Published:Updated:

`1 லட்ச ரூபாய் பைக் 25,000; அதிர்ச்சி எஸ்.எம்.எஸ்!' - 13 டூவீலர்களோடு சிக்கிய சென்னை டிரைவர்

பைக் திருட்டு வழக்கில் சிக்கிய டிரைவர்
பைக் திருட்டு வழக்கில் சிக்கிய டிரைவர்

திருட்டு பைக்குகளை குறைந்த விலைக்கு விற்ற கார் டிரைவரை போலீஸாரின் எஸ்.எம்.எஸ் காட்டிக் கொடுத்துள்ளது. அவரிடமிருந்து13 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சென்னை அம்பத்தூர், திருமுல்லைவாயல், பட்டாபிராம், திருநின்றவூர், திருவள்ளூர் ஆகிய இடங்களில் தொடர்ந்து பைக்குகள் திருடப்பட்டன. இதுகுறித்த புகார்கள் காவல் நிலையங்களுக்கு வந்தன. பைக் திருட்டைக் கண்டுபிடிக்க அம்பத்தூர் துணை கமிஷனர் ஈஸ்வரன் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்திவந்தனர். பைக் திருடப்பட்ட இடங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீஸார் ஆய்வு செய்தனர். ஆனால், பைக் திருட்டு குறித்து எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.

எஃப்.ஐ.ஆர்
எஃப்.ஐ.ஆர்
`பூட்டை உடைக்காமல் பைக் திருட்டு; மெக்கானிக் ஷெட்டாக மாறிய வீடு!' -தடம் மாறிய சென்னை இன்ஜினீயர்

இந்த நிலையில், ஆவடியை அடுத்த கருணாகரச்சேரியில் பட்டாபிராம் இன்ஸ்பெக்டர் ஜெய்கிருஷ்ணன் தலைமையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக பைக்கில் வாலிபர் ஒருவர் வேகமாக வந்தார். அவரை மடக்கிய போலீஸார், வாகனத்தின் ஆவணங்களைக் கேட்டுள்ளனர். அதற்கு அந்த வாலிபர், தன்னை, `பிரஸ் ரிப்போர்ட்டர்' என்று கூறியுள்ளார். உடனே போலீஸாரும் ஐ.டி கார்டை கேட்டபோது அந்த வாலிபர், ஐடி கார்டை கொடுத்துள்ளார். அதை ஆய்வு செய்தபோது போலி அடையாள அட்டை எனத் தெரியவந்தது.

இதையடுத்து, அந்த வாலிபரை போலீஸார் பட்டாபிராம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது அவர், பைக் திருடன் எனத் தெரியவந்தது. விசாரணையில் அவரின் பெயர் விக்டர் என்கிற நரேஷ் (38) எனத் தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்து 13 பைக்குகளை பறிமுதல் செய்துள்ளனர். கைதான விக்டர் என்கிற நரேஷை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் பொன்னேரி சிறையில் அடைத்தனர்.

கார் டிரைவர் விக்டர் என்கிற நரேஷ்
கார் டிரைவர் விக்டர் என்கிற நரேஷ்
`30 கி.மீ சைக்கிள் பயணம்; 200 கேமராக்கள் ஆய்வு' - மனைவி, மகன் கொலை வழக்கில் சிக்கிய சென்னை ஊழியர்

இதுகுறித்து பட்டாபிராம் போலீஸார் கூறுகையில், ``சென்னை பட்டாபிராம், ரெட்டியார்கார்டன், ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்த சரஸ்வதி என்பவர் பட்டாபிராம் காவல் நிலையத்தில் தன்னுடைய மகன் அரவிந்த்தின் பைக்கை 17.2.2020-ம் தேதி முதல் காணவில்லை என்று புகாரளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வடிவேலன் வழக்கு பதிவு செய்து விசாரித்தார். இந்த நிலையில் சரஸ்வதியின் மகன் அரவிந்த்துக்கு மே மாதத்தில் சென்னை போக்குவரத்து காவல்துறையிலிருந்து எஸ்.எம்.எஸ் ஒன்று அனுப்பப்பட்டிருந்தது. அதில் ஹெல்மெட் அணியாமல் பைக்கை ஓட்டியதற்காக அபராதம் விதிக்கப்பட்ட தகவல் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால் அதிர்ச்சியடைந்த அரவிந்த், தன்னுடைய பைக், பிப்ரவரி மாதத்திலேயே காணாமல் போய்விட்டது. ஆனால், மே மாதத்தில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதே என்று குழப்பம் அடைந்தார்.

பின்னர் இதுகுறித்து பட்டாபிராம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். உடனே அந்த எஸ்.எம்.எஸ் மூலம் பட்டாபிராம் போலீஸார் விசாரித்தனர். அப்போது திருட்டு பைக்கை ஓட்டிச் சென்றது கொரட்டூரைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்தது. அவரின் முகவரிக்குச் சென்று பைக் குறித்த தகவலை விசாரித்தோம். அப்போது பட்டாபிராமைச் சேர்ந்த விக்டர் என்கிற நரேஷிடம் குறைந்த விலைக்கு இந்தப் பைக்கை வாங்கிய தகவலை அவர் தெரிவித்தார். இதையடுத்து, கொரட்டூரிலிருந்து அரவிந்த்தின் பைக்கைப் பறிமுதல் செய்தோம்.

முதலிரவில் கொல்லப்பட்ட மணமகள்! - திருவள்ளூர் மணமகனின் அதிர்ச்சிப் பின்னணி
பிரஸ் என எழுதப்பட்ட பைக்
பிரஸ் என எழுதப்பட்ட பைக்

கொரட்டூர் நபர் அளித்த தகவலின்படி பட்டாபிராமைச் சேர்ந்த விக்டர் என்கிற நரேஷை தேடிவந்தோம். இந்தச் சமயத்தில்தான் போலீஸாரின் வாகனச் சோதனையில் விக்டர் என்கிற நரேஷ் சிக்கினார். அப்போது அவரின் பைக்கில் பிரஸ் என எழுதப்பட்டிருந்தது. மேலும் போலீஸாரிடம் சிக்கிய நரேஷ், தன்னை பிரஸ் ரிப்போர்ட்டர் என்று கூறி தப்பிக்க முயன்றார். கார் டிரைவரான நரேஷுக்கு பிரஸ் ரிப்போட்டர்கள் சிலருடன் பழக்கம் உள்ளது. அதனால் அவர், தன்னுடைய பைக்கிலும் பிரஸ் என்று எழுதி வைத்துக்கொண்டு பந்தா காட்டிவந்துள்ளார்.

வீடுகள், வணிக வளாகங்கள், ரயில் நிலைய வாகன நிறுத்துமிடங்கள் ஆகியவற்றில் நிறுத்தப்பட்டிருக்கும் பைக்குகளை முதலில் நோட்டமிடும் விக்டர் என்கிற நரேஷ், பின்னர் அந்தப் பைக்கை டூப்ளிகேட் சாவி போட்டு திறக்க முயற்சி செய்வார். அப்போது பைக்கின் லாக் திறக்கவில்லை என்றால் அதை உடைத்துவிட்டு எடுத்துச் சென்றுவிடுவார். பின்னர் அந்தப் பைக்கை ஃபைனான்ஸில் வாங்கியதாக கூறும் விக்டர் என்கிற நரேஷ், ஆர்.சி புக் ஓரிஜினலை பிறகு தருகிறேன் என குறைந்த விலைக்கு விற்று வந்துள்ளார்.

பட்டாபிராம் காவல் நிலையம்
பட்டாபிராம் காவல் நிலையம்

ஒரு லட்சம் ரூபாய் பைக்கை 25,000 ரூபாய்க்கு கிடைத்ததால் அதை சிலர் ஆர்வத்துடன் வாங்கியுள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக விக்டர் என்கிற நரேஷ், 13 பைக்குகளைத் திருடி விற்றுவந்துள்ளார். இவரின் சொந்த ஊர் திருவள்ளூர் அருகே உள்ள புல்லரம்பாக்கம் கிராமம். செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் திருட்டு வழக்கில் சிக்கியதால் விக்டர், கடந்த 2 ஆண்டுகளாக பட்டாபிராம் பகுதியில் குடியிருந்துவருகிறார்" என்றனர்.

அரவிந்த்துக்கு காவல் துறையிலிருந்து எஸ்.எம்.எஸ் வரவில்லையென்றால் கார் டிரைவர் விக்டர் என்கிற நரேஷ் காவல்துறையிடம் சிக்கியிருக்க மாட்டார் என்கின்றனர் போலீஸார்.

அடுத்த கட்டுரைக்கு