Published:Updated:

ஆவடி: மது அருந்தப் பணம் கேட்டுத் தகராறு செய்த கணவர்! - இரு குழந்தைகளுடன் விபரீத முடிவெடுத்த இளம்பெண்

இளம்பெண் தற்கொலை
இளம்பெண் தற்கொலை

ஆவடி அருகே கணவருடனான தகராறில் மனமுடைந்துபோன இளம்பெண், இரண்டு குழந்தைகளைக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டிருக்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த திருநின்றவூர் நடுக்குத்தகை கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (27). இவருடைய மனைவி கௌரி (24). இந்தத் தம்பதிக்கு தீக்சிதா (3) என்ற மகளும், அஸ்வின் (1) என்ற மகனும் இருந்தனர்.

பெயின்ட்டரான ரமேஷ், குடிப்பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டு, குடும்பச் செலவுக்குப் பணம் தராமல், மது அருந்திவிட்டு போதையில் தினமும் மனைவி கௌரியை அடித்துத் துன்புறுத்திவந்திருக்கிறார். அதன் காரணமாக, கணவன் - மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்திருக்கிறது.

நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால், ரமேஷ் வேலைக்குச் செல்லாமல் காலையிலேயே மது அருந்தப் பணம் கேட்டு மனைவி கௌரியிடம் தகராறில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரத்தில் ரமேஷ் கௌரியை அடித்துவிடடு வீட்டிலிருந்து வெளியிருக்கிறார். கணவர் தினம் தினம் குடித்துவிட்டு பிரச்னை செய்வதால் ,மிகுந்த மன உளைச்சலிலிருந்த கௌரி, தற்கொலை செய்துகொண்டு தன் உயிரை மாய்த்துக்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறார். ஆனால், தான் உயிரிழந்துவிட்ட பிறகு தன் குழந்தைகளின் நிலைமை என்னவாகும் என்பது குறித்து சில நிமிட சிந்தனையில் ஆழ்ந்த கௌரி, இரு குழந்தைகளையும் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொள்வதென்ற விபரீத முடிவை எடுத்திருக்கிறார்.

கணவன் மனைவி தகராறு
கணவன் மனைவி தகராறு

அதன்படி, கௌரி வீட்டின் மேற்கூரையிலிருந்த இரும்புக்கம்பியில் புடவையைக் கொண்டு இரு குழந்தைகளையும் தனித் தனியாகத் தூக்கில் தொங்கவிட்டு, அவர்கள் துடிதுடித்து இறந்ததை மனதை இரும்பாக்கிக்கொண்டு பார்த்துவிட்டு, தானும் ஓர் இரும்புக்கம்பியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். பொதுவாக, தம்பதி இருவரும் சண்டை போட்டுக்கொண்டால் சமாதானம் செய்ய வரும் வீட்டின் உரிமையாளர், நேற்றைய தினம் மட்டும் சற்றே காலதாமதமாக கௌரியைப் பார்க்க வந்திருக்கிறார்.

மாடி வீட்டில் வசிக்கும் கௌரியைப் பார்க்கப் படிக்கட்டுகளில் விரைவாக ஏறி வந்தவர்கள், ஜன்னல் வழியே மூன்று உடல்கள் ஊசலாடுவதைக் கண்டு அதிர்ச்சியில் மனம் பதறிப் போயிருக்கின்றனர். பின்னர், கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினரை அழைத்து காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர். சம்பவ இடத்துக்கு விரைந்த திருநின்றவூர் போலீஸார் கௌரி மற்றும் அவரது இரு குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காகச் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

குடும்பத் தகராறில் இரு குழந்தைகளைக் கொன்றுவிட்டு, இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டிருக்கும் சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஒரு சேர ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு