Published:Updated:

வேலூர்: குழந்தைத் திருமணம்; வயது வித்தியாசம்! - குடிகாரக் கணவனால் பறிக்கப்பட்ட 3 குழந்தைகளின் உயிர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சம்பவ இடத்தில் சோகத்தோடு திரண்டிருந்த மக்கள்
சம்பவ இடத்தில் சோகத்தோடு திரண்டிருந்த மக்கள்

``குழந்தைத் திருமணம், வயது வித்தியாசம், குடிப்பழக்கம் போன்ற காரணங்களால்தான் இந்த விபரீதச் சம்பவம் நடந்திருக்கிறது. மூன்று குழந்தைகளும் கழுத்து இறுக்கிக் கொலைசெய்யப்பட்டிருக்கிறார்கள்’’ என்று விவரிக்கிறது போலீஸ்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வேலூர் சலவன்பேட்டை, கச்சேரி தெருவைச் சேர்ந்தவர் தினேஷ். வயது 37. டைல்ஸ் ஒட்டும் கூலித் தொழிலாளி. இவரின் மனைவி ஜீவிதா. வயது 23. கணவரைவிட ஜீவிதா 14 வயது இளையவர். திருமணமாகும்போது, ஜீவிதாவுக்கு 16 வயது என்கிறார்கள் உறவினர்கள். இதுவே, பாலியல் குற்றம் என்கிறது காவல்துறை. தனது வயதை மறைத்து ஜீவிதாவைத் திருமணம் செய்துகொண்டிருக்கிறார் தினேஷ். திருமணமாகி ஏழு ஆண்டுகளான நிலையில், ஐந்தரை வயதில் அக்‌ஷயா என்ற மகள், நான்கு வயதில் நந்தகுமார் என்ற மகன், ஆறு மாத ஆண் குழந்தை என மூன்று பிள்ளைகள் இருந்தனர். ஆண் குழந்தைக்கு இன்னும் பெயர்கூட வைக்கவில்லை. இந்தநிலையில், தினமும் வேலைக்குச் சென்றுவிட்டு இரவில் வீடு திரும்பும் தினேஷ் தலைக்கேறிய மதுபோதையில் தள்ளாடிக்கொண்டு வந்திருக்கிறார். குடும்பச் செலவுக்கும் பணம் தராமல் இருந்திருக்கிறார். இதனால், கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்திருக்கிறது.

 ஜீவிதா
ஜீவிதா

சில நேரங்களில் மனைவியைத் தவறாகப் பேசி, அடித்து, உதைப்பதையும் தினேஷ் வழக்கமாகக்கொண்டிருந்ததாகவும் அக்கம் பக்கத்தினர் சொல்கிறார்கள். கணவனின் செயல் எரிச்சலடையச் செய்ததால், மூன்று பிள்ளைகளுடனும் அதே பகுதியிலுள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிடும் ஜீவிதாவைப் பெரியவர்கள் சமாதானம் செய்துவைத்து மீண்டும் மீண்டும் தினேஷிடமே அனுப்பிவைத்துள்ளனர். கணவன் திருந்திவிடுவார்; வாழ்க்கை ஒரு நாள் மாறும் என்ற நம்பிக்கையுடன் நாள்களைக் கடத்தியிருக்கிறார் ஜீவிதா. ஆனால், தினேஷ் திருந்திய பாடில்லை. கடந்த பத்து நாள்களுக்கு முன்பும் மதுபோதையில் மனைவியை அடித்து, உதைத்திருக்கிறார். இதனால், மனமுடைந்த ஜீவிதா குழந்தைகளுடன் வழக்கம்போல் தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார். இந்தநிலையில், நேற்று காலை தனது மூன்று குழந்தைகளுடனும் ஜீவிதா தனது வீட்டுக்குச் சென்றுவருவதாகத் தன் தாயிடம் கூறிச் சென்றிருக்கிறார்.

மாலை நேரமாகியும் ஜீவிதா, தாய் வீட்டுக்கு மீண்டும் செல்லவில்லை. இதனால், அவரின் தாய் கெஜலட்சுமி ஜீவிதாவை செல்போனில் தொடர்புகொண்டிருக்கிறார். பலமுறை அழைத்தும் அவர் போனை எடுக்காததால், தனது மகன் ஜெகதீஸ்வரனை அழைத்து, `அக்கா போனை எடுக்கவில்லை. போய் கூட்டிக்கிட்டு வா’ என்று கூறி அனுப்பிவைத்திருக்கிறார். ஜெகதீஸ்வரன் வந்து பார்த்தபோது, வீட்டு கதவு உட்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. கதவை நீண்ட நேரமாகத் தட்டியும் அவர் திறக்காததால், சந்தேகமடைந்த ஜெகதீஸ்வரன் ஜன்னல்வழியாக கதவின் உட்பக்கத் தாழ்ப்பாளைத் திறந்து உள்ளே சென்றிருக்கிறார். அப்போது, படுக்கையில் கைக்குழந்தை உட்பட மூன்று குழந்தைகளும் பேச்சு மூச்சின்றி சடலமாகக் கிடந்தனர். ஜீவிதா புடவையால் தூக்குப்போட்ட நிலையில் சடலமாகத் தொங்கிக்கொண்டிருந்தார். அதிர்ச்சியடைந்த ஜெகதீஸ்வரன் கதறி அழுதார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினரும் வீட்டுக்குள் ஓடி வந்து பார்த்து அதிர்ச்சியில் உறைந்துபோயினர்.

சம்பவ இடத்தில் சோகத்துடன் திரண்டிருந்த மக்கள்
சம்பவ இடத்தில் சோகத்துடன் திரண்டிருந்த மக்கள்

தகவலறிந்ததும், ஏ.எஸ்.பி ஆல்பர்ட் ஜான் தலைமையில் வேலூர் தெற்கு காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். குழந்தைகள் உட்பட நான்கு பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அந்த நேரத்தில், வீட்டுக்கு வராத கணவன் தினேஷின் செல் நம்பரை போலீஸார் தொடர்புகொண்டனர். அவர் சுவிட்ச் ஆஃப் செய்துவைத்திருந்தார். இரவு 8 மணிக்கு மேல்தான் அவர் சாவகாசமாக வீட்டுக்கு வந்திருக்கிறார். ``குழந்தைத் திருமணம், வயது வித்தியாசம், குடிப்பழக்கம் போன்ற காரணங்களால்தான் இந்த விபரீதச் சம்பவம் நடந்திருக்கிறது. மூன்று குழந்தைகளும் கழுத்து இறுக்கி கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அதன் பின்னரே ஜீவிதா தூக்கில் சடலமாகத் தொங்கியிருக்கிறார்’’ என்று விவரிக்கிறது போலீஸ். இதையடுத்து, கொலை மற்றும் சந்தேக மரணம் ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார், கணவன் தினேஷைக் கைதுசெய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு