Published:Updated:

வேலூர்: படிப்பை நிறுத்தி கட்டாயத் திருமணம்?! - இரண்டே நாள்களில் உயிரை மாய்த்துக்கொண்ட இளம்பெண்

திருமணமான இரண்டே நாளில், இளம்பெண் தூக்குப் போட்டு தற்கொலைச் செய்துகொண்ட சம்பவம், வேலூரில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

வேலூர், முத்து மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவரின் மனைவி லட்சுமி. இவர்களின் 21 வயது மகள் புவனேஸ்வரி, காட்பாடியிலிருக்கும் தனியார் நர்ஸிங் கல்லூரியில் பி.எஸ்சி மூன்றாம் ஆண்டு படித்துவந்தார். கடந்த 15-ம்தேதி, ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் சுமைதாங்கிப் பகுதியை சேர்ந்த ஒருவருடன் புவனேஸ்வரிக்குத் திருமணம் நடைபெற்றது. மறுவீடு அழைப்பு, விருந்து உபசரிப்பு போன்றவற்றுக்காக, தனது தாய் வீட்டில் கணவருடன் தங்கியிருந்தார் புவனேஸ்வரி. இந்த நிலையில், நேற்று அதிகாலை கழிவறைக்குச் சென்ற புவனேஸ்வரி நீண்ட நேரமாக வெளியே வரவில்லை. அவரின் குடும்பத்தினர் கழிவறைக் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, புடவையால் தூக்குப்போட்ட நிலையில் சடலமாகத் தொங்கிக்கொண்டிருந்தார்.

புவனேஸ்வரி
புவனேஸ்வரி

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவரின் உடலை மீட்டு வேலூரிலிருக்கும் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவர் இறந்து நீண்ட நேரமாவதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இதையடுத்து, உடல் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து, வேலூர் வடக்கு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டபோது, ‘‘படிப்பை முடித்துவிட்டுத்தான் திருமணம் செய்துகொள்வதாக புவனேஸ்வரி கூறியதாகவும், குடும்பத்தினர் கட்டாயப்படுத்தி திருமணம் செய்துவைத்ததால் அவர் உயிரை மாய்த்துக்கொண்டிருக்கிறார்’’ என்பதும் தெரியவந்தது.

திருமணமாகி இரண்டு நாள்கள்தான் ஆகின்றன என்பதால் ஆர்.டி.ஓ விஷ்ணு பிரியாவும் விசாரணை நடத்திவருகிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு