Published:Updated:

`உன் சகோதரி என் வீட்டுக்கு வந்தாள்!'- கழிவறைக்குச் சென்ற புதுக்கோட்டைப் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

அறந்தாங்கி காவல் நிலையம்
அறந்தாங்கி காவல் நிலையம்

காணாமல் போன பெண்ணை பெற்றோருடன் சேர்ந்து தேடுவதுபோல நாடகமாடிய இளைஞர், அந்தப் பெண்ணை தன் வீட்டிலேயே மறைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கீழச்சேரி கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கடந்த 2 நாள்களுக்குமுன் திடீரென மாயமானார். இதையடுத்து, அந்தப் பெண்ணின் பெற்றோர் கிராமம் முழுவதும் தேடியுள்ளனர். ஆனாலும் கிடைக்கவில்லை. இதையடுத்து, அறந்தாங்கி காவல் நிலையத்தில் இதுபற்றி புகார் அளித்தனர். இதற்கிடையே, பக்கத்துவீட்டைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் இளம்பெண்ணின் சகோதரரிடம் `உன் சகோதரி என் வீட்டுக்கு அன்று மாலை வந்தாள்' என்று கூறிவிட்டு அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார்.

representational image
representational image

இதையடுத்து, சுரேஷின் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது இளம்பெண் மயக்கநிலையில் இருந்தார். அவரை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இளம்பெண்ணிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், இரண்டு தினங்களுக்கு முன்பு வீட்டுக்கு வெளியே உள்ள கழிப்பறைக்கு அந்தப் பெண் சென்றபோது, அங்கு வந்த சுரேஷ், இளம்பெண்ணை மயக்கமடையச் செய்து, தன்னுடைய வீட்டுக்குக் கொண்டு சென்று 2 நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

`2-வது மாடி; செல்போனில் கவனம்!' -புதுவையில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

இதற்கிடையே, மகளைக் காணவில்லை என்று பெற்றோர் தேடியபோது, தனக்கு எதுவும் தெரியாததுபோல சுரேஷும் அவர்களுடன் சேர்ந்து இளம்பெண்ணைத் தேடியுள்ளார். 2 நாள்கள் ஆகியும் கண்டுபிடிக்கமுடியவில்லை என்பதால், காவல் நிலையத்தில் புகார் கொடுக்கலாம் என்று முடிவு செய்தபோது, சுரேஷ் தானாக முன்வந்து அந்தப் பெண் தன் வீட்டில் இருப்பதாகக் கூறிவிட்டுத் தலைமறைவாகிவிட்டார். அதன்பின்பு, இளம்பெண்ணை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தலைமறைவான சுரேஷை போலீஸார் தேடிவருகின்றனர்.

representational image
representational image

சுரேஷுக்கு இரண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில், இரண்டாவதாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்துள்ளார். சுரேஷின் நடத்தை பிடிக்கவில்லை என்றுகூறி இரண்டாவது மனைவி சுரேஷை விட்டுப் பிரிந்து சென்றுள்ளார்.

நீண்ட நாள்கள் தனியாகவே வசித்து வந்துள்ளார். காணாமல் போன பெண்ணை பெற்றோருடன் சேர்ந்து தேடுவதுபோல நாடகமாடிய இளைஞர், அந்தப் பெண்ணை தன் வீட்டிலேயே மறைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு