கோவை மாவட்டம், அன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 28 – பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). பெயின்டிங் வேலை செய்துவருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 24 வயதான வடிவரசி (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) என்ற பெண்ணுக்கும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

நாளடைவில் இந்த நட்பு காதலாக மாறியிருக்கிறது. இதையடுத்து, இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்தனர்.
வடிவரசியின் வீட்டுக்குச் சென்று, அவருடைய பெற்றோரிடம் சுரேஷ் பெண் கேட்டிருக்கிறார். ஆனால், அவர்கள் மறுத்துவிட்டனர். பிறகு சுரேஷுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணமாகியிருக்கிறது. அதன் பிறகும்கூட சுரேஷ் – வடிவரசி தொடர்ந்து பேசிவந்திருக்கின்றனர்.

இந்த நிலையில், சுரேஷ் தன் வீட்டுக்கருகே ரத்தவெள்ளத்தில் மீட்கப்பட்டிருக்கிறார். போலீஸ் விசாரணையில், வடிவரசியுடன் எடுத்த பழைய படங்களைக் காண்பித்து, சுரேஷ் பிளாக்மெயில் செய்து பணம் பறித்துவந்ததாகக் கூறப்படுகிறது.
அப்படி மீண்டும் பணம் கேட்டபோதுதான், வடிவரசி மறைத்துவைத்திருந்த கத்தியால் சுரேஷின் கழுத்தை அறுத்தது தெரியவந்தது. அப்போது சுரேஷ்குமாரும் வடிவரசியைத் தாக்கியிருக்கிறார். பிறகு அலறல் சத்தத்தைக் கேட்ட மக்கள், அங்கு வந்து இருவரையும் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த விவகாரம் குறித்து அன்னூர் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர்.