Published:Updated:

`நான்தான் முக்கியம் என்றான்; இப்போ கிண்டலடிக்கிறான்!' - வீடியோ வெளியிட்டு வாலிபர் தற்கொலை

சிந்து ஆர்

``மகேஷ் என்னுடன் நெருங்கிய நட்பில் இருந்தான். அவனுக்கு எல்லோரையும்விட நான்தான் முக்கியம் என்று அன்பாகப் பேசி என்னை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டான். இப்போது நண்பர்களிடம் என்னைப் பற்றிச் சொல்லி கிண்டலடிக்கிறான்.''

மகேஷ் மற்றும் மணிகண்டன்
மகேஷ் மற்றும் மணிகண்டன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் சமபால் ஈர்ப்புக்குத் தன்னை பயன்படுத்திய தம் நண்பர், பின்னர் தன்னை அவமானப்படுத்திவிட்டதாகக் கூறி வாலிபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு முன்பு கடிதம் எழுதி வைத்துவிட்டும் உருக்கமாகப் பேசி வீடியோ எடுத்து வாட்ஸ் அப்பில் அனுப்பியதாலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், சூரப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (24). இவரும் சூரப்பள்ளத்தை அடுத்த ஈத்தன்காடு பகுதியைச் சேர்ந்த மகேஷ் என்பவரும் நட்பாகப் பழகியுள்ளனர். ஓசூரில் கட்டட வேலை செய்துவந்த மணிகண்டனிடம் வேலை கேட்டு அவருடன் சென்றுள்ளார் மகேஷ். வேலை செய்த இடத்தில் மகேஷும் மணிகண்டனும் நெருக்கமாக இருந்துள்ளனர். பின்னர் ஊருக்கு வந்த பிறகும் இவர்களது நெருக்கம் தொடர்ந்துள்ளது.

வீடியோவில் பேசும் மணிகண்டன்
வீடியோவில் பேசும் மணிகண்டன்

இந்த நிலையில் மகேஷுக்கு திருமணம் ஏற்பாடு நடந்து வந்ததாக தெரிகிறது. எனவே மணிகண்டனுடனான நட்பை கைவிட்டுள்ளார் மகேஷ். மேலும் நெருங்கி பழகிய மணிகண்டனையும் கிண்டல் செய்து, உதாசீனப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை அரளிவிதை அரைத்துத் தின்றும், பூச்சிக்கொல்லி மருந்து தின்றும் மணிகண்டன் தற்கொலை செய்துள்ளார்.

இந்த வழக்கை தற்கொலை எனக் காவல்துறையினர் வழக்குபதிவு செய்திருந்தனர். இதற்கிடையில் கடந்த புதன்கிழமை மணிகண்டனின் பைக்கில் இருந்து ஒரு டைரி மற்றும் மொபைல் போன் ஆகியவற்றைக் காவல்துறையினர் கண்டுபிடித்தனர். டைரியில் 15 பக்கம் அளவில் மகேஷுடனான நட்பு குறித்து மணிகண்டன் எழுதியுள்ளார். மேலும், மொபைலில் மணிகண்டன் 10 நிமிடங்கள் பேசும் வீடியோவும் இருந்துள்ளது.

எனது தற்கொலைக்கு மகேஷ்தான் காரணம். மகேஷ் நான் உன்னை சும்மா விடமாட்டேன்டா. அம்மா என்ன மன்னிச்சுடு. அடுத்த ஜென்மத்திலும் நன் உன் மகனாகப் பிறக்கணும்.
தற்கொலை செய்த மணிகண்டன்

அந்த வீடியோவில், "மகேஷ் என்னுடன் நெருங்கிய நட்பில் இருந்தான். அவனுக்கு எல்லாரையும்விட நான்தான் முக்கியம் என்று அன்பாகப் பேசி என்னை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டான். இப்போது என்னை ஏமாற்றிவிட்டு வேலைக்குப் போகும் இடத்தில் நண்பர்களிடம் என்னைப் பற்றிச் சொல்லி கிண்டலடிக்கிறான். எனது நடையைப் பற்றிக் குறை சொல்லி கிண்டலடிக்கிறான்.

எனது தற்கொலைக்கு மகேஷ்தான் காரணம். மகேஷ் நான் உன்னை சும்மா விடமாட்டேன்டா. அம்மா என்னை மன்னிச்சுடு. அடுத்த ஜென்மத்திலும் நான் உன் மகனாகப் பிறக்கணும்" எனப் பேசிய மணிகண்டன் கண்களில் கண்ணீர் பெருகியது. கைகளை அசைத்தபடி பாய் எனக் கூறுவதுடன் அந்த வீடியோ முடிகிறது. இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றிய ராஜாக்கமங்கலம் போலீஸார் மகேஷை இன்று கைது செய்தனர்.