொன்னா போடுவீங்க!’’ - கரூர் சிறுவனின் பெரியம்மா

``சாமி எங்க புள்ளையக் கொன்னுட்டாங்களே சாமி. அய்யயோ அநியாயம் பண்ணிட்டாங்களே. துறுதுறுன்னு சுத்திட்டு இருந்த எங்க வீட்டோட வாரிச அடிச்சே கொன்னுருக்காங்களே சாமி” தொலைபேசி இணைப்பை எடுத்ததும் யார் பேசுறீங்க, எங்க இருந்து பேசுறீங்க என்ற எந்தக் கேள்வியும் இல்லாமல் கண்ணீர் விட்டுக் கதறி அழுகிறார் கன்னியம்மா. 

கடந்த பிப்ரவரி மாதம் கேரளாவில் மது என்ற இளைஞர் அரிசி திருடியதற்காக அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இப்படியெல்லாம் கூட இந்தியாவில் நடக்குமா என்கிற அளவுக்கு மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. மதுவின் மரணத்தைத் தொடர்ந்து இப்போது கரூர் அருகே 15 வயசு சிறுவன் பாலசுப்பிரமணியம் செல்போன் திருடியதற்காக அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார். அதுவும் தமிழ்நாட்டில். 

``நாங்க என்னய்யா பாவம் பண்ணுனோம். ஏன் எங்க புள்ளைக்கு இப்படி ஒரு அநியாயம் நடக்கணும். சனிக்கிழமை சாயங்காலம் வரை நல்லாத்தானே விளையாடிட்டு இருந்தான். `பெரியம்மா பக்கத்துலதான் எங்கயாவது வெளையாடிட்டு இருப்பேன். அம்மாக்கிட்ட சொல்லிடு'ன்னு சொல்லிட்டுப் போனான். வெளையாடத்தானே போயிருக்கான். வந்துடுவான்னு நினைச்சேன். ஆனா, அதுக்குள்ள என்னனென்னலாமோ நடந்துடுச்சுங்களே” என்றவர் அன்றைய சம்பவத்தை விவரிக்கிறார். 

மாதிரிப் படம்

``நான் பாலாவோட பெரியம்மாங்க. இலஞ்சியம் என் கூட பொறந்த தங்கச்சி. மூத்தவன் பாலா. ரெண்டாவது ஒரு பொம்பளைப் புள்ள இருக்கு. பேரு நந்தினி. அவ வீட்டுக்காரரு போன வருஷம்தான் இறந்துபோனாரு. அப்போ இருந்தே நூறுநாள் வேலைக்குப் போயிதான் பையனையும் பொண்ணையும் பாத்துக்கிட்டா. பாலா எட்டாவது வரை பள்ளிக்கூடத்துக்குப் போயிட்டு இருந்தான். அவன் அப்பா இறந்ததுக்குப் பிறகு பள்ளிக்கூடம் போகமாட்டேன்னு சொல்லிட்டான். என் தங்கச்சி வெவரம் தெரியாதவ. பாவம் அவளே ரொம்ப கஷ்டப்படறாளேன்னு சொல்லி பாலாவ என்கூடதான் வெச்சுப் பாத்துக்கிட்டேன். எதிர் எதிர் விடுதான். ஆனாலும், என்கூடதான் எப்பவும் இருப்பான். சனிக்கிழமை சாயந்திரம் உப்பிடமங்கலம் வரை போயிருந்தவன் அங்க ஒரு வீட்டு நெலக்கதவுல தொங்கிட்டு இருந்த கொண்டியை எடுத்துருக்கான். அதைப்பாத்துட்டு 'இந்தப் பையன் திருடத்தான் வந்துருக்கான். அவனைப் புடிச்சு அடிங்க'ன்னு சொன்னதும் பசங்க எல்லாருமா சேர்ந்து தேடியிருக்காங்க. 

ஊருல உள்ள ஆட்கள்லாம் சேர்ந்து எங்க வீட்டுக்கு வந்து சண்டை போட ஆரம்பிச்சதும் நானும் அவன் அம்மாவும் அவன் சின்னப் பையனுங்க, ஏதும் தெரியாம பண்ணியிருப்பான், மன்னிச்சி விட்டுடுங்கன்னு கெஞ்சினோம். அவன் திருட்டுப் பையன். கதவு கொண்டியை எடுத்து செல்போன திருடியிருக்கான். அவனைக் கூப்பிட்டு நாலு அடி கொடுத்தாதான் திருந்துவான். அம்மா, பெரியம்மான்னு அவனை கூட்டிட்டுப் போக யாராவது வந்தீங்கன்னா ஊருல இருக்க முடியாதுன்னு சொல்லி எங்களையும் அடிக்க வந்தாங்க. ஊர்க்காரங்க கோவம் குறையட்டும்னு நினைச்சு நானும் தங்கச்சியும் நந்தினியை கூட்டிட்டு பக்கத்துல இருந்த கோயிலுக்குள்ள போய்ட்டோம். ஆனா, ஊர்க்காரப்பசங்க எல்லாரும் பாலாவ வெரட்டிப் புடிச்சுட்டாங்க. கோவத்துல எல்லாருமா சேர்ந்து வீட்டு வாசல்ல வெச்சு அடிச்சுருக்காங்க. ராத்திரி முழுக்க தங்கச்சியும் நந்தினியும் அழுதுட்டேதான் தம்பி இருந்தாங்க. விடியக்காலையில நாலு மணிக்கு நான் வீட்டுக்கிட்ட போய் பாத்தேன். யாருமே இல்ல. இந்த இருட்டுக்குள்ள புள்ள எங்க கெடக்குறானோன்னு தெரியாம தேடிட்டு இருந்தப்போதான் பக்கத்து வீட்டு அக்காவை எழுப்பி லைட்டு போடச் சொன்னேன். வீட்டுக்கு வெளியில தரையில படுத்துக் கிடந்தான். அய்யய்யோ சாமி ஏன்டா இப்புடி வெளியில படுத்துருக்கேன்னு ஓடிப்போயி பாத்தா கை, காலெல்லாம் வெறகுக் கட்டை மாதிரி மறத்துப் போயி இருந்துச்சு. அவனை அசைக்கக் கூட முடியல. பாவிங்க புள்ளைய அடிச்சே கொன்னுருக்காங்க தம்பி” எனக் கதறுகிறார். வெடித்து அழுகிறார். ``உசுருக்குப் பயந்து நாங்க தப்பிச்சு ஓடிட்டோம். ஆனா, புள்ளைய காப்பாத்த முடியாம போயிடுச்சே தம்பி” என ஆற்றாமையில் நொந்து புலம்புகிறார். 

மாதிரிப் படம்

எங்களுக்கு ஆம்பளைத் துணைனு யாருமே கெடையாது தம்பி. நாங்க நாலு பேரும் பொம்பளைப் புள்ளைங்க. என் வீட்டுக்காரரு என்னை விட்டுட்டு வேற ஒரு பொம்பளைக் கூட போயிட்டாரு. என் தங்கச்சி புருஷனும் போன வருஷம் செத்துப் போயிட்டாரு. நாங்க பொம்பளைங்க மட்டும்தானேன்னு எங்ககிட்ட வந்து சண்டை போட்டாங்க. பையன அடிச்சே கொன்னுருக்காங்க. ஊர்க்காரங்கள்லாம் செத்தா சாகுறான். தலைய முழுகிட்டு அமைதியா இருக்க வேண்டியதுதானேனு சொல்லுறாங்க தம்பி. பெத்து வளத்து ஓடியாடி உழைச்சு ஆளாக்குற நேரத்துல புள்ளைய அடிச்சே கொன்னுட்டாங்களே தம்பி. இலஞ்சியமும் நந்தினியும் நேத்துல இருந்தே கஞ்சி தண்ணி குடிக்காம பையன் பையன்னு பைத்தியம் புடிச்ச கணக்கா கத்திட்டு இருக்குறா தம்பி. நாங்க என்ன செய்யுவோம். இனி நாங்க எப்புடி நிம்மதியா வாழுவோம். பதினைஞ்சு வயசுப் பையன இப்புடி துடிக்க துடிக்க கொன்னுருக்காங்களே இவங்களை எதிர்த்து ஏன்னு கூட கேக்க பலம் இல்லாம நின்னுட்டு இருக்கிறோம் தம்பி” கன்னியம்மாவின் கண்ணீர்க்கதறல் நெஞ்சைச் சுடுகிறது. 

'மனிதர் நோக மனிதர் பார்க்கும் நிலை இனி உண்டோ' பாரதியின் இந்த வரிகள் கரூர் சிறுவன் பாலசுப்பிரமணியத்தை அடித்துக் கொன்றவர்களால் வெட்கப்பட்டுத் தலை குனிந்து நிற்கிறது.

இந்தச் சம்பவம் குறித்து வெள்ளியணை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரசேகரிடம் பேசினோம். 

``அந்த அம்மா கூலி வேலை பார்த்துதான் பிள்ளைகளை வளர்த்துருக்காங்க. இந்தப் பையன் ஏற்கெனவே சின்னச் சின்ன திருட்டு சம்பவத்துல ஈடுபட்டுருக்கான். அப்போல்லாம் கூப்பிட்டு கண்டிச்சிருக்காங்க. அடிச்சிருக்காங்க. அவனும் அதை பெருசா எடுத்துக்கிட்டதில்லை. இப்போ முனியாண்டிங்கிறவர்கிட்ட செல்போன் திருடியிருக்கான். அந்தக் கோவத்துலதான் வீடு தேடி வந்து புடிச்சி கட்டிப் போட்டு அடிச்சிருக்காங்க. அடிச்சவங்க அந்தப் பையனுக்கு என்ன ஆச்சுன்னு எதுவுமே தெரியாம அப்படியே விட்டுட்டுப் போயிட்டாங்க. ஆரம்பத்துலயே கவனிச்சிருந்தா ஒருவேளை காப்பாத்தியிருக்கலாமோ என்னவோ! அதுமட்டுமில்ல, எதுவா இருந்தாலும் முதல்ல போலீஸ் ஸ்டேஷனுக்குத் தகவல் கொடுத்திருக்கணும். பையன் இறந்ததுக்குப் பிறகுதான் எங்களுக்கே தகவல் வந்தது. சின்னப் பையன்தானே. சொல்லிப் புரிய வெச்சிருக்கலாம்” என்கிறார் வேதனையோடு.