Published:Updated:

`உங்க பொண்ணு தற்கொலை பண்ணிகிட்டா!' - கரூரில் பெண் வீட்டாரைப் பதறவைத்த போன்

சாலை மறியல்
சாலை மறியல்

ஆறு மாதத்துக்கு முன்பு திருமணமான 4 மாத கர்ப்பவதியான பெண் ஒருவர் மர்மமான முறையில் கணவர் வீட்டில் இறந்துபோக, 'இது திட்டமிட்டக் கொலை. மாப்பிள்ளை வீட்டாரை கைது பண்ணணும்' என்று பெண்ணின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியத்தில் இருக்கிறது, கீழ்நங்கவரம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் ரெங்கராஜ் (வயது 28). இவரின் மனைவி சிவரஞ்சனி (வயது 22). பி.டெக் பட்டதாரி. இவர்களுக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், சிவரஞ்சனி கர்ப்பமானார். இந்தச் சூழலில், சிவரஞ்சனியின் உறவினர்களுக்கு, ரெங்கராஜ் வீட்டிலிருந்து போன் வந்திருக்கிறது. "உங்க மகள் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை பண்ணிகிட்டாள். வந்து உடலை எடுத்துகிட்டுப் போங்க' என்று போன் செய்து சொல்லியதாகக் கூறப்படுகிறது.

சாலை மறியல்
சாலை மறியல்

இதனால், பதறிப்போன சிவரஞ்சனியின் உறவினர்கள், கீழ்நங்கரவத்துக்கு ஓடியிருக்கிறார்கள். ஆனால், அங்கே சிவரஞ்சனியின் உடல் இல்லை. 'குளித்தலை அரசு மருத்துவமனையில் சிவரஞ்சனியின் உடல் உள்ளது' என்று தகவல் கிடைக்க, அங்கே பதறியடித்துக்கொண்டு சென்றார்கள்.

சிதறிக்கிடந்த ஊசிகள்; அளவுக்கு அதிகமான மயக்க மருந்து! - பெண் மருத்துவருக்கு நேர்ந்த கொடுமை

பின்னர் அங்கே சிவரஞ்சனியின் உடலைப் பார்த்து கதறிவர்கள், "சிவரஞ்சனியின் சாவில் மர்மம் இருக்கிறது. அவரை வரதட்சணைக் கேட்டு தொந்தரவு செய்துவந்தார்கள். தினமும் போன் செய்து சிவரஞ்சனி, 'வரதட்சணைக் கேட்டு கணவனும் அவரின் பெற்றோரும் கொடுமைபடுத்துகிறார்கள்; நான் உங்களோடு வந்திடுறேன்'னு சொல்லுவா. நாங்கதான் ஆறுதல் சொல்லி அங்கேயே இருக்க வெச்சோம். ஆனா, வரதட்சணைக் கொடுமை செய்ததோடு, சிவரஞ்சனியை ரெங்கராஜ் குடும்பத்தினர் அடித்துக் கொலை செய்துவிட்டனர். இதனால், அவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்" எனக் கூறி, குளித்தலை அரசு மருத்துவமனை முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து, தகவலறிந்த குளித்தலை காவல்நிலைய போலீஸார், சம்பவ இடத்ததுக்கு வந்தனர். பின்னர், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சாலை மறியல்
சாலை மறியல்

அப்போது, 'சிவரஞ்சனியின் இறப்பு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என போலீஸார் கூறினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, சிவரஞ்சனியின் உறவினர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இந்தச் சாலை மறியலால் அப்பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, சிவரஞ்சனியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தச் சம்பவம், குறித்து சிவரஞ்சனியின் தாய் பாசமலர், குளித்தலை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். சிவரஞ்சனிக்கு திருமணமாகி ஆறு மாதங்களே ஆவதால், குளித்தலை உதவி கலெக்டர் சேக் அப்துல் ரகுமானும் விசாரணை நடத்தி வருகிறார். நான்கு மாத கர்ப்பிணி மர்மமான முறையில் இறந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு