Published:Updated:

வாணியம்பாடி: காதலியைக் கொல்ல முயற்சி! போலீஸ் தேடிய இளைஞன் தூக்கில் தொங்கிய மர்மம்!

தூக்கில் தொங்கிய இளைஞன்
தூக்கில் தொங்கிய இளைஞன்

வாணியம்பாடியில், காதலியின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பி ஓடிய இளைஞன் தூக்கில் சடலமாகத் தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி மில்லத் நகரைச் சேர்ந்த 24 வயது இளைஞன் சசிகுமார், அதே பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண்ணை காதலித்துவந்திருக்கிறார். இருவரும் வெவ்வேறு சமூகம். என்றாலும், இளம்பெண்ணைத் திருமணம் செய்யும் நோக்கத்துடனேயே அந்த இளைஞர் காதலித்துவந்ததாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில், சில தினங்களாகக் காதல் ஜோடியிடையே கருத்து வேறுபாடு காரணமாகத் தகராறு ஏற்பட்டிருக்கிறது. நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில், காதலிக்கு போன் செய்து, சந்தித்துப் பேச அழைத்திருக்கிறார் சசிகுமார். இளம்பெண்ணும் தன் வீட்டுப் பின்பகுதியிலுள்ள காலி மைதானத்துக்குச் சென்றிருக்கிறார்.

சசிகுமாரின் வீடு
சசிகுமாரின் வீடு

இரவு நேரம் என்பதால், அங்கு ஆள் நடமாட்டமில்லை. இருவரும் சந்தித்த நிலையில், அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது, ஆத்திரமடைந்த சசிகுமார் முன்கூட்டியே மறைத்து எடுத்துவந்திருந்த கத்தியை எடுத்து இளம்பெண்ணின் கழுத்தை அறுத்துக் கொல்ல முயன்றிருக்கிறார். கழுத்தறுப்பட்டதால் ரத்தம் பீறிட்டுக் கொட்டியிருக்கிறது. இளம்பெண் அலறி கூச்சலிட்டதால், அச்சமடைந்த காதலன் சசிகுமார் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். கழுத்திலிருந்து ரத்தம் சொட்டச் சொட்ட தன் வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டியபோது, மயங்கி விழுந்திருக்கிறார் அந்த இளம்பெண்.

சத்தம் கேட்டு கதவைத் திறந்த பெற்றோர், உயிருக்குப் போராடிய மகளைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக, வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அவரைத் தூக்கிச் சென்று அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக, அங்கிருந்து வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். இளம்பெண்ணுக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இது தொடர்பாக, பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில், வாணியம்பாடி நகர காவல் நிலைய போலீஸார், சசிகுமாரின் வீட்டுக்கு விரைந்தனர். அப்போது, சசிகுமார் வீட்டிலுள்ள அறையில் தூக்கில் பிணமாகத் தொங்கியதைக் கண்டு திடுக்கிட்டனர்.

சசிகுமார்
சசிகுமார்

அந்த இளைஞரின் உடலையும் மீட்ட போலீஸார், பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கழுத்தறுக்கப்பட்ட இளம்பெண்ணும், தற்கொலை செய்துகொண்ட இளைஞரும் உண்மையிலேயே காதலித்து வந்தார்களா... அப்படியெனில் அவர்களுக்குள் இந்தக் கொடூரம் நிகழ என்னக்காரணம்... இருண்ட பகுதியில், அதுவும் இரவு 11 மணியளவில், காதலன் அழைத்தாலும் அந்த இளம்பெண் ஏன் செல்ல வேண்டும்... கழுத்தை அறுத்த பின்பு அந்த இளைஞர் தூக்கில் தொங்கிய மர்மம் என்ன ஆகிய சந்தேகக் கேள்விகளுக்கு விடை தேடிவருகிறது, காவல்துறை. இளம்பெண்ணுக்கு சுயநினைவு திரும்பியவுடன், அவரிடம் விசாரணை நடத்தவும் காவல்துறையினர் முடிவு செய்திருக்கிறார்கள். இந்தச் சம்பவம், வாணியம்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு