Published:Updated:

காதல் திருமணம் செய்த பத்தாவது நாளில் இளம்பெண் மரணம் - விருந்துக்கு அழைத்த பெற்றோர் மீது சந்தேகம்?!

நிவேதா

காதல் திருமணம் செய்த இளம்பெண் பத்தே நாளில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

காதல் திருமணம் செய்த பத்தாவது நாளில் இளம்பெண் மரணம் - விருந்துக்கு அழைத்த பெற்றோர் மீது சந்தேகம்?!

காதல் திருமணம் செய்த இளம்பெண் பத்தே நாளில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
நிவேதா

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சான்றோர்குப்பம் பகுதியைச் சேர்ந்த 23 வயதாகும் வினித் என்ற இளைஞர், அருகேயுள்ள தனியார் காலணி தொழிற்சாலையில் வேலை செய்துவருகிறார். அதே தொழிற்சாலையில் வேலைக்குச் சென்றுவந்த வாணியம்பாடி காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 21 வயதாகும் நிவேதா என்ற இளம்பெண்ணுடன், வினித்துக்கு நட்பு ஏற்பட்டது. இருவரும் மனம்விட்டுப் பேசிப் பழகிய நிலையில் காதலித்தனர். இவர்களின் காதல் விவகாரம் வீட்டுக்குத் தெரியவரவே, இரு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இதையடுத்து, கடந்த 10 நாள்களுக்கு முன்பு இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி, திருமணம் செய்துகொண்டனர்.

நிவேதா
நிவேதா

ஒருசில நாள்கள் ஊருக்குள் வராமலிருந்த இந்தக் காதல் ஜோடி, கோபம் தணிந்துவிட்டதாக பெற்றோர்கள் கூறியதால் மீண்டும் ஊர் திரும்பியிருக்கிறார்கள். நேற்று காலை மறுவீட்டு விருந்துக்காக வாணியம்பாடியிலுள்ள நிவேதாவின் பெற்றோர் அழைத்தன்பேரில், காதல் ஜோடி அங்கு சென்றனர். மதியம் 12:30 மணியளவில், வினித் வெளியே சென்றிருக்கிறார். திரும்பி வந்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அறையின் கதவைத் திறந்தபோது, தன் காதல் மனைவி நிவேதா மின்விசிறியில் புடவையைச் சுற்றி தூக்குப்போட்ட நிலையில் சடலமாகத் தொங்கிக்கொண்டிருந்தார்.

கதறி அழுத அவரின் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து சடலத்தைக் கீழே இறக்கிவைத்து, வாணியம்பாடி நகரப் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீஸார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்திருக்கிறார்கள். மேலும், வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தியதில், நிவேதாவின் மரணத்தில் மர்மம் இருக்கலாம் எனக் கருதுகிறார்கள்.

நிவேதா
நிவேதா

காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘‘இன்று மதியத்துக்கு மேல்தான் நிவேதாவின் சடலம் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவிருக்கிறது. சடலத்தை அடக்கம் செய்வதற்கான இறுதிச்சடங்கில் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். அதேசமயம், இந்தப் பெண்ணின் மரணத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. பெற்றோர்களிடம் விசாரித்தபோது, அவர்கள் எதையோ மறைக்கப் பார்க்கிறார்கள். ‘வேண்டாம்; விட்டுவிடுங்கள். மகளே போய்விட்டாள்’ என்று ஏதோ சொல்லி, திசைதிருப்பப் பார்க்கிறார்கள். தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம்’’ என்றனர். காதல் திருமணம் செய்த பத்தே நாள்களில், இளம்பெண் மரணித்திருப்பதால், வாணியம்பாடி கோட்டாட்சியரும் விசாரணை நடத்திவருகிறார்.