Published:Updated:

திருமணம் மீறிய உறவு; மருத்துவமனைக்குள் புகுந்து இளைஞரை வெட்டிய நபர்! - அலறிய நோயாளிகளால் பரபரப்பு

ஈரோடு அரசு மருத்துவமனை

தன் மனைவியுடன் திருமணம் மீறிய உறவில் இருந்ததாக இளைஞரை மருத்துவமனைக்குள் புகுந்து வெட்டிக் கொல்ல முயன்ற நபரை போலீஸார் தேடிவருகின்றனர்.

திருமணம் மீறிய உறவு; மருத்துவமனைக்குள் புகுந்து இளைஞரை வெட்டிய நபர்! - அலறிய நோயாளிகளால் பரபரப்பு

தன் மனைவியுடன் திருமணம் மீறிய உறவில் இருந்ததாக இளைஞரை மருத்துவமனைக்குள் புகுந்து வெட்டிக் கொல்ல முயன்ற நபரை போலீஸார் தேடிவருகின்றனர்.

Published:Updated:
ஈரோடு அரசு மருத்துவமனை

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி, சாமிநாதபுரத்தைச் சேர்ந்தவர் நந்தகோபால் (29). அந்தப் பகுதியில் கறிக்கடை நடத்திவருகிறார். இவரின் மனைவி பெயர் சுவேதா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). சுவேதாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த இளங்கோ (23) என்பவருக்குமிடையே திருமணம் மீறிய உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று சாவடிபாளையம் பகுதியில் ஓர் இடத்தில் இருவரும் சந்தித்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. தன் மனைவியை அவருக்குத் தெரியாமல் பின்தொடர்ந்து வந்த நந்தகோபால், திடீரென இருவர் முன்பும் தோன்றி அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில், நந்தகோபாலும் இளங்கோவும் கைகலப்பில் ஈடுபட்டனர். அப்போது நந்தகோபால் மறைத்துவைத்திருந்த சூரிக்கத்தியால் இளங்கோவையும், அவர் மனைவியையும் குத்த முயன்றதாகச் சொல்லப்படுகிறது.

அப்போது சுவேதாவின் கன்னத்தில் காயம் ஏற்பட்டது. இளங்கோவுக்கும் லேசான கத்திக் குத்து விழுந்த நிலையில் ரத்தம் கொட்டியது. இருவரும் கூச்சலிடவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவரவே... பயந்துபோன நந்தகோபால் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். படுகாயமடைந்த இருவரும் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் இருவரையும் சிகிச்சை பெற்றுவந்த வார்டுக்குள் கத்தியுடன் புகுந்த நந்தகோபால், அங்கு சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த இளங்கோவைக் கறி வெட்டும் கத்தியால் சரமாரியாக வெட்டினார். இந்தச் சம்பவத்தால் பக்கத்து பெட்டில் படுத்திருந்த சுவேதா உள்ளிட்ட மற்ற நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்பிடித்தனர்.

கொலை முயற்சி நடந்த பெண்கள் ரண சிகிச்சைப்பிரிவு.
கொலை முயற்சி நடந்த பெண்கள் ரண சிகிச்சைப்பிரிவு.

நந்தகோபால் அங்கிருந்து தப்பிவிட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் கிடந்த இளங்கோ உயிருக்கு ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனை வளாகத்திலேயே போலீஸ் ஸ்டேஷன், பாதுகாப்பு காவலர்கள், கண்காணிப்பு கேமராக்கள் இருந்த நிலையிலும் இதையும் மீறி பெண்கள் வார்டில் நள்ளிரவில் புகுந்து அந்த நபர் வெட்டிய சம்பவத்தால் அரசு மருத்துவமனை வளாகமே பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.

இது குறித்து ஈரோடு அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர்.