Published:Updated:

`என் மகன் ஸ்டெர்லைட் போராளி; பைக் திருடன் அல்ல!' -கொந்தளிக்கும் சந்தோஷின் தாய் வசந்தா

சந்தோஷ்
சந்தோஷ்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 100 நாள்கள் நடந்த போராட்டத்தின்போது வாய் திறக்காத அரசியல்வாதிகள், 13 உயிர்கள் பலியானதும் பொருள்காட்சிக்கு வருவதுபோல அடுத்தடுத்து வந்தார்கள். அப்படி வந்த ரஜினி உள்ளிட்ட எல்லோரிடமும் என் மகன், ’நீங்க யார்?’ என்று கேட்டான் என்கிறார், சந்தோஷின் தாய் வசந்தா.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி 100 நாள்கள் நடந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி நடந்தது. அப்போது ஏற்பட்ட வன்முறையைக் கட்டுப்படுத்த போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், பெண்கள் உள்ளிட்ட 13 அப்பாவிகள் உயிரிழந்தனர். 

சந்தோஷுடன் ரஜினிகாந்த்
சந்தோஷுடன் ரஜினிகாந்த்

போலீஸ் தடியடி மற்றும் துப்பாக்கிச் சூட்டில் ஏராளமானோர் காயமடைந்தனர். சம்பவம் நடந்த ஒரு வாரத்துக்குப் பின்னர் (2018, மே 30-ம் தேதி) படுகாயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதற்காக நடிகர் ரஜினிகாந்த், தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குச் சென்றார்.

சிகிச்சைபெற்றுவந்த காயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய ரஜினியிடம் ஓர் இளைஞர், `நீங்க யார்?’ எனக் கேட்டார். `நான் ரஜினிகாந்த்’ என ரஜினி கூறியதும், `எங்கிருந்து வருகிறீர்கள்?’ என்று கேட்டார். ‘சென்னையில் இருந்து வருகிறேன்’ என ரஜினி கூறியதும், `சென்னையிலிருந்து தூத்துக்குடி வருவதற்கு நூறு நாள்களாகுமா?’ எனக் கேட்டார். அப்போது ரஜினி இறுக்கமான முகத்துடன் அவரைக் கடந்து சென்றார். 

சந்தோஷ்
சந்தோஷ்

அனைத்துக் கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பின் தூத்துக்குடி ஒருங்கிணைப்பாளரான சந்தோஷின் அந்த வீடியோ, அப்போது வைரலானது. தற்போது சந்தோஷ் மற்றும் மணி, சரவணன் ஆகியோர் இருசக்கர வாகனத் திருட்டு தொடர்பாக தூத்துக்குடி வடக்கு காவல்நிலைய போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ரஜினியைக் கிண்டலடித்த சந்தோஷ், பைக் திருட்டில் கைதுசெய்யப்பட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது.

நடந்த சம்பவம் பற்றி சந்தோஷின் தாய் வசந்தாவிடம் பேசினோம்.``என் மகனின் பைக், சில தினங்களுக்கு முன்பு அவனது நண்பரால் விபத்துக்குள்ளாகி சேதமடைந்தது. அதனால் குறைந்த விலையில் பயன்படுத்தப்பட்ட பைக் வாங்க வேண்டும் என்று நண்பர்களிடம் சொல்லிவந்தான். 

ஸ்டெர்லைட் ஆலையை மூடியாயிற்று... அடுத்து என்ன?

சில தினங்களுக்கு முன்பு நண்பன் ஒருவன், `கடனுக்கு வாங்கிய பைக் ஒன்று இருக்கிறது. கடன் தொகையைக் கட்ட முடியாமல் அந்த பைக் எப்போது வேண்டுமானாலும் வங்கி அதிகாரிகளால் தூக்கிச் செல்லப்படும். அதை குறைந்த விலைக்கு வாங்கலாம்’ என்று சொன்னான். அதை நம்பி அவன் அந்த பைக்கை வாங்கினான்.

அதில் நிறைய சிக்கல் இருந்ததால், பைக்கை விற்க இணையத்தில் விளம்பரம் செய்திருந்தான். அவன் திருடியிருந்தால் விளம்பரம் கொடுத்திருப்பானா? அந்த வாகனத்தின் உரிமையாளர் வந்து கேட்டதும், என் மகனே போலீஸில் தகவல் சொன்னான். அவனை விசாரணைக்கு அழைத்துச்சென்ற போலீஸார் அவனை, `ஸ்டெர்லைட் போராட்டங்களில் பங்கேற்க மாட்டேன்’ என எழுதிக் கொடுக்கச் சொன்னார்கள். 

ஸ்டெர்லைட் நிறுவனம்
ஸ்டெர்லைட் நிறுவனம்

அவன் மறுத்துவிட்டதால், வழக்கில் சிக்கவைத்துவிட்டார்கள். என்னிடமும் போலீஸார், அப்படி எழுதிக் கொடுத்தால் மகனை விடுவிப்பதாகச் சொன்னார்கள். ஆனால், எதிர்கால சந்ததிக்கு தீங்கு விளைவிக்கும் ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு ஆதரவாகச் செயல்பட மறுத்துவிட்டேன். அப்பாவியான என் மகனை பைக் திருடன் போல சித்திரிக்க சிலர் திட்டமிட்டே முயல்கிறார்கள். அவன் மீதான பொய் வழக்கை சட்டப்படி சந்திப்பேன்’’ என்று படபடத்தார்.

`ரஜினி குறித்த கேள்வி; நழுவிய ராமதாஸ்!' -பா.ம.க, தே.மு.தி.க-வைத் தயார்படுத்துகிறதா டெல்லி?

இதுகுறித்து காவல்நிலைய வட்டாரங்களில் விசாரித்தோம். பைக் திருட்டு தொடர்பாக சந்தோஷ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பதாக போலீஸார் கூறுகிறார்கள். மேலும், அவர்கள் கூறுகையில், ``திருடப்பட்ட பைக்கை விற்பதற்காக இணையதளம் மற்றும் வாட்ஸப்பிலும் அவர் செய்த விளம்பரத்தைப் பார்த்தே, அதன் உரிமையாளர் சாம்குமாருக்கு இந்த விவரம் தெரிந்திருக்கிறது.

பைக்
பைக்

இதையடுத்து, சந்தோஷுக்கு போன் செய்து, பைக்கை வாங்க விரும்புவதாகச் சொல்லி, நேரில் சந்தித்திருக்கிறார்கள். நண்பர்களுடன் சந்தோஷை சந்தித்த பைக்கின் உரிமையாளர் சாம்குமார், அது தன்னுடைய பைக்தான் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, அவரைப் பிடித்துவைத்துக்கொண்ட பின்னரே, எங்களுக்குத் தகவல் தெரிவித்தார். இதையடுத்தே, நாங்கள் சந்தோஷைக் கைதுசெய்தோம்'' என்கின்றனர் தூத்துக்குடி போலீஸார்.

அடுத்த கட்டுரைக்கு