வேலூர் சத்துவாச்சாரி இந்திரா நகரில், நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் இருந்த சிலர் தகராறில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சத்துவாச்சாரி போலீஸார், அவர்களைப் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அவர்களில், இரண்டு பேர் வழக்கத்துக்கு மாறாக டிப் டாப் உடை அணிந்திருந்தனர். ஆளுக்கும் ஆடைக்கும் பொருத்தமின்றி காணப்பட்டதால், சந்தேக கோணத்தில், டிப் டாப் ஆசாமிகளிடம் கிடுக்கிப்பிடியாக விசாரணை நடத்தினர். அப்போது, பெண் ஒருவரை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த திடுக்கிடும் தகவல்களை அவர்கள் உளறிக்கொட்டினர். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸார் தங்கள் பாணியில் விசாரணையைத் தொடர்ந்தபோது, அது குறித்த முழு விவரத்தைக் கூறியிருக்கிறார்கள்.

அந்தச் சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், ‘வேலூரிலிருக்கும் பிரபல தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் இளம்பெண் ஒருவர் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு காட்பாடியில் இருக்கும் திரையரங்கில் இரவு நேர காட்சியைப் பார்ப்பதற்காகத் தன் ஆண் நண்பருடன் சென்றிருக்கிறார். படம் முடிந்து நள்ளிரவு 12:30 மணியளவில், இரண்டு பேரும் தியேட்டருக்கு முன்ப் ஆட்டோவுக்காக நின்றுகொண்டிருந்தனர். அவர்களை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நான்கு பேர் ஒரே ஆட்டோவில் அவர்கள் முன்பு வந்து நின்றனர். ஆட்டோ ஓட்டிய நபர், ‘எங்கே செல்ல வேண்டும்?’ எனக் கேட்டதற்கு, ‘நான் பணிபுரியும் தனியார் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்’ என அந்தப் பெண் கூறியுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஆட்டோவில் ஓட்டுநரைத் தவிர்த்து, மேலும் மூன்று ஆண்கள் அமர்ந்திருந்ததைப் பார்த்த இருவரும் அதில் ஏறுவதற்குத் தயங்கியுள்ளனர். அதற்கு ஓட்டுநர், ‘இது ஷேர் ஆட்டோதான். நீங்கள் ஏறுங்கள்’ எனக் கூறியிருக்கிறார். இருவரும் ஆட்டோவில் ஏறிப் பயணித்தனர். காட்பாடியிலிருந்து வேகமாக வந்த ஆட்டோ கிரீன் சர்க்கிள் வந்ததும், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்திருக்கும் சர்வீஸ் சாலையை நோக்கித் திரும்பியது. இதனால், அதிர்ச்சியடைந்த பெண் ஊழியர், ‘இந்தப் பக்கம் ஏன் செல்கிறீர்கள்?’ என்று கேட்டதற்கு, ‘மருத்துவமனைக்குச் செல்லும் வழக்கமான சாலையில் பாதாள சாக்கடைப் பணி நடக்கிறது. அதனால், மாற்றுப் பாதையில் அழைத்துச் செல்கிறேன்’ எனக் கூறி மழுப்பியிருக்கிறார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிச் சென்ற ஆட்டோ திடீரென தனியார் ஷோ ரூம் பின்புறமுள்ள பாலாற்றுப் பகுதிக்குள் திரும்பியது. ஏதோ விபரீதம் நடக்கப்போவதை உணர்ந்த அந்தப் பெண்ணும், அவரின் ஆண் நண்பரும் கத்திக் கூச்சலிட முயன்றனர். அப்போது, அருகில் அமர்ந்திருந்த ஒருவர் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து, பெண்ணின் கழுத்தில்வைத்து மிரட்டியிருக்கிறார். அவரின் ஆண் நண்பருக்கும் முகத்தில் குத்துவிட்டிருக்கிறார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதையடுத்து, பாலாற்றுக்குள் சென்று ஆட்டோவை நிறுத்திய கும்பல், கத்திமுனையில் அந்தப் பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அவர்களிடமிருந்த செல்போன்கள், ஏ.டி.எம் கார்டுகளையும் அதன் ரகசிய எண்களையும் கேட்டுப் பெற்றுகொண்டனர். ‘இது பற்றி போலீஸில் புகார் செய்தால், தேடி வந்து கொலை செய்வோம்’ என மிரட்டியதுடன், அவர்களை அங்கேயே விட்டுவிட்டு ஆட்டோவில் அந்த கும்பல் தப்பிச் சென்றுள்ளது. தனக்கு நேர்ந்த கொடுமை வெளியே தெரிந்தால், அவமானம் எனக் கருதிய அந்தப் பெண், யாரிடமும் கூறாமல் அமைதியாக இருந்துள்ளார்.

மறுநாள் பாதிக்கப்பட்ட பெண்ணின் ஏ.டி.எம் கார்டிலிருந்து ரூ.40,000 எடுத்து அந்த நான்கு பேர் கும்பலும் பங்கு பிரித்துள்ளனர். அந்தப் பணத்தில்தான் டிப் டாப் உடை வாங்கி அணிந்துகொண்டு, மது குடித்துவிட்டு, அமர்க்களத்தில் ஈடுபட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக, மூன்று பேரை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்திருக்கும் போலீஸார், தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரைத் தேடிவருகிறார்கள். பாதிக்கப்பட்ட மருத்துவமனைப் பெண் ஊழியர் தரப்பிலோ அல்லது அவருடைய ஆண் நண்பர் தரப்பிலோ புகார் அளிக்கப்பட்டால் வழக்கு பதிவுசெய்து கைது நடவடிக்கை எடுக்கவும் தயாராகிவருகிறது சத்துவாச்சாரி போலீஸ்.