Published:Updated:

கேரளா: கொரோனா பாதித்த இளம் பெண்... ஆம்புலன்ஸில் பாலியல் வன்கொடுமை! - சிக்கிய ஓட்டுநர்

108 ஆம்புலன்ஸ் டிரைவர் நெளஃபல்
108 ஆம்புலன்ஸ் டிரைவர் நெளஃபல்

ஆறன்முளா விமான நிலையத்துக்காக நிலம் எடுக்கப்பட்ட ஒதுக்குப்புறமான பகுதியில் ஆம்புலன்ஸை நிறுத்தியிருக்கிறார் நெளஃபல். அங்கு ஆம்புலன்ஸிலிருந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

கேரள மாநிலம், பத்தணம்திட்டா மாவட்டம், அடூர் வடக்கோடத்துகாவு பகுதியிலிருந்து கொரோனா பாதித்த 45 வயது மற்றும் 20 வயது ஆன இரண்டு பெண்களுக்கு முதற்கட்ட சிகிச்சையளிக்க 108 ஆம்புலன்ஸில் கொரோனா சிகிச்சை மையத்துக்கு நேற்று இரவு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆம்புலன்ஸ் டிரைவர் நெளஃபல் மற்றும் இரண்டு பெண்கள் மட்டுமே ஆம்புலன்ஸில் இருந்தனர். 42 வயது பெண்ணை கோழஞ்சேரி பொது மருத்துவமனையிலும், 20 வயதுப் பெண்ணை பந்தளத்திலும் சிகிச்சைக்காகச் சேர்க்க வேண்டும் என நெளஃபலுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. வடக்கோடத்துகாவு பகுதியிலிருந்து சுமார் 18 கிலோமீட்டர் தூரத்திலுள்ள கோழஞ்சேரி மருத்துவமனையில் 45 வயது பெண்ணை கொண்டுபோய் விட்டார் நெளஃபல்.

அடுத்ததாக பந்தளம் மருத்துவமனைக்கு 20 வயது பெண்ணை ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றார். பந்தளம் செல்லும் வழியில் ஆறன்முளா விமான நிலையத்துக்காக நிலம் எடுக்கப்பட்ட ஒதுக்குப்புறமான பகுதியில் ஆம்புலன்ஸை நிறுத்தியிருக்கிறார் நெளஃபல். அங்கு ஆம்புலன்ஸில் இருந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

கேரள 108 ஆம்புலன்ஸ்
கேரள 108 ஆம்புலன்ஸ்
மாதிரி படம்

அந்தப் பெண்ணிடம் தவறாக நடந்துவிட்டு, தன்னை மன்னிக்கும்படி வேண்டியிருக்கிறார் ஆம்புலன்ஸ் டிரைவர் நெளஃபல். மேலும் இது பற்றி வெளியே கூற வேண்டாம் எனவும் அவர் கெஞ்சியிருக்கிறார். நெளஃபல் மன்னிப்புக் கேட்டதை அந்தப் பெண் தனது மொபைலில் ரகசியமாகப் பதிவு செய்திருக்கிறார். பின்னர் நெளஃபல் மீண்டும் ஆம்புலன்ஸை இயக்கி பந்தளம் மருத்துவமனையில் அந்தப் பெண்ணை இறக்கி விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். இது குறித்து அந்தப் பெண் நேற்று இரவு போலீஸில் புகாரளித்ததைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் டிரைவர் நெளஃபல் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.

கொரோனா நோயாளிகளை ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லும்போது சுகாதாரப் பணியாளர் உடனிருக்க வேண்டும் என்ற விதியை மீறி ஆம்புலன்ஸ் டிரைவர் செயல்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட ஆம்புலன்ஸ் டிரைவர் நெளஃபலுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இல்லை என ரிசல்ட் வந்திருக்கிறது. இதையடுத்து கொட்டாரக்கரை சிறையிலுள்ள தனிமை மையத்துக்கு அவர் மாற்றப்பட்டிருக்கிறார். ஆம்புலன்ஸ் டிரைவர் நெளஃபல் மீது கடத்தல், பட்டியலின சித்திரவதைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்டவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா
கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா

இந்த வழக்கில் ஆம்புலன்ஸ் டிரைவர் நெளஃபலை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா உத்தரவின்பேரில் நெளஃபல் ஆம்புலன்ஸ் டிரைவர் பணியிலிருந்து நீக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா கூறுகையில், ``ஆம்புலன்ஸ் டிரைவரின் இந்தச் செயல் எதிர்பாராதவிதமானது. கடந்த ஆட்சியில்தான் இந்த டிரைவர் நியமிக்கப்பட்டார். அனைத்து ஆம்புலன்ஸ் டிரைவர்களின் பின்னணிகள் குறித்து விசாரணை நடத்தப்படும். அபாய நிலையிலுள்ள நோயாளிகள் மட்டுமே இரவு நேரத்தில் ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்படுவார்கள். பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு