Published:Updated:

புதுக்கோட்டை: வெறுங்கையுடன் எப்படி வீட்டுக்குச் செல்வது?! - வேலை இழப்பால் உயிரை மாய்த்த இளைஞர்

தற்கொலை
தற்கொலை

`வேலை பார்த்த நிறுவனத்தில் இப்போ வேலை இல்லை. சொந்த ஊருக்குப் போகச் சொல்லி கட்டாயப்படுத்துறாங்கம்மா’ என்று தாய் செல்வத்திடம் கூறிப் புலம்பியிருக்கிறார். இதனால், மன உளைச்சலிலிருந்த நிலையில் தனது அறையில் தூக்கு மாட்டி, தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

புதுக்கோட்டை மாவட்டம், மழையூர் அருகேயுள்ள பொன்னன் விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாக்கண்ணு. இவரின் மனைவி செல்வம். ராஜாக்கண்ணு-செல்வம் தம்பதியரின் மகன் சந்திரசேகரன் (29). ராஜாக்கண்ணு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்து ஒன்றில் உயிரிழந்துவிட்டார். ராஜாக்கண்ணுவின் திடீர் இறப்பால் அந்த குடும்பம் நிலைகுலைந்து போயிருந்தது. குடியிருக்க, சொந்த வீடும் இல்லை. செல்வத்தின் சகோதரர் அந்தக் குடும்பத்துக்குத் தங்கள் வீட்டில் அடைக்கலம் கொடுத்தனர்.

தற்கொலை செய்துகொண்ட சந்திரசேகரன்
தற்கொலை செய்துகொண்ட சந்திரசேகரன்

தாய் செல்வம் கூலி வேலை செய்து சந்திரசேகரனைப் பட்டப்படிப்பு படிக்கவைத்திருந்தாலும், பல இடங்களில் தேடியும் வேலை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. செல்வமும் உடல்நலக்குறைவால் தொடர்ந்து கூலி வேலை பார்க்க முடியாத சூழலில் குடும்பம் ரொம்பவே சிரமப்பட்டுக்கொண்டிருந்தது. தொடர்ந்து, சொந்த ஊரில் பிழைக்க வழியில்லை என்பதால், செல்வம் தன் உறவினர்களிடமும் வெளியிலும் ரூ.6 லட்சம் வரை வட்டிக்குக் கடன் வாங்கி, மகன் சந்திரசேகரனை சிங்கப்பூருக்கு வேலைக்கு அனுப்பிவைத்தார்.

சில மாதங்கள் மட்டுமே வேலை பார்த்த நிலையில், உலகம் முழுவதையும் அச்சுறுத்திய கொரோனா வைரஸால் சந்திரசேகரன் வேலை பார்த்த நிறுவனம் மூடப்பட்டது. தொடர்ச்சியாக ஐந்து மாதங்களுக்கும் மேலாகச் சந்திரசேகரனுக்கு வேலை இல்லாததால், எந்த வருமானம் இல்லை. ஊரில் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாத நிலை. கடனை எப்படி அடைக்கப்போகிறோம்...

புதுக்கோட்டை: வெறுங்கையுடன் எப்படி வீட்டுக்குச் செல்வது?! - வேலை இழப்பால் உயிரை மாய்த்த இளைஞர்

வீட்டுக்கு வந்து என்ன செய்யப்போகிறோம் என்று தெரியாமல், அங்கு புலம்பித் தவித்திருக்கிறார் சந்திரசேகரன். சில தினங்களுக்கு முன்னர் ``நான் வேலை பார்த்த நிறுவனத்தில் இப்போ வேலை இல்லை. சொந்த ஊருக்குப் போகச் சொல்லி கட்டாயப்படுத்துறாங்கம்மா’’’ என்று தாய் செல்வத்திடம் கூறிப் புலம்பியிருக்கிறார். தாய் ஆறுதல்படுத்தியிருக்கிறார்.

இந்த நிலையில்தான், தொடர் மன உளைச்சலிலிருந்தவர் தனது அறையில் தூக்கிட்டு, தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். சந்திரசேகரனின் உடல் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

இது குறித்து சந்திரசேகரனின் உறவினர் ஒருவரிடம் கேட்டபோது, ``கணவர் இறந்தநிலையில், மகனை மட்டுமே நம்பியிருந்த செல்வம் தனது மகனுக்காக, ஆங்காங்கே வட்டிக்குக் கடன் வாங்கி சிங்கப்பூருக்கு அனுப்பிவைத்தார். சந்திரசேகர் மாதங்கள் மட்டுமே அங்கு வேலை பார்த்திருப்பார். அதன் பிறகு கொரோனா பிரச்னை வந்துவிட்டது.

சந்திரசேகரன்
சந்திரசேகரன்

ஆறு மாங்களுக்கும் மேலாக வேலை இல்லை. செலவுக்கே வழியின்றி கஷ்டப்பட்டிருக்கிறார். வேலை பார்த்த நிறுவனம் வீட்டுக்குப் போகச்சொல்லிக் கூறியிருக்கிறது. வெறுங்கையுடன் எப்படி வீட்டுக்குச் செல்வது என்று யோசித்து, தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். அவரையே நம்பி இருந்த தாய்க்கும் அவரது குடும்பத்துக்கும் தமிழக அரசு நிவாரண உதவி செய்ய வேண்டும். வெளி நாட்டில் தற்போது இவரைப்போலப் பலரும் வேலைவாய்ப்பின்றி தவிக்கின்றனர். அவர்களுக்கும் அரசு உதவிகள் செய்ய வேண்டும்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு