திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இயங்கிவருகிறது. இந்த வங்கி மக்கள் அதிகமாக நடமாடும் பகுதியில் அமைந்திருக்கிறது. இன்று காலை ஓர் இளைஞர் மிளகாய்ப் பொடி, பெப்பர் ஸ்பிரே, கட்டிங் பிளேடு, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வங்கிக்குள் நுழைந்து மிளகாய்ப் பொடி தூவி ஸ்பிரே அடித்திருக்கிறார். வங்கியில் மூன்று ஊழியர்கள் பணி செய்துவந்த நிலையில், மூன்று வங்கி ஊழியர்களையும் பிளாஸ்டிக் டேக்கை வைத்து கைகளைக் கட்டிப்போட்டு, கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது, வங்கி ஊழியர் ஒருவர் வெளியே வந்து பொதுமக்களைப் பார்த்து கூச்சலிட்டிருக்கிறார். இதையடுத்து, உடனடியாக உள்ளே சென்ற பொதுமக்கள், வங்கிக் காவலாளி ஆகியோர் கொள்ளையனைப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும், திண்டுக்கல் காவல்துறையினர் கொள்ளையரிடம் தீவிர விசாரணை செய்ததில், அவர் திண்டுக்கல் மாவட்டம், பேகம்பூர் அருகேயுள்ள பூச்சிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கலீல் ரகுமான் (25) என்பது தெரியவந்தது.

இந்த நிலையில் போலீஸார் அவரிடம் விசாரித்தபோது, வாழ்க்கை வெறுத்து விட்டதாகவும், சினிமாவைப் பார்த்துதான் கொள்ளையடிக்க முயற்சி செய்ததாகவும், அண்மையில் வெளிவந்த `துணிவு’ படம் உட்பட வங்கிக் கொள்ளை தொடர்பான அனைத்துப் படங்களையும் பார்த்துக் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறியிருக்கிறார்.
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் காவல்நிலையத்துக்கு நேரில் வந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட முயன்ற இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டார். அதோடு, இவருடன் சேர்ந்து வேறு யாரும் இந்தக் கொள்ளை முயற்சிக்கு உடந்தையாக இருக்கிறார்களா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்.

பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் வங்கியில் நுழைந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் திண்டுக்கல் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.