விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள செம்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் தவமணி. இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கின்றனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் தன் அம்மாவிடம் தனக்குச் சேரவேண்டிய சொத்தைப் பிரித்துக் கொடுக்கும்படியும், பட்டா, சிட்டா கேட்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம் தவமணி. ஆனால், அவர் தாயார் அதற்கு மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தவமணி, நேற்று காலை வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார்.

அந்த வீடியோவில், ``அடே... தவமணி, உன்னுடைய கடைசி நிமிடமடா இது. அங்காளி, பங்காளி, உடன் பிறந்தவள், பெத்தவள் எல்லாம் பழிவாங்கி... திங்கள்கிழமையான இன்னைக்கி நீ இந்த மண்ணைவிட்டு போறதுக்கு இவங்க எல்லாம் காரணமாயிட்டாங்க. இதெல்லாம் சரி, என்னை நம்பி வந்த என்னுடைய மனைவி, என்னோட ரெண்டு பிள்ளைகளுக்கு நான் என்ன பதில் சொல்லுறதுன்னு தெரியலை. நான் பட்ட கஷ்டத்தை இவங்களும் படக் கூடாதுனு என்னென்னவோ பண்ணிப் பார்த்துட்டேன். விட்டுட்டுப் போகவும் மனமில்லை. தேனு... ராமலிங்கம்... நீங்கல்லாம் எங்க இருக்கீங்க... நான் உங்களைப் பார்க்க வரேன்" என்று ஆதங்கமாகப் பேசியிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த வீடியோவைப் பதிவு செய்வதற்கு முன்பு, மதுபானக் கடைக்குச் சென்று மது வாங்கி, அதில் விஷம் கலந்து அருந்தியிருக்கிறார் தவமணி. மதுபானக்கடை அருகே மயக்க நிலையில் கிடந்த இவரைப் பற்றி, அவர் குடும்பத்தாருக்குச் சிலர் தகவல் தெரிவித்தனராம். அதன்படி, தவமணியின் மனைவி நேரில் வந்து அவரை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். ஆனால் செல்லும் வழியிலேயே அவருடைய உயிர் பிரிந்துவிட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக தகவலறிந்த நல்லான்பிள்ளை பெற்றாள் காவல்துறையினர், தவமணியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து 174-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவுசெய்து, தவமணியின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.