பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் மதுர காளி அம்மன் கோயிலின் செயல் அலுவலர் அரவிந்தன், ஆவடி போலீஸ் கமிஷனரக மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், சென்னை ஆவடி அருகே உள்ள முத்தாபுதுபேட்டை, மூன்றாவது குறுக்குத் தெரு, முதல் தெருவைச் சேர்ந்த கார்த்திக் கோபிநாத் (33) என்பவர் `இளைய பாரதம்’ என்ற பெயரில் யூடியூப் ஒன்றை நடத்திவருகிறார். `Milaap fund raiser’ இணையதளம் மூலம் சிறுவாச்சூர் மதுர காளி அம்மன் கோயிலின் உப கோயில்களில் பழுதடைந்த சிலைகளைப் புனரமைப்பதாகக் கூறி நன்கொடை வசூலித்துள்ளார். இதற்காக இந்து அறநிலையத்துறையிடம் முறையாக அவர் அனுமதி பெறவில்லை.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட நன்கொடையை அவர் தனது சுயலாபத்துக்காகப் பயன்படுத்தியுள்ளார். எனவே, அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்பேரில் நடவடிக்கை எடுக்க ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார். இதையடுத்து ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கார்க்கிக் கோபிநாத்திடம், புகார் தொடர்பாக விசாரணை நடத்தி அவர்மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 406, 420, தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66 (D) ஆகியவற்றின்கீழ் வழக்கு பதிவுசெய்தனர். விசாரணைக்குப் பிறகு கார்த்திக் கோபிநாத்தை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
கைதுசெய்யப்பட்ட யூடியூபர் கார்த்திக் கோபிநாத், பா.ஜ.க-வின் மூத்த நிர்வாகிகளைச் சந்தித்து அவர்களோடு புகைப்படங்களையும் எடுத்திருக்கிறார். குறிப்பாக மத்திய அமைச்சர் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரை கார்த்திக் கோபிநாத் சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகின்றன. இந்தச் சூழலில் கார்த்திக் கோபிநாத் கைதுசெய்யப்பட்டதற்கு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு தேவையான சட்ட உதவிகள் செய்யப்படும் எனக் கூறியுள்ளார்.

இது குறித்து ஆவடி போலீஸார் கூறுகையில், ``இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் யூடியூபர் கார்த்திக் கோபிநாத்தைக் கைதுசெய்துள்ளோம். ஏற்கெனவே கார்த்திக் கோபிநாத்துக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது. கார்த்திக் கோபிநாத், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலிருக்கும் கோயிலைப் புனரமைப்பதாக கூறி நன்கொடை வசூலித்ததற்கான ஆதாரங்களும் அவர் அனுப்பிய இமெயில்களும் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் எந்தவித அரசியல் பின்னணியும் இல்லை. மேலும் நன்கொடையாக கார்த்திக் கோபிநாத் வசூலித்த பணம் யாருக்கெல்லாம் அனுப்பப்பட்டுள்ளது என்ற விவரங்களையும் சேகரித்துவருகிறோம்" என்றனர்.