Published:Updated:

மாயமான வாலிபர் பிணமாக மீட்பு; காவல் நிலையத்தை முற்றுகையிட்டு விடிய, விடிய போராட்டம்... இருவர் கைது!

கொலை

நேற்றிரவு காஞ்சிகோவில் காவல் நிலையத்தை பூபதியின் உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

மாயமான வாலிபர் பிணமாக மீட்பு; காவல் நிலையத்தை முற்றுகையிட்டு விடிய, விடிய போராட்டம்... இருவர் கைது!

நேற்றிரவு காஞ்சிகோவில் காவல் நிலையத்தை பூபதியின் உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

Published:Updated:
கொலை

ஈரோடு, பெருந்துறை தாலுகா, காஞ்சிகோவிலையடுத்த வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்தவர் பூபதி (25). சென்ட்ரிங் தொழிலாளி. இவர் கடந்த 4-ம் தேதி இரவு முதல் மாயமானார். மோட்டார் பைக்கில் வெளியே சென்ற பூபதி, மீண்டும் வீடு திரும்பாததால் அவரின் பெற்றோர் காஞ்சிகோவில் போலீஸில் புகாரளித்தனர். அதன்பேரில் போலீஸார் பூபதியைத் தேடிவந்தனர். இந்த நிலையில், நேற்று காலை காஞ்சிகோவிலிலிருந்து சித்தோடு செல்லும் வழியில் கரட்டுப்பாளையம் பகுதியில் கீழ்பவானி கிளை வாய்க்கால் அருகே வாலிபர் ஒருவர் உடலில் படுகாயங்களுடன் பிணமாகக் கிடப்பதாக காஞ்சிகோவில் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

நிகழ்விடத்துக்குச் சென்று போலீஸார் நடத்திய விசாரணையில், இறந்துபோனவர் மாயமான பூபதி என்பதும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் பைக் பூபதியுடையது என்பதும் தெரியவந்தது. அதையடுத்து, பூபதியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையிலுள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பிவைத்தனர். பூபதியின் வாகனத்தையும் போலீஸார் மீட்டு கொண்டுசென்றனர். இது குறித்து காஞ்சிகோவில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

முற்றுகையிட்ட உறவினர்கள்
முற்றுகையிட்ட உறவினர்கள்

பூபதியின் உடலில் பல்வேறு காயங்கள் இருப்பதால் அவரை யாராவது கடுமையாகத் தாக்கி, கொலைசெய்து வீசிச் சென்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கடந்த ஆண்டு, பெருந்துறை அருகே சிறுமியைக் காதலித்ததாக பூபதி, போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்து சிறைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்த பூபதி தற்போது கொலைசெய்யப்பட்டுள்ளதாகவும், இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களை விடுவிப்பதற்கான முயற்சியில் போலீஸார் ஈடுபட்டு வருவதாகக் கூறி, நேற்றிரவு காஞ்சிகோவில் காவல் நிலையத்தை பூபதியின் உறவினர்கள் முற்றுகையிட்டனர். இது தொடர்பாக நம்மிடம் பேசிய பூபதியின் உறவினர்கள், ``ஓர் ஆண்டுக்கு முன்பு வரையிலும் பெருந்துறை அருகேதான் குடியிருந்தோம். அப்போது, அருகில் வசித்துவந்த சிறுமி, பூபதியைக் காதலிப்பதாகக் கூறி வீட்டைவிட்டு வெளியேறி பூபதியைத் தேடிவந்துவிட்டார். வேறு வழியின்றி அந்தச் சிறுமியை அழைத்துக்கொண்டு பூபதி வெளியூர் சென்றுவிட்டார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்தப் புகாரின்பேரில் தேடிக்கண்டுபிடித்து அவர்கள் இருவரையும் அழைத்துவந்த போலீஸார், பூபதி மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்து, அவரை கோவை சிறைக்கு அனுப்பிவிட்டார்கள். இந்த நிலையில், பூபதி ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். ஒருமுறை பூபதி கடைக்குச் சென்றபோது, மோட்டார் பைக்கில் வந்த சிறுமியின் அண்ணன் விக்னேஷ், பூபதியைப் பார்த்து, `உன்னையெல்லாம் யாருடா ஜெயிலிலிருந்து வெளியே விட்டது' என்று கெட்டவார்த்தை சொல்லி திட்டினார்.

ஏற்கெனவே பூபதி ஜாமீனில் வந்திருப்பதால் எந்தப் பிரச்னைக்கும் போகக் கூடாது என்று எங்கள் வழக்கறிஞர் அறிவுறுத்தியிருந்தார். அதனால் நாங்கள் எதுவும் பேசாமல் வந்துவிட்டோம். இந்த நிலையில், அடிக்கடி என் தம்பியைப் பார்ப்பதாகக் கூறி அந்தச் சிறுமியை அவர்கள் வீட்டிலுள்ளவர்கள் அடிக்கிறார்கள் என்பதால், அந்த ஊரிலிருந்து சில கி.மீ தூரம் தள்ளி வெள்ளியங்காடு பகுதிக்கு எங்கள் வீட்டை மாற்றிக்கொண்டு வந்துவிட்டோம். கடந்த ஓர் ஆண்டாக எந்தப் பிரச்னையும் வரவில்லை. இந்த நிலையில்தான், பூபதியை அடித்து, துன்புறுத்தி கொலைசெய்திருக்கிறார்கள். அவரைக் கொன்றவர்களைக் கண்டறிந்து நேர்மையான முறையில் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.  

நேற்றிரவு காஞ்சிகோவில் காவல் நிலையத்தை பூபதியின் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

தேன்மொழி (பூபதியின் சகோதரி)
தேன்மொழி (பூபதியின் சகோதரி)

கொலை சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களைக் கைதுசெய்வதாக ஏ.எஸ்.பி. (பொறுப்பு) பவித்ரா உறுதியளித்ததன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர். இந்த நிலையில் விக்னேஷ், பரமசிவம் ஆகிய இருவரை போலீஸார் நேற்று நள்ளிரவில் கைதுசெய்தனர்.
இந்தக் கொலையில் மேலும் ஒருவருக்குத் தொடர்பிருப்பதாகவும், அவரைத் தேடிவருவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டிருப்பதால் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.