Published:Updated:

நீலகிரி: நடு ஏரியில் படகு சவாரி; விபரீத முடிவெடுத்த இளம் ஜோடி! - விரைந்து வந்து மீட்ட ஊழியர்கள்

நீலகிரி
நீலகிரி ( மாதிரிப் படம் )

ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்துகொண்டிருந்த இளம் ஜோடி விபரீத முடிவெடுத்து திடீரென தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது சக பயணிகளையும், படகு இல்ல பணியாளர்களையும் பதற்றமடையச் செய்தது.

பின் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக முடக்கப்பட்டிருந்த சுற்றுலாதலங்கள் அனைத்தும் தற்போது திறக்கப்பட்டுள்ளன. நீலகிரியை நோக்கி சுற்றுலாப்பயணிகள் படையெடுக்கத் தொடங்கியிருப்பதால், பெரும்பாலான சுற்றுலாத்தலங்களில் பயணிகளின் கூட்டம் நிறைந்து காணப்படுகின்றன.

ஊட்டி
ஊட்டி

இந்தநிலையில், ஊட்டி படகு இல்லத்துக்கு வந்த ஓர் இளம் ஜோடி, மிதி படகில் சவாரி செய்ய கட்டணம் செலுத்திவிட்டு, ஒரு மிதி படகை இயக்கி நடு ஏரிக்குச் சென்றுள்ளனர். பின்னர் படகை நிறுத்திவிட்டு, பையிலிருந்து ஏதோ ஒன்றை எடுத்துக் குடித்துள்ளனர். இயங்காமல் மிதந்தபடி இருந்த படகில் இருவரும் மயங்கியநிலையில் கிடப்பதைப் பார்த்த சக பயணிகள் உடனடியாகக் கரைக்கு வந்து படகு இல்ல பணியாளர்களிடம் தெரிவித்துள்ளனர். மீட்புப் படகுடன் விரைந்த பணியாளர்கள், மயக்கத்திலிருந்த இருவரையம் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். திருமணத்துக்கு உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த விபரீத முடிவை அவர்கள் எடுத்திருப்பது முதற்கட்ட தகவலாகத் தெரியவந்தது.

காதல் விவகாரம்; வாட்ஸ்அப்பில் வந்த மகளின் திருமண புகைப்படம்! - விபரீத முடிவெடுத்த பெற்றோர்

இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய காவல்துறையினர், ``காரைக்குடியைச் சேர்ந்த 19 வயதான இப்ராஹிம், கோவை பீளமேட்டிலுள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை செய்துவந்திருக்கிறார். இவரும், கோவை சின்னவேடம்பட்டியைச் சேர்ந்த 21 வயதான பூங்கொடியும் காதலித்திருக்கிறார்கள். தற்போது பூங்கொடி இரண்டு மாதம் கர்ப்பமாக இருக்கிறார்.

நீலகிரி
நீலகிரி

ஆனால், திருமணம் செய்துகொள்ள இருவரின் குடும்பத்திலும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்து ஊட்டிக்கு வந்த இருவரும் ஊட்டி, படகு இல்ல ஏரியின் நடுப்பகுதிக்குப் படகில் சென்று விஷத்தைக் குடித்து மயங்கியுள்ளனர். ஊட்டி அரசு மருத்துவமனையில் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. ஊட்டி ஜி1 காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு