Published:Updated:

டெல்லி விவசாயிகள் போராட்டம்... இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை! - 4 பேரைப் பிடிக்க தனிப்படை

இளம்பெண் பாலியல் வன்கொடுமை
இளம்பெண் பாலியல் வன்கொடுமை ( representational image )

கடந்த மாதம் 11-ம் தேதியன்று டெல்லி எல்லையிலிருந்து பஞ்சாப்புக்கு கிசான் சோஷியல் ஆர்மி அமைப்பினருடன் அந்தப் பெண் ரயிலில் பயணம் செய்திருக்கிறார். அப்போது, அந்தப் பெண்ணை அமைப்பைச் சேர்ந்த சிலர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், டெல்லியில் போராட்டத்தைத் தொடங்கிய விவசாயிகள் ஒன்பது மாதங்கள் ஆகியும் வெயில், மழை, கொரோனா என எதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். நாடு முழுவதிலுமிருந்து பல்வேறு விவசாயச் சங்கங்கள் டெல்லி - பஞ்சாப் எல்லையில் கூடாரங்களை அமைத்துப் போராடிக்கொண்டிருக்கின்றனர். டெல்லியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவளிக்க அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமான விவசாயிகளும், சமூகச் செயற்பாட்டாளர்களும் கொரோனா லாக்டௌன்களுக்கு மத்தியிலும் சென்று கலந்துகொண்டுவருகின்றனர்.

அந்த வகையில், விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக மேற்குவங்கத்தின் ஹூக்ளி பகுதியில் கிசான் சோசியல் ஆர்மி என்ற விவசாய இயக்கத்தினர் கடந்த ஏப்ரல் மாதம் பொதுக்கூட்டம் ஒன்று நடத்தினர். அதில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 25 வயது பெண் செயற்பாட்டாளர் ஒருவரும் கலந்துகொண்டார். கூட்டத்தின் மூலம் கிசான் சோஷியல் அமைப்பினருடன் அறிமுகம் கிடைத்ததை அடுத்து அந்தப் பெண், தான் தொடர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராடப் போவதாகக் கூறியிருக்கிறார். கிசான் சோஷியல் ஆர்மி அமைப்பினரும் அந்தப் பெண்ணைப் போராட்டத்தில் கலந்துகொள்ள ஊக்கப்படுத்த, மேற்கு வங்கத்திலிருந்து கிளம்பி டெல்லிக்குத் தனியாகச் சென்று விவசாயிகள் அமைத்திருந்த கூடாரத்தில் தங்கியிருந்திருக்கிறார்.

டெல்லி போராட்டம்
டெல்லி போராட்டம்
AP

கடந்த மாதம் 11-ம் தேதியன்று டெல்லி எல்லையிலிருந்து பஞ்சாப்புக்கு கிசான் சோஷியல் ஆர்மி அமைப்பினருடன் அந்தப் பெண் ரயிலில் பயணம் செய்திருக்கிறார். அப்போது, அந்தப் பெண்ணை கிசான் அமைப்பைச் சேர்ந்த சிலர் ரயில் பயணத்தின்போதே பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. பஞ்சாப்புக்குச் சென்றவுடன், தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தொடர்பாக அந்த பெண் யாரிடமும் கூறவில்லை. இந்நிலையில், பஞ்சாப் வந்தடைந்த மறுநாளே கூடாரத்தில் தனியாகத் தங்கியிருந்த அந்தப் பெண்ணை மீண்டும் கிசான் சோஷியல் ஆர்மி அமைப்பைச் சேர்ந்த சிலர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

விவசாய அமைப்பை நம்பித் தனியாக வந்த தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்த நபர்களைப் பற்றி அந்த பெண் தன் தந்தையிடம் தொடர்புகொண்டு தொலைபேசியில் அழுது புலம்பியிருக்கிறார். நடந்தது பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது என்று அவர்கள் மிரட்டியதாகவும், அந்த இளம்பெண் அவரின் தந்தையிடம் கூறியிருக்கிறார்.

மேலும், நடந்ததைப் பற்றி வீடியோ வாக்குமூலமாகப் பதிவு செய்து அதையும் தனது குடும்பத்தினருக்கு அனுப்பிவைத்திருக்கிறார். இளம்பெண்ணின் குடும்பத்தினர் சம்பவத்தை விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர். அதைத் தொடர்ந்து போராட்ட களத்தில் இளம்பெண் மற்ற பெண்கள் தங்கியிருக்கும் டென்ட் பகுதியில் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில், கடந்த மாதம் 21-ம் தேதி கடும் காய்ச்சல் மற்றும் தொண்டை வலி ஏற்பட்டதால் அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அந்தப் பெண் செயற்பாட்டாளர் அனுமதிக்கப்பட்டார். அதில் இளம்பெண்ணுக்கு கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இளம்பெண் கடந்த மாதம் 30-ம் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இளம்பெண்ணின் வீடியோ வாக்குமூலத்தை வைத்து காவல் நிலையத்தில் பெண்ணின் குடும்பத்தினர் புகார் அளித்ததின் பேரில், போலீஸார் கிசான் சோஷியல் ஆர்மி அமைப்பைச் சேர்ந்த ஆறு பேர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர்.

பெண் செயற்பாட்டாளர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக சம்யுக்த கிசான் மோர்ச்சா விவசாயச் சங்கத் தலைவர்கள் கூறுகையில், "முதலில் இந்த விவகாரம் எங்கள் கவனத்துக்கு வந்தபோது நாங்கள் அதை விசாரித்தோம். அந்த நபர்கள் தங்கியிருந்த கூடாரங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன, அவர்களைப் போராட்டத்திலிருந்து ஒதுக்கிவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றனர்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
representational Image

ஆனால், மகளிர் அமைப்புகள் சம்பவம் குறித்துக் கூறுகையில், "சம்யுக்த கிசான் மோர்ச்சா தலைவர்களுக்கு இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் குறித்து முன்னதாகவே தெரியும். ஆனால், அவர்கள் இத்தனை நாள்களாக ஏன் அமைதி காத்தனர் என்று தெரியவில்லை. மேலும், அந்தப் பெண்ணின் பெற்றோரை நேரில் சந்தித்துப் பேசுவதற்கும் எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. உன்னத நோக்கத்துடன் வெயில், மழை பாராமல் உண்மையாக விவசாயிகள் போராடிக்கொண்டிருக்கும் தருணத்தில் இது போன்ற கசப்பான சம்பவங்கள் போராட்டத்தின் தன்மையைச் சீர்குலைத்துவிடுகின்றன" என்றனர்.

இந்தக் கொடூரச் சம்பவம் குறித்துப் பேசிய நகர காவல் அதிகாரி, ``டி.எஸ்.பி கண்காணிப்பில் மூன்று ஆய்வாளர்கள் அடங்கிய தனிப்படை குற்றவாளிகளை தேடிவருகிறது. சைபர் செல் உதவியும் நாடப்பட்டுள்ளது. வழக்கு நான்கு பேருக்கு எதிராக பதியப்பட்டுள்ளது” என்றார்.

ஆண் பெண் பேதமின்றி ஆயிரக்கணக்கானோர் ஒன்றிணைந்து மாதக்கணக்கில் போராடிக்கொண்டிருக்கும் களத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் விவசாயிகள் அனைவரையும் கடும் அதிருப்தியிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு