மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் ஷபிரான் (32). இவர் நொளம்பூர் பொன்னார் நகரில் தங்கியிருந்து கட்டட வேலைகளைச் செய்துவருகிறார். கடந்த 3-ம் தேதி மதியம் நொளம்பூர் பகுதியில் ஷபிரான் நின்றுகொண்டிருந்தபோது பைக்கில் இருவர் வந்துள்ளனர். அவர்கள் ஷபிரானிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர். அதற்கு அவர், தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். அதனால் ஆத்திரமடைந்த பைக்கில் வந்த இரண்டு பேரும், ஷபிரானைக் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றனர். ஷபிரானின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்தவர்கள், அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஷபிரான், நொளம்பூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதையடுத்து போலீஸார், சம்பவம் நடந்த இடத்திலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது பைக்கின் பதிவு நம்பரைவைத்து விசாரித்தனர். விசாரணையில் ஷபிரானைக் கத்தியால் குத்திவிட்டுத் தப்பிச் சென்றது மேற்கு முகப்பேர் பகுதியைச் சேர்ந்த பரத் (21), அவரின் நண்பரான 17 வயது சிறுவன் எனத் தெரியவந்தது. பின்னர் பரத்தை போலீஸார் கைதுசெய்ததோடு குற்றச் செயலுக்கு பயன்படுத்திய பைக், கத்தி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். கைதான பரத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீஸார் சிறையில் அடைத்தனர். 17 வயது சிறுவனை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர்.
இது குறித்து போலீஸார் கூறுகையில், ``கைதான பரத் போதைக்கு அடிமையானவர் என்ற தகவல் தெரியவந்திருக்கிறது. போதைக்காக, வழிப்பறி முயற்சியில் பரத் ஈடுபட்டிருக்கிறார். பரத்தின் நண்பனான சிறுவனின் வாழ்க்கையும் தவறான பழக்கத்தால் திசை மாறியிருப்பது விசாரணயில் தெரியவந்திருக்கிறது" என்றனர்