திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகேயுள்ள பாரதிதாசன் நகர் தண்டவாளப் பகுதியில் நேற்று முன்தினம் இளைஞர் ஒருவர் ரயிலில் அடிபட்ட நிலையில், இறந்துகிடந்தார். தகவலறிந்து அங்கு சென்ற ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார், உடலை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து இறந்தவர் குறித்து விசாரித்தனர். இறந்த நபர் திருப்பத்தூர் அப்பாய் தெருவைச் சேர்ந்த 25 வயதாகும் சுகவனம் என்ற தேங்காய் உரிக்கும் தொழிலாளி எனத் தெரியவந்தது.

விசாரணையில், சுகவனத்தின் நண்பர் ஓராண்டுக்கு முன்பு இளம்பெண் ஒருவரைக் காதலித்திருக்கிறார். வீட்டைவிட்டு வெளியேறிய அந்தக் காதல் ஜோடிக்கு சுகவனம்தான் திருமணம் செய்துவைத்திருக்கிறார். இல்லற வாழ்க்கையைத் தொடங்கிய அந்தக் காதல் ஜோடி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. திருமணமான ஐந்து மாதங்களுக்குள்ளாகவே அவர்கள் பிரிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தாய் வீட்டுக்குச் சென்றுவிட்ட நண்பனின் மனைவியுடன் சுகவனத்துக்குத் தொடர்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சமீபத்தில், நண்பனின் மனைவியை யாருக்கும் தெரியாமல் அழைத்துச் சென்று சுகவனம் திருமணமும் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான பஞ்சாயத்து திருப்பத்தூர் நகர காவல் நிலையத்துக்கும் சென்றிருக்கிறது. இதையடுத்து, நண்பனின் மனைவியுடன் அவர் குடும்பம் நடத்தத் தொடங்கினார்.

இதையறிந்த அவரின் நண்பர், தன் உறவினர்கள் சிலருடன் சென்று சுகவனத்தை திட்டித் தீர்த்துள்ளார். இந்த நிலையில், சுகவனத்துடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அந்தப் பெண் பிரிந்து சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த சுகவனம் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக ரயில்வே போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இது தொடர்பாக, போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.