Published:Updated:

`காதல் திருமணம்; ஆணவக்கொலை?!' - கணவர் குடும்பத்தினர்மீது இளம்பெண் பரபரப்பு புகார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கணவர் குடும்பத்தினர் மீது இளம்பெண் புகார்!
கணவர் குடும்பத்தினர் மீது இளம்பெண் புகார்!

ஏற்கெனவே, சாதி மாறித் திருமணம் செய்துகொண்டதால் அவருடைய குடும்பத்தினர் அவர்மீது கடும் கோபத்திலிருந்தனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த அயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். இவரின் மகள் அமுல் (25). அமுல் நேற்றைய தினம், தன்னுடைய கணவரின் குடும்பத்தினர் அவரை ஆணவக்கொலை செய்துவிட்டு, தன்னிடம் தகவல்கூட தெரிவிக்காமல் உடலை எரித்துவிட்டதாகக் கூறியதுடன், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருவள்ளூர் மாவட்டம், ஆரணி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இளம்பெண் அமுல் தன் புகார் மனுவில், ``நானும் ஆரணியை அடுத்த காரணி கிராமத்தைச் சேர்ந்த கௌதம் என்பவரும் காதலித்துவந்தோம். ஆனால், கௌதம் குடும்பத்தினர் நான் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவள் என்பதால் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும், கௌதம் அவர்களின் எதிர்ப்பை மீறி என்னை 2019-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். நங்கள் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சென்னையில் வசித்துவந்தோம். அண்மையில் பிரசவத்துக்காக நானும் என் கணவரும் பொன்னேரியை அடுத்த ஆவூரிலுள்ள என் அக்கா வீட்டுக்குச் சென்றிருந்தோம். கடந்த மாதம்தான் எங்களுக்குப் பெண் குழந்தை பிறந்தது.

கண்ணீர் அஞ்சலி போஸ்டர்
கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

இந்தநிலையில், கடந்த 17-ம் தேதி அன்று கெளதமின் உறவினர் ஒருவர் இறந்துவிட்டதாகக் கூறி அவரை அவருடைய பெற்றோர் காரணி கிராமத்துக்கு அழைத்தனர். அவரும், எங்களிடம் கூறிவிட்டு அங்கு சென்றார். ஆனால், அதன் பிறகு கௌதம் எங்களிடம் தொடர்புகொண்டு பேசக்கூட இல்லை. நான் தொடர்புகொண்டு பேச முயன்றும் முடியாமல் போனது. அதனால், எனக்குச் சந்தேகமும் பயமும் ஏற்பட்டது. அதையடுத்து, நான் உடனடியாக ஆவூரிலிருந்து என் குழந்தையை தூக்கிக்கொண்டு கெளதமின் வீட்டுக்குச் சென்றேன்.

பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய பெண் தலை துண்டித்துக் கொலை! - திண்டுக்கல்லில் அதிர்ச்சி

அப்போது, கெளதமின் வீட்டருகே அவர் இறந்துவிட்டதாகக் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் அடித்து ஒட்டப்பட்டிருந்தன. அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துபோன நான், கெளதமின் பெற்றோரிடம் கேட்டதற்கு அவர்கள் முறையாக என்னிடம் பதில் கூறாமல் மழுப்பினார்கள். கணவரின் மரணம் குறித்து மனைவிக்குக்கூட தகவல் தெரிவிக்காமல் அவசர அவசரமாக எரித்திருக்கிறார்கள்.

ஏற்கெனவே, சாதி மாறித் திருமணம் செய்துகொண்டதால் அவரின் குடும்பத்தினர், அவர்மீது கடும் கோபத்திலிருந்தனர். எனவே, என்னுடைய கணவரை அவரின் குடும்பத்தினர்தான் ஆணவக்கொலை செய்துவிட்டு, அதை மறைப்பதற்காக யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் எரித்துவிட்டனர். என் கணவரை ஆணவக்கொலை செய்த அவரின் குடும்பத்தினர் அனைவரையும் கைதுசெய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஆரணி காவல் நிலையம்
ஆரணி காவல் நிலையம்

புகாரைப் பெற்றுக்கொண்ட ஆரணி போலீஸார் வழக்கு பதிவு செய்து, கெளதமின் இறப்பு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இளம்பெண்ணின் ஆணவக்கொலை புகார், திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆரணி போலீஸாரிடம் இது தொடர்பாகக் கேட்டதற்கு, ``முதற்கட்ட விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. அது நிறைவுற்ற பின்னரே எங்களால் எதையும் உறுதியாகக் கூற முடியும்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு