Published:Updated:

`டெலிவரி பாய், கஞ்சா விற்றது ஏன்?' -டோர் டெலிவரி செய்தபோது சிக்கிய பின்னணி

டெலிவரி
டெலிவரி

சென்னை மயிலாப்பூர் பகுதியில் உணவு டெலிவரி செய்யும் பேக்கில் வைத்து கஞ்சா விற்பனை செய்தபோது போலீஸாரிடம் சிக்கினார்.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. மதுபானங்கள் கிடைக்காத விரக்தியில் சிலர் தற்கொலை செய்துள்ளனர். மேலும் சிலர், டாஸ்மாக் கடைகளை உடைத்து மதுபானங்களைத் திருடிவருகின்றனர். இந்தத் திருட்டில் டாஸ்மாக் ஊழியர்களும் சிக்கியுள்ளனர். இன்னும் சிலர் மாற்று மதுபோதையைத் தேடிவருகின்றனர்.

டெலிவரி பாய்
டெலிவரி பாய்
`ஊரடங்கால் களைகட்டிய கஞ்சா வியாபாரம்!' -சுற்றிவளைத்த தனிப்படை காவலருக்கு நேர்ந்த சோகம்

இதனால், வீடுகளிலும் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிகளிலும் மது, கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடந்துவருகிறது. மது கிடைக்காதவர்கள், கஞ்சா, ஹெராயின் போன்ற போதைப் பொருள்களுக்கு அடிமையாகி வருகின்றனர். சென்னையைப் பொறுத்தவரை கஞ்சா விற்பனை தடையின்றி நடந்து வருகிறது. போன் செய்தால் கஞ்சா, டோர் டெலிவரி செய்யப்பட்டு வருகிறது. ஊரடங்கையொட்டி சென்னை நகர் முழுவதும் ஆங்காங்கே சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

போலீஸாருக்குத் தெரிந்தும் தெரியாமலும் கஞ்சா விற்பனை நடந்துவருகிறது. கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள், போலீஸாரின் சோதனைச் சாவடிகளில் சிக்காமல் டோர் டெலிவரி செய்து காவல்துறையினருக்கு அதிர்ச்சியைக் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் கஞ்சா, டோர் டெலிவரி செய்யப்படுவதாக ரகசியத் தகவல் பட்டினம்பாக்கம் போலீஸாருக்குக் கிடைத்தது.

`எப்படி இறந்தார் சென்னைப் பயிற்சி டாக்டர் பிரதீபா?' - பிரேதப் பரிசோதனைக்குப் பின்னும் மர்மம்
உணவு டெலிவரி ஊழியர்கள்
உணவு டெலிவரி ஊழியர்கள்

அதன்பேரில் போலீஸார் ரகசியமாக கண்காணித்துவந்தனர். அப்போது உணவு டெலிவரி செய்யும் பையோடு பைக்கில் சென்ற ஒருவர் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவரை போலீஸார் பின்தொடர்ந்தனர். அப்போது அவர், ஒரு வீட்டில் உணவு டெலிவரி பையிலிருந்து பார்சல் ஒன்றை எடுத்துக் கொடுத்தார். பின்னர் அதற்குப் பணத்தை வாங்கிக்கொண்டு அவர் புறப்பட்டார். அவரைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``உணவு டெலிவரி செய்த நபர் மீது எங்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டதும் அவரைப் பிடித்து விசாரித்தோம். விசாரணையில் அவரின் பெயர் குணசேகரன் (25). சென்னை பெருங்குடியைச் சேர்ந்தவர். இவர், உணவு டெலிவரி செய்யும் பிரபலமான நிறுவனத்தில் கடந்த ஓராண்டாக வேலை பார்த்துவந்துள்ளார். ஊரடங்கு காரணமாக வேலைக்குச் செல்லவில்லை. அதனால் வருமானம் இல்லாமல் குணசேகரன் சிரமப்பட்டுவந்துள்ளார்.

கஞ்சா பார்சல்கள்
கஞ்சா பார்சல்கள்

அதனால் பெருங்குடியில் கஞ்சா விற்கும் கும்பலிடமிருந்து கஞ்சாவை விலைக்கு வாங்கிய குணசேகரன், அதைச் சின்ன, சின்ன பாக்கெட்களாகப் போட்டு அடையாறு, மந்தவெளி, மயிலாப்பூர் என பல பகுதிகளில் விற்றுவந்துள்ளார். இவர், உணவு டெலிவரி செய்யும் ஊழியர் என்பதால் அதே கெட்அப்பில் கஞ்சா பார்சல்களை போனில் ஆர்டர் செய்யும் நபருக்கு டோர் டெலிவரி செய்துவந்துள்ளார். அவரிடமிருந்து 10 கிராம் எடையுள்ள 20 கஞ்சா பாக்கெட்களைப் பறிமுதல் செய்துள்ளோம். ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் குணசேகரனைக் கைது செய்து ஜாமீனில் வெளியில் விட்டுள்ளோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு