Published:Updated:

திருச்சி:``உன் புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் பகிர்வேன்!"- பெண்ணை மிரட்டிய வாலிபர் கைது!

திருச்சி
திருச்சி

சதீஸ்குமார் அந்தப் பெண்ணிடம், ``எனக்குத் திருமணமானால் என்ன... நாம் நண்பர்களாகப் பழகுவோம்’’ என்று சொல்லி மீண்டும் பேசத் தொடங்கியிருக்கிறான்.

திருச்சி திருவெறும்பூர், எழில் நகரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருடைய குடும்ப நண்பரின் மகள் ரம்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இருவரும் துவாக்குடியிலுள்ள தனியார் கல்லூரியில் படித்தபோது காதலித்துவந்துள்ளனர். ரம்யா, காஞ்சிபுரத்திலுள்ள ஒரு செல்போன் கடையிலும், சதீஷ்குமார் காஞ்சிபுரத்திலுள்ள ஒரு தனியார் கம்பெனியிலும் வேலை பார்த்து வந்துள்ளனர். அங்கு இருவரும் வீட்டுக்குத் தெரியாமல் லிவிங் டுகெதராக வாழ்ந்துள்ளனர். சதீஷ்குமார், திருச்சி நவல்பட்டு பகுதியைச் சேர்ந்த கார்த்திகா என்கிற (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பெண்ணையும் காதலித்துவந்ததாகவும், அவரைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் ஏற்கெனவே ரம்யாவிடம் தெரிவித்திருக்கிறார்.

அவரும் சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து சதீஷ்குமார் கடந்த 2020 டிசம்பரில் கார்த்திகாவை முறைப்படி திருமணம் செய்துகொண்டார். அவரின் மனைவி கார்த்திகா தற்போது கர்ப்பமாக உள்ளார். இதனால் அவரது சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில், திருமணத்துக்குப் பிறகும், சதீஷ்குமாரும் அவருடைய முன்னாள் காதலி ரம்யாவும் காஞ்சிபுரத்தில் வேலை பார்த்துவருகின்றனர். இருவரும் தொடர்ந்து பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே கொரோனா ஊரடங்கு காரணமாகக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் ரம்யா அவரது சொந்த ஊரான திருவெறும்பூருக்கு வந்துவிட்டார். காஞ்சிபுரத்தில் தனியாக வசித்துவரும் சதீஷ்குமார்,

Representational image
Representational image

ரம்யாவின் அந்தரங்கப் புகைப்படத்தை அனுப்பி வைக்குமாறு தொடர்ந்து டார்ச்சர் கொடுத்துவந்திருக்கிறார். அவர் கொடுத்த சித்ரவதை தாங்க முடியாமல், காவல் நிலையத்தில் ரம்யா புகார் கொடுக்கவே, சதீஷ்குமாரை மடக்கிப் பிடித்திருக்கிறார்கள் காவல்துறையினர். இது குறித்து இன்ஸ்பெக்டர் பாரதி வழக்கு பதிவு செய்து, குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் திருச்சி மத்தியச் சிறையில் சதீஷ்குமாரை அடைத்தனர்.

இது குறித்து போலீஸார் வட்டாரத்தில் விசாரித்தோம். ”கல்லூரியில் படிக்கும்போதே இருவரும் காதலித்திருக்கிறார்கள். சதீஷ்குமாருக்கு திருமணம் ஆன பின்பு இருவரும் பிரிந்துவிட்டார்கள். ஆனால் சதீஷ்குமார் அந்தப் பெண்ணிடம், "எனக்குத் திருமணமானால் என்ன... நாம் நண்பர்களாகப் பழகுவோம்" என்று சொல்லி மீண்டும் பேசத் தொடங்கியிருக்கிறான். பின்பு ரம்யாவுக்குத் தேவையான உதவிகளைச் செய்வது போன்று நடித்துப் பழகியிருக்கிறான்.

திருச்சி போலீஸார்
திருச்சி போலீஸார்

அவரது ரூமில் ரம்யா தூங்கியிருந்தபோது அவளுக்கே தெரியாமல் அந்தரங்கப் புகைப்படத்தை எடுத்து வைத்திருக்கிறான். இந்தநிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக அந்தப் பெண் அவரது வீட்டுக்குச் செல்ல, அந்தப் பெண்ணை மீண்டும் சென்னைக்கு வரச்சொல்லி டார்ச்சர் செய்திருக்கிறான். அதோடு அந்தப் பெண்ணின் அந்தரங்கப் புகைப்படத்தை எடுத்து அனுப்பச் சொல்லி டார்ச்சர் கொடுத்திருக்கிறான். அவள் முடியாது என்று மறுக்க, சதீஷ்குமார் தான் எடுத்து வைத்திருந்த புகைப்படத்தை ரம்யாவின் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பியிருப்பதோடு, சோஷியல் மீடியாவில் பதிவிடப்போவதாக மிரட்டியிருக்கிறான். ஒருகட்டத்தில் அவன் எல்லை மீற, புகார் கொடுத்தார். நாங்களும் ரம்யாவைப் பேசவைத்து அவனை இங்கு வரவழைத்தோம். பின் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளோம்" என்றார்கள்.

அடுத்த கட்டுரைக்கு