புதுக்கோட்டை மாவட்டம், ஆவூர் அருகே மண்டையூர் பகுதியைச் சேர்ந்தவர் ரெங்கசாமி (60). இவரின் மனைவி வள்ளி (58). இவர்களுக்கு பாலசுந்தர், கோபி என்ற இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவர்களில் மகளுக்குத் திருமணமாகிவிட்டது. கோபி, பட்டப்படிப்பு முடித்துவிட்டு வெளிநாட்டில் வேலை பார்த்துவருகிறார். பாலசுந்தர் கேட்டரிங் படித்து முடித்துவிட்டு, கடந்த சில மாதங்களாகவே வீட்டுக்குள் பிரமை பிடித்ததுபோல் இருந்திருக்கிறார். அவ்வப்போது, தாய், தந்தை மற்றும் மகன் மூவருக்குமிடையே வாக்குவாதத்தோடு சண்டையும் ஏற்பட்டுவந்திருக்கிறது.

இதைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்கள் பலரும், பாலசுந்தரை மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வலியுறுத்தியுள்ளனர். ஆனால், உறவினர்கள் சிலரோ, பூசாரியை வரவழைத்து பூஜை செய்யலாம் என்று ஐடியா கொடுத்திருக்கின்றனர். உறவினர்கள் சொன்னபடி பூசாரியை வரவழைத்திருக்கிறார் ரெங்கசாமி. ஆனால் பூசாரிக்கு பாலசுந்தர் ஒத்துழைப்பு தரவில்லை எனக் கூறப்படுகிறது. பூசாரி சென்ற பிறகு ரெங்கசாமியும், அவரின் மனைவி வள்ளி இருவரும் கழுத்து, முகம் ஆகிய இடங்களில் கத்தியால் குத்தியும, வெட்டியும் படுகொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தனர்.
இது குறித்து, மண்டையூர் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். போலீஸார் விசாரணையில் தாய், தந்தை இருவரையும், மகனே படுகொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தாய், தந்தையைப் படுகொலை செய்துவிட்டு தலைமறைவாகாத பாலசுந்தர், "நான்தான் ரெண்டு பேரையும் கொன்னேன். அதுக்கு என்ன இப்ப... என்ன வேணும்னாலும் பண்ணிக்கோங்க’’ என்று கூறி போலீஸாருக்கே அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
போலீஸார், "ரெங்கசாமியும்-வள்ளியும் விவசாய வேலை செய்துவந்திருக்கின்றனர். பாலசுந்தரை கேட்டரிங் படிக்க வைத்திருக்கின்றனர்.

ஆனாலும், சரியான வேலை கிடைக்காததால், வீட்டிலேயே இருந்திருக்கிறார். வீட்டு வேலைகளை இழுத்துப் போட்டு செய்தாலும், தாய், தந்தை தன்னை மதிப்பதில்லை என்றிருக்கிறார். மேலும் `என்னை இருவரும் சேர்ந்து தனிமைப்படுத்திவிட்டனர். எனக்கு உரிய அங்கீகாரம் இல்லாத இந்த வீட்டில் இருக்கவும் கூடாது. கொடுக்காதவர்களும் இருக்கக் கூடாது என்று நோக்கிலேயே தாய், தந்தை இருவரையும் கொடூரமாக கொலை செய்தேன்’ எனக் குற்றவாளி வாக்குமூலம் அளித்திருக்கிறார்’’ என்றனர்.
குடும்பத் தகராறில் பெற்ற தாய், தந்தையையே மகன் படுகொலை செய்த சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.