Published:Updated:

தஞ்சாவூர்: திருட்டு வழக்கு; காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி மர்ம மரணம்! - உயரதிகாரிகள் விசாரணை

காவல் நிலையத்தில் உயிரிழந்த சத்தியவான்
காவல் நிலையத்தில் உயிரிழந்த சத்தியவான் ( ம.அரவிந்த் )

`விசாரணைக் கைதியான சத்தியவான் நெஞ்சு வலிப்பதாகக் கூறினார். அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். ஆனால் இறந்துவிட்டார்’ என மேற்கு காவல் நிலைய போலீஸ் தரப்பில் கூறிவருகின்றனர்.

தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்தில் திருட்டு வழக்கில் தொடர்புடைய இளைஞர் ஒருவரை போலீஸ் கைதுசெய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், அந்தக் கைதி மர்மமான முறையில் உயிரிழந்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறை உயரதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.

மேற்கு போலீஸ் ஸ்டேஷன்
மேற்கு போலீஸ் ஸ்டேஷன்

தஞ்சாவூர் மேற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சீதா நகர் பகுதியில் வசிப்பவர் சாமிநாதன். இவர் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். சாமிநாதன் குடும்பத்துடன் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்தார். கடந்த 12-ம் தேதி சாமிநாதன் வீட்டின் பூட்டை உடைத்து ஏழு பவுன் நகை, ரொக்கமாக ரூ. 7 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக சாமிநாதன் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுவந்தது.

பின்னர் இந்தக் கொள்ளை வழக்கில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழிப் பகுதியை சேர்ந்த சத்தியவான் (31) என்ற இளைஞருக்கு தொடர்பிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சத்தியவானுக்கு திருமணம் ஆகவில்லை. வனஜா என்ற தாயும் இரண்டு சகோதரிகளும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சத்தியவான் மீது தஞ்சாவூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பல்வேறு கொள்ளை வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

சத்தியவான் உயிரிழந்த போலீஸ் ஸ்டேஷன்
சத்தியவான் உயிரிழந்த போலீஸ் ஸ்டேஷன்

மேலும், இந்தக் கொள்ளையை மூன்று பேர் சேர்ந்து செய்திருக்கலாம் எனவும் போலீஸார் கருதினர். இதைத் தொடர்ந்து தனிப்படை அமைத்து போலீஸார் சத்தியவானைத் தேடிவந்தனர். நேற்று தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் சுற்றித்திரிந்த சத்தியவானை தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான போலீஸார் கைதுசெய்தனர். அவரை மேற்கு காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்று விசாரித்துவந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இன்று அதிகாலை சத்தியவான் போலீஸ் ஸ்டேஷனிலேயே மயங்கிவிட்டதாகத் தெரிகிறது. போலீஸார் உடனடியாக அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்ததில் சத்தியவான் இறந்துவிட்டதாக டாக்டர் தெரிவித்திருக்கிறார். காவல் நிலையத்தில் வைத்து போலீஸ் விசாரித்துவந்த கைதி ஒருவர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சாத்தான்குளம்: `8 மாதங்களாகியும் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வரலை’ - பென்னிக்ஸ் சகோதரி வேதனை

``சத்தியவான் நெஞ்சு வலிப்பதாக கூறினார். அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். ஆனால், அவர் இறந்துவிட்டார்” என மேற்கு காவல் நிலைய போலீஸ் தரப்பில் கூறிவருகின்றனர். தற்போது சத்தியவானின் உடல் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மார்ச்சுவரியில் வைக்கப்பட்டுள்ளது. தஞ்சை சரக டி.ஐ.ஜி பிரவேஷ்குமார், எஸ்.பி ரவளிப்பிரியா உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

சாத்தான்குளம் வழக்கு: 3 மணி நேரம்... கண்ணீர்மல்க  சாட்சியம் அளித்த ஜெயராஜின் மனைவி!

விசாரணையின் முடிவில்தான் சத்தியவான் எப்படி இறந்தார் என்பது தெரியவரும் என்கின்றனர். திருட்டு வழக்கில் கைதுசெய்யப்பட்ட கைதியிடமிருந்து உண்மையைப் பெறுவதற்காக போலீஸார் அவர்கள் பாணியில் விசாரிப்பார்கள். அப்படி விசாரிக்கும்போது எதாவது அசம்பாவிதம் ஏற்பட்டு, இது போன்ற சம்பவம் நடந்திருக்குமா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. போலீஸ் கட்டுப்பாட்டிலுள்ள கைதி ஒருவர் காவல் நிலையத்தில் இறந்திருக்கிறார். அங்குள்ள சிசிடிவி கேமாராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தாலே உண்மை தெரிந்துவிடும் எனவும் பலர் பேசிவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு