Published:Updated:

ராணிப்பேட்டை: `தம்பினு கூடவெச்சுக்கிட்டேன்... தப்பா நடந்துக்கிட்டான்!’ - அதிரவைத்த கொலைச் சம்பவம்

கொலை செய்யப்பட்ட அசோக்
கொலை செய்யப்பட்ட அசோக்

``அண்ணினுகூடப் பார்க்காம என் பொண்டாட்டிக்கிட்ட தப்பா நடந்துக்கிட்டான். அந்த கோவத்துலதான் தம்பியைக் கொன்னுட்டேன்’’ என்று அதிரவைத்திருக்கிறார், ராணிப்பேட்டையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.

ராணிப்பேட்டை மாவட்டம், அம்மூரை அடுத்த மேல்வேலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண் (27). இவரின் தம்பி அசோக் (25). இருவரும் சேர்ந்து கோணிப்பைக் கடை நடத்திவந்தனர். அருணுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அசோக்குக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கோணிப்பைக் கடையில் கிடைக்கும் வருமானத்தை அண்ணனுக்குத் தெரியாமல் அடிக்கடி எடுத்துச் சென்று அசோக் இஷ்டத்துக்கு செலவு செய்ததாகக் கூறப்படுகிறது. அசோக்குக்கு மது குடிக்கும் பழக்கமும் இருந்திருக்கிறது.

ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவும் அவர் மதுபோதையில் இருந்திருக்கிறார். தள்ளாடியபடி நடந்து தங்கள் நிலத்திலுள்ள கொட்டகைக்குச் சென்று அங்கிருந்த கட்டிலில் படுத்துக்கொண்டார். நேற்று காலை பார்க்கும்போது, மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்திருக்கிறார். உறவினர்கள் அவரை மீட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். பரிசோதனையில், அசோக் இறந்துவிட்டதை உறுதிப்படுத்திய மருத்துவர்கள், கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் இருப்பதால் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறினர்.

ராணிப்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின்பேரில், அண்ணன் அருணைப் பிடித்து கிடுக்கிப்பிடியாக விசாரணை நடத்தினர். தம்பி அசோக்கை திட்டம்போட்டுக் கொன்றதை அவர் ஒப்புக்கொண்டார். அருண் கொடுத்த வாக்குமூலத்தில், ``குடிச்சிட்டு ஊதாரித்தனமாக சுத்திக்கிட்டு இருந்த தம்பியைப் பொறுப்பானவனா மாத்த நெனச்சு என் கடையில உட்காரவெச்சேன். ஆனாலும், திருந்தலை. கடையில இருக்கிற காசெல்லம் டாஸ்மாக்குல கரைஞ்சதுதான் மிச்சம்.

கொலை செய்யப்பட்ட அசோக்
கொலை செய்யப்பட்ட அசோக்

திடீர்னு, `கல்யாணம் பண்ணிவைங்க. சொத்தையெல்லாம் பிரிங்க’னு சொல்லி அம்மாகிட்ட சண்டைபோட ஆரம்பிச்சான். சரி, சின்னப் பையன்தானே... போகப் போக திருந்திடுவான்னு பார்த்தேன். அடிமடியில கைவெச்ச கணக்கா, அண்ணினுகூட பார்க்காம என் பொண்டாட்டிக்கிட்டேயும் தப்பா நடந்துக்கப் பார்த்தான். அந்த கோவத்துலதான் மாடு கட்டுற கயித்தால அவன் கழுத்தை இறுக்கிக் கொன்னுட்டேன்’’ என்று கூறியதாக காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள். இதையடுத்து, அருணை கைது செய்த போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு