Published:Updated:

`வெரட்டி வெரட்டி வெளுக்கத் தோணுது..!’ - ரயில் நிலையத்தில் போலீஸார் முன்பு நடனமாடிய இளம்பெண்

பிளாட்பாரத்தில் நடனமாடிய இளம்பெண்
பிளாட்பாரத்தில் நடனமாடிய இளம்பெண்

சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில், மாஸ்க் அணியாத இளம்பெண் ஒருவருக்கு டிக்கெட் பரிசோதகரும், ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாரும் சேர்ந்து 500 ரூபாய் அபராதம் விதித்தனர். உடனடியாக அந்தப் பெண் போலீஸார் முன்பு பிளாட்பாரத்திலேயே நடனமாடினார்.

கொரோனா தொற்று பரவலைத் தடுக்க அனைவரும் மாஸ்க் அணிதல், அடிக்கடி கைகளைக் கழுவுதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் உள்ளிட்ட விழிப்புணர்வு மத்திய, மாநில அரசு சார்பில் ஏற்படுத்தப்பட்டுவருகிறது. ரயில் நிலையங்களிலும் ரயில்களில் பயணிக்கும்போதும் மாஸ்க் அணிய வேண்டும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. மாஸ்க் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டிருக்கிறது. அபராதம் விதிக்கும் பணியில் ரயில்வே டிக்கெட் பரிசோதகர்கள், ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் சேர்ந்து ஈடுபட்டுவருகின்றனர். நேற்று மாலை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இளம்பெண் ஒருவர், மாஸ்க் அணியாமல் நின்றுகொண்டிருந்தார்.

வாக்குவாதம் செய்யும் இளம்பெண்
வாக்குவாதம் செய்யும் இளம்பெண்

உடனே டிக்கெட் பரிசோதகர், அவரிடம் மாஸ்க் அணியாததற்காக 500 ரூபாய் அபராதம் விதிப்பதாகக் கூறியிருக்கிறார். அதற்கு அந்த இளம்பெண் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், பாதுகாப்பு பணியிலிருந்த பெண் காவலர்கள் அங்கு வந்திருக்கின்றனர். போலீஸாரைப் பார்த்ததும் அந்த இளம்பெண், மாஸ்க்கை எடுத்து அணிந்தார். அடுத்து பிளாட்பாரத்திலேயே அவர் நடனமாடத் தொடங்கினார். அவரின் நடனத்தை பிளாட்பாரத்திலிருந்த பொதுமக்கள் வேடிக்கை பார்க்க தொடங்கினர். நடனமாடிக்கொண்டிருந்த இளம்பெண், `சொடக்கு மேல சொடக்கு’ பாடலில் வரும் `அதிகார திமிரை வெரட்டி வெரட்டி வெளுக்கத் தோணுது’ என்ற வரிகளை பாடினார். உடனடியாக அந்த இளம்பெண்ணுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது இளம்பெண், போலீஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதனால் பொதுமக்களும் அந்த இளம்பெண்ணை சமரசப்படுத்த முயன்றனர். ஆனால் அந்த இளம்பெண்ணோ, போலீஸாருடன் சண்டை போட்டபடியே இருந்தார். அதைப் பார்த்த டிக்கெட் பரிசோதகரும், ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாரும் என்ன செய்வது என்று தெரியாமல் சில நிமிடங்கள் யோசித்தனர். அதன் பிறகு இளம்பெண் அபராதத் தொகையைச் செலுத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். மாஸ்க் போடாததற்காக இளம்பெண் ஒருவர் பொது இடத்தில் நடனமாடியதை அங்கிருந்தவர்களில் சிலர் தங்களின் செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர். தற்போது அந்த வீடியோ வைரலாகிவருகிறது.

`தடுப்பூசி போட்டவர்களும் இனி மாஸ்க் அணிய வேண்டும்!' - அமெரிக்காவின் புதிய முடிவுக்கு என்ன காரணம்?
வாக்குவாதத்தில் ஈடுபடும் இளம்பெண்
வாக்குவாதத்தில் ஈடுபடும் இளம்பெண்

இது குறித்து ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாரிடம் கேட்டதற்கு, ``மாஸ்க் அணியாததற்காக அந்த இளம்பெண்ணுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அதனால் ஆத்திரமடைந்த இளம்பெண் எங்களுடனும், டிக்கெட் பரிசோதகரிடரிமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அவர் திடீரென நடிகர் சூர்யா நடித்த படத்தின் பாடலைப் பாடியபடி நடனமாடினார். அதன் பிறகு அவர் அபராதத் தொகையைச் செலுத்திவிட்டுச் சென்றார். பொதுமக்களின் நலனுக்காகத்தான் மாஸ்க் அணிய வலியுறுத்துகிறோம். அதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். அபராதம் விதிக்கப்படுவது எங்களின் நோக்கம் அல்ல. அனைவரும் மாஸ்க் அணிந்து ரயில்களில் பயணிக்க வேண்டும். அப்போதுதான் கொரோனா பரவலைத் தடுக்க முடியும்" என்றனர்.

கொரோனா: `கேரள மக்களை பினராயி அரசு கொலை செய்கிறது!' - கொதித்த பாஜக தலைவர் சுரேந்திரன்
அடுத்த கட்டுரைக்கு