Published:Updated:

பள்ளி ஆசிரியை தீக்குளித்துத் தற்கொலை! - திருமணத்துக்கு வற்புறுத்தியதால் விபரீதம்?! - போலீஸ் விசாரணை

பெற்றோர் திருமணத்துக்கு வற்புறுத்தியதால் இளம்பெண் ஒருவர் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருவள்ளூர் மாவட்டம், மப்பேட்டையை அடுத்த பன்னுர், அந்தோணியார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ஃபிரான்சிஸ். இவரின் மனைவி லில்லி. இந்தத் தம்பதிக்கு மொத்தம் ஐந்து மகள்கள். அவர்களில், மூத்த மகளுக்குத் திருமணம் ஆகிவிட்டது. இரண்டாவது மகள் விஷாலி (26). கள்ளம்பேடு பகுதியிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணியாற்றிவந்தார். மூத்த மகளுக்குத் திருமணம் முடிந்துவிட்டதால், விஷாலியின் பெற்றோர் அவருக்குத் திருமண வரன் பார்த்துவந்திருக்கின்றனர். ஆனால், விஷாலி ஆரம்பம் முதலே தனக்குத் தற்போது திருமணம் வேண்டாம் என்று மறுத்துவந்திருக்கிறார். அதற்கு அவருடைய பெற்றோர், ``உனக்குப் பிறகு இன்னும் மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். உனக்குத் திருமணம் முடிந்தால்தான், நாங்கள் அவர்களுக்கு வரன் பார்க்க முடியும். எனவே, நீ திருமணம் செய்துகொண்டுதான் ஆக வேண்டும்" என்று வற்புறுத்திவந்ததாகக் கூறப்படுகிறது.

மன உளைச்சல்
மன உளைச்சல்
Representational Image

பெற்றோரின் வற்புறுத்தலால் கடந்த சில நாள்களாகவே விஷாலி, மிகுந்த மன உளைச்சலில் இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் அவரின் பெற்றோர் மீண்டும் திருமணப் பேச்சை எடுக்கவே ஆத்திரமடைந்த விஷாலி, அவர்களுடன் வாக்குவாதம் செய்திருக்கிறார். அப்போது, விஷாலியின் பெற்றோர் அவரை திட்டியதாகக் கூறப்படுகிறது.

`மூன்று பிள்ளைகள் இருந்தும் கவனிக்க ஆளில்லை; தற்கொலை செய்து கொண்ட முதிய தம்பதி!'

அதனால் மனமுடைந்துபோன விஷாலி, நள்ளிரவில் தன் படுக்கையறைக் கதவைப் பூட்டிக்கொண்டு, உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். பற்றவைத்துக்கொண்ட சில நொடிகளில் உடல் முழுவதும் பரவிய தீயால் அவர் அலறித் துடித்தார். நள்ளிரவில் அலறல் சத்தம் கேட்டு, விழித்த குடும்பத்தினர் விஷாலி தீ வைத்துக்கொண்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மப்பேடு காவல் நிலையம்
மப்பேடு காவல் நிலையம்

அதையடுத்து, விஷாலியின் பெற்றோர் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து, அவரின் உடலில் பற்றியெரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து, மீட்டு ஆம்புலன்ஸில் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட விஷாலி அடுத்த சில மணி நேரங்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இளம்பெண்ணின் தற்கொலை தொடர்பாக அவருடைய தாயார் லில்லி அளித்த புகாரின்பேரில், மப்பேடு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு