Published:Updated:

`தன்னுடன் வரும்படி வற்புறுத்திய கணவன்; மறுத்த மனைவி!’ - சேலத்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

சேலத்தில் கணவனைப் பிரிந்து வாழ்ந்த இளம்பெண் இரவில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, சேலம் மாநகர காவல் துறை தீவிர விசாரணையை மேற்கொண்டு கொலையாளியைக் கண்டுபிடிக்க 2 தனிப்படை அமைத்திருக்கிறார்கள்.

கொலை -
கொலை -

சேலம் மாநகராட்சி பொன்னம்மாப்பேட்டை அருகில் உள்ள அல்லிக்குட்டையில் உள்ள கங்காபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் மோகனேஸ்வரி. இவருக்கு வயது 21. இவருக்கும் சேலம் மன்னார்பாளையத்தைச் சேர்ந்த கட்டட தொழிலாளி கோபிக்கும் கடந்த 4 வருடத்துக்கு முன்பு திருமணம் ஆனது. இவர்களுக்கு சிபு என்ற 3 வயது மகன் இருக்கிறான்.

மோகனேஸ்வரி,கோபி
மோகனேஸ்வரி,கோபி
எம். விஜயகுமார்

மோகனேஸ்வரியும் அவரின் கணவர் கோபியும் கோவையில் வசித்துவந்துள்ளனர். கோபிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் தினமும் இரவில் மது அருந்திவிட்டு மனைவியை அடித்துத் துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுக் கடந்த 2 மாதத்துக்கு முன்பு மோகனேஸ்வரி தன் மகன் சிபுவை தூக்கிக்கொண்டு சேலத்தில் வசிக்கும் தன் தந்தை வீட்டுக்கு வந்துவிட்டார்.

பின்னர் மோகனேஸ்வரி சேலம் ராஜகணபதி கோயில் அருகில் உள்ள ஜவுளிக் கடையில் வேலைக்குச் சென்று வந்துள்ளார். பல முறை கோபி சேலம் வந்து மோகனேஸ்வரியை சந்தித்து தன்னுடன் மீண்டும் வருமாறு வற்புறுத்தினார். ஆனால், மோகனேஸ்வரி கணவருடன் செல்லவில்லை. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு கோபி சேலம் வந்தார்.

இரவு 9 மணியளவில் மோகனேஸ்வரி துணிக்கடையில் வேலை செய்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிவந்துள்ளார். பின்னர் மெயின் ரோட்டிலிருந்து வீட்டுக்கு நடந்துசென்றுள்ளார். அப்போது புதர் ஒன்றில் பதுங்கி இருந்த கோபி மோகனேஸ்வரியிடம் கோவையில் உள்ள தமது வீட்டுக்கு வரச் சொல்லி தகராறு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பிறகு இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. அப்போது கோபி, மோகனேஸ்வரியின் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த மோகனேஸ்வரி சிறிது நேரத்தில் துடிதுடித்து இறந்துவிட்டார்.

MURDER
MURDER

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த கோபி அங்கிருந்து தப்பியோடிவிட்டார். மோகனேஸ்வரியின் சடலத்தைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், அவரின் தந்தைக்கு தகவல் கொடுத்தனர். அவர் வீராணம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். வீராணம் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் காவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டு உடற்கூறாய்வு செய்ய சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இதையடுத்து, சேலம் மாநகர காவல் துறை ஆணையர் செந்தில்குமார் தீவிர விசாரணை மேற்கொண்டு கொலையாளியைக் கண்டுபிடிக்க 2 தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.