Published:Updated:

`காலையில் டிபன் கடை; மதியம் செயின் பறிப்பு!' -சென்னையில் கணவரின் தம்பியுடன் சிக்கிய இளம்பெண்

பேச்சியம்மாளிடம் செயினை பறித்துவிட்டுச் செல்லும் இளைஞர், இருசக்கர வாகனத்தில் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இதுதொடர்பாக, 64 சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர்.

ரேவதி
ரேவதி

சென்னை அம்பத்தூரை அடுத்த கள்ளிக்குப்பத்தைச் சேர்ந்தவர் பேச்சியம்மாள் (42). இவர் வீட்டிலேயே மளிகைக் கடை நடத்திவருகிறார். கடந்த 6-ம் தேதி மதியம் தனியாக கடையில் இருந்துள்ளார். மதிய நேரம் என்பதால் அந்தப்பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லை. இந்தச் சமயத்தில் இளைஞர் ஒருவர் பேச்சியம்மாளின் கடைக்குச் சென்று பொருள்களைக் கேட்டுள்ளார்.

சிசிடிவியால் சிக்கிய ரேவதி, ராஜேஷ்
சிசிடிவியால் சிக்கிய ரேவதி, ராஜேஷ்

இதையடுத்து, மளிகைப் பொருள்களைப் பேச்சியம்மாள் எடுத்துக்கொண்டிருந்தபோது அவர் அணிந்திருந்த தங்கச் செயினை அந்த இளைஞர் பறித்தார். இதை எதிர்பார்க்காத பேச்சியம்மாள், அந்த நபருடன் கடுமையாகப் பேராடினார். ஒருகட்டத்தில் பேச்சியம்மாளை தாக்கிவிட்டு செயினோடு அந்த நபர் தப்பிச் சென்றுவிட்டார். பேச்சியம்மாளின் அலறல் சத்தம் கேட்டு அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அங்கு வந்தனர். அவர்களிடம் செயின் பறிபோன விவரத்தைக் கூறியிருக்கிறார்.

`திருட்டில் இது புதுரகம்; டார்க்கெட் உறவினர்கள் வீடு!' - இன்ஜினீயர் காதல் ஜோடி சிக்கியது எப்படி?

இதன் தொடர்ச்சியாக, அந்த இளைஞரை அங்குள்ளவர்கள் தேடியுள்ளனர். ஆனால், அதற்குள் அவர் எஸ்கேப் ஆகிவிட்டார். செயினைக் காப்பாற்றப் போராடியதில் பேச்சியம்மாளின் முகத்திலும் கழுத்திலும் காயங்கள் ஏற்பட்டன. இதனால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், அம்பத்தூர் உதவி கமிஷனர் கண்ணனிடம் செயின் பறிக்கப்பட்ட விவரம் கொண்டு செல்லப்பட்டது. பேச்சியம்மாளின் நிலைமையைப் பார்த்த அம்பத்தூர் போலீஸார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.

பைக்கில் செல்லும் ரேவதி, ராஜேஷ்
பைக்கில் செல்லும் ரேவதி, ராஜேஷ்

அம்பத்தூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பெரியதுரை தலைமையிலான தனிப்படை போலீஸார் செயின் பறிப்பு நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது பேச்சியம்மாளிடம் செயினை பறித்துவிட்டுச் செல்லும் இளைஞர், இருசக்கர வாகனத்தில் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அந்த வாகனம் செல்லும் வழியில் உள்ள 64 சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர்.

சிசிடிவி கேமராவில் வாகனத்தை ஓட்டியவர் ஹெல்மெட்டும் ரெயின் கோட்டும் அணிந்திருந்ததால் அவரை அடையாளம் காண முடியவில்லை. அதேநேரத்தில் பின்னால் அமர்ந்திருந்த இளைஞரின் முகம் மற்றும் வாகனத்தின் பதிவு நம்பர் தெளிவாகத் தெரிந்தது. அதை வைத்து போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். இதில், வாகனத்தின் பதிவு எண் போலி என்பது தெரிந்தது. தொடர்ந்து, அந்த இளைஞர் குறித்த தகவல்களை போலீஸார் சேகரித்தனர்.

ரேவதியின் பைக்
ரேவதியின் பைக்

அதேநேரத்தில் செயினைப் பறித்துச் சென்றவர்களின் வாகனம், வில்லிவாக்கம் சுரங்கப்பாதையில் வலதுபக்கமாக திரும்பியதை போலீஸார் கண்டறிந்தனர். அதனால் வில்லிவாக்கம் சுரங்கப்பாதை பகுதியில் உள்ள இடங்களில் 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக சப்-இன்ஸ்பெக்டர் முபாரக், அங்கேயே முகாமிட்டார். அப்போது, சிசிடிவியில் பார்த்த வாகனத்தின் நிறத்தில் அவ்வழியாக பெண் ஒருவர் 11-ம் தேதி வந்தார். அதைப்பார்த்ததும் வாகனச் சோதனையில் ஈடுபட்ட போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், வாகனத்தின் பதிவு நம்பர் வித்தியாசமாக இருந்ததால் போலீஸார் முதலில் தயங்கினர்.

பின்னர் அந்தப் பெண்ணை போலீஸார் வழிமறித்து விசாரித்தனர். அப்போது எவ்வித பதற்றமும் இல்லாமல் சப்-இன்ஸ்பெக்டர் முபாரக் கேட்ட கேள்விகளுக்கு அந்தப் பெண் பதிலளித்தார். இந்தச் சமயத்தில் சிசிடிவி-யில் வாகனத்தை ஓட்டியவரின் கைகளில் வளையல் இருந்தது. அதே வளையலை அந்தப் பெண்ணின் கையில் பார்த்ததும் சப்-இன்ஸ்பெக்டர் உஷாரானார். `உங்களிடம் விசாரிக்க வேண்டும், காவல் நிலையத்துக்கு வாருங்கள்' என்று அந்தப் பெண்ணிடம் போலீஸார் கூறினர்.

ரேவதி
ரேவதி

காவல் நிலையத்தில் வைத்து அந்தப் பெண்ணிடம் விசாரித்தபோதுதான் பேச்சியம்மாளிடம் செயின் பறித்ததில் அவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

விசாரணையில் அவரின் பெயர் ரேவதி (30), வில்லிவாக்கம் மேஸ்திரி தெருவைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது. இதையடுத்து, ரேவதியிடம் விசாரித்தபோது செயின் பறிப்பில் ஈடுபட்டது அவருடைய கணவரின் தம்பி ராஜேஷ் (31) எனத் தெரியவந்தது. இதையடுத்து, ரேவதி மூலம் ராஜேஷை போலீஸார் பிடித்தனர். பின்னர் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களிடமிருந்து மூன்றரை சவரன் தங்கச் செயின், இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``ரேவதி, வீட்டின் அருகே காலையில் டிபன் கடையும் மதியம் கணவரின் தம்பியுடன் சேர்ந்து திருட்டுத் தொழிலிலும் ஈடுபட்டுவந்துள்ளார். தொடர்ந்து ரேவதி குறித்து விசாரணை நடந்துவருகிறது" என்றார்.