Published:Updated:

ஆவடி: பாதுகாப்புப் பணியின்போது துப்பாக்கியால் சுட்டு, தற்கொலை செய்துகொண்ட விமானப்படை வீரர்!

ஆவடி விமானப்படை
ஆவடி விமானப்படை

ஆவடி விமானப்படை பயிற்சி மையத்தில் பாதுகாப்புப் பணியின்போது விமானப்படை வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு, தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் இந்திய விமானப்படை பயிற்சித் தளம் அமைந்துள்ளது. இங்கு விமானப்படை வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கும் மையமும், தலைமை அலுவலகமும் செயல்பட்டுவருகின்றன. இந்த விமானப்படை தளத்தில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆகாஷ் விஸ்வகர்மா (23) என்ற விமானப்படை வீரர் கடந்த மூன்று ஆண்டுகளாக கண்காணிப்பு கோபுரத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவந்திருக்கிறார்.

இந்தநிலையில், நேற்று மாலை சுமார் 3 மணியளவில் ஆகாஷ் விஸ்வகர்மா வழக்கம்போல் பணிக்கு வந்திருக்கிறார். விமானப்படைத் தளத்தின் உயர் கண்காணிப்பு கோபுரத்தில் இரண்டு மணி நேரத்துக்கு ஒருவர் என்ற முறையில் வீரர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில், சரியாக 3 மணிக்குக் கோபுரத்துக்குச் சென்ற விஸ்வகர்மாவைப் பணி மாற்றுவதற்காக 5 மணிக்கு மற்றொரு விமானப்படை வீரர் கண்காணிப்பு கோபுரத்தை நோக்கிச் சென்றிருக்கிறார்.

துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட விமானப்படை வீரர்!
துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட விமானப்படை வீரர்!
Representational Image

அப்போது அங்கு திடீரென துப்பாக்கிச் சத்தம் கேட்டிருக்கிறது. அதையடுத்து, பணியிலிருந்த சக வீரர்கள் சத்தம் வந்த கண்காணிப்பு கோபுரத்தை நோக்கி விரைந்திருக்கின்றனர். அங்கு ஆகாஷ் விஸ்வகர்மா தன் இருக்கையில் அமர்ந்தவாறு நெற்றியில் துப்பாக்கி குண்டு துளைக்கப்பட்டு ரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடந்திருக்க்கிறார். அதைக் கண்டு அதிர்ந்துபோன சக வீரர்கள் உடனடியாக விமானப்படை உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த உயரதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும், சென்னையிலிருந்து தடய அறிவியல் நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து ஆய்வு மேற்கொண்டனர். விமானப்படை அதிகாரிகள் தரப்பில், வீரர் ஆகாஷ் விஸ்வகர்மா கோபுரத்தில் பணியிலிருந்தபோது தான் வைத்திருந்த 'இன்சாஸ்' வகை துப்பாக்கியால் தனது நெற்றியில் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

விமானப்படைத் தளத்தில் வீரர் துப்பாக்கியால் சுட்டு, தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து அதிகாரிகள் தகவல் தெரிவித்ததை அடுத்து, அங்கு விரைந்த முத்தாபுதுப்பேட்டை போலீஸார் உயிரிழந்த வீரரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காகச் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துவிட்டு, வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். முதற்கட்டமாக, போலீஸார் உயிரிழந்த வீரர் ஆகாஷ் விஸ்வகர்மா பணியில் ஈடுபட்டுவந்த கண்காணிப்பு கோபுரத்தின் அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துவருகின்றனர்.

மத்திய அரசின் விமானப்படைத் தளத்தில் நடந்துள்ள இந்த தற்கொலைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ராணிப்பேட்டை: `இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை!’ - திருமணம் முடிவான நிலையில் வங்கி அதிகாரி தற்கொலை
அடுத்த கட்டுரைக்கு