Published:Updated:

`13 வயதிலேயே தொடங்கிவிட்டேன்; திறந்து கிடக்கும் வீடுதான் டார்கெட்!'- கதிகலக்கிய `கண்மூடி' முருகன்

பைக் திருட்டு வழக்கில் சிக்கிய முருகன், சிறையிலிருந்து வெளியில் வந்த மறுநாளே சேகர் வீட்டில் கதவு திறந்து கிடந்ததைப் பார்த்து உள்ளே சென்று திருடியுள்ளார்.

`கண்மூடி' முருகன்
`கண்மூடி' முருகன்

சென்னை பழைய மாமல்லபுரம் சாலை, கந்தன்சாவடி கோவிந்தசாமி நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் சேகர். இவர், கடந்த நவம்பர் 7-ம் தேதி வீட்டில் குடும்பத்தோடு தூங்கியுள்ளார். அப்போது, காற்றுக்காகக் கதவைத் திறந்து வைத்துள்ளார். காலையில் கண்விழித்த சேகரின் குடும்பத்தினருக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த நகைகள் கொள்ளைபோயிருந்தன.

`கண்மூடி' முருகன்
`கண்மூடி' முருகன்

இந்தச் சம்பவத்தில் 24.5 சவரன் தங்க நகைகள் கொள்ளை போனதாக துரைப்பாக்கம் காவல்நிலைய குற்றப்பிரிவில் புகார் கொடுத்தார் சேகர். இதையடுத்து, இன்ஸ்பெக்டர் கலையரசன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்று விசாரித்தனர். பிறகு, அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது இளைஞர் ஒருவர் நள்ளிரவில் சேகரின் வீட்டிலிருந்து வெளியில் வரும் காட்சி பதிவாகியிருந்தது. அவரின் தோளில் பையை மாட்டியிருந்தார். யார் அந்த இளைஞர் என்று போலீஸார் விசாரித்தனர்.

விசாரணையில் அந்த நபரின் பெயர் முருகன் (எ) கண்மூடி முருகன் என்பது தெரியவந்தது. பைக் திருட்டு வழக்கில் நண்பர்களுடன் சேர்ந்து சமீபத்தில்தான் அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீனில் வெளியில் வந்த கண்மூடி முருகன், மீண்டும் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதை போலீஸார் உறுதிப்படுத்தினர். பிறகு, முருகனின் சொந்த ஊரான விழுப்புரத்தில் அவரைத் தேடினர். அவரின் செல்போன் சிக்னல் மூலம் இருப்பிடத்தைக் கண்காணித்தனர்.

`கண்மூடி' முருகன் திருடிய நகைகள்
`கண்மூடி' முருகன் திருடிய நகைகள்

இந்தநிலையில், நீலாங்கரை பகுதியில் முருகன் பதுங்கியிருப்பதாகத் தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீஸார் முருகனை மடக்கிப்பிடித்தனர். பிறகு, அவரை துரைப்பாக்கம் காவல்நிலையத்துக்குக் கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில் சேகர் வீட்டில் கொள்ளையடித்ததை அவர் ஒப்புக்கொண்டார். அவரிடமிருந்து 24.5 சவரன் தங்க நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். அதன் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி முருகனை சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``விழுப்புரத்தைச் சேர்ந்த முருகன், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டுவருகிறார். பைக் திருட்டு வழக்கில் சிக்கிய முருகன், சிறையிலிருந்து வெளியில் வந்த மறுநாளே சேகர் வீட்டில் கதவு திறந்து கிடந்ததைப் பார்த்து உள்ளே சென்று திருடியுள்ளார். சேகர் வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்துள்ளனர். அதிகாலை 4 மணியளவில் உள்ளே சென்று 1,80,000 ஆயிரம் மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையடித்துள்ளார்.

கண்மூடி முருகனை சிக்கவைத்த சிசிடிவி காட்சி
கண்மூடி முருகனை சிக்கவைத்த சிசிடிவி காட்சி

பிறகு அந்த நகைகளைக் கொண்டு அவர் சந்தோஷமாக வாழ்ந்துள்ளார். தினமும் மது அருந்துவது, விருப்பம்போல வாழ்வதுதான் முருகனின் லைஃப் ஸ்டைல். சேகர் வீட்டில் கொள்ளை நடந்து 23 நாள்களில் முருகனை கைது செய்துவிட்டோம்" என்கின்றனர்.

`முருகனுக்கு ஏன் கண்மூடி என்ற அடைமொழி வந்தது?' என்று போலீஸாரிடம் கேட்டதற்கு ``முருகனின் ஒரு கண் மூடியே இருக்கும். இதனால்தான் கண்மூடி முருகன் என்று அவரை நண்பர்கள் அழைத்துள்ளனர்" என்றனர்.

போலீஸாரிடம் கண்மூடி முருகன் கூறுகையில், `சின்ன வயதிலிருந்தே குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகிறேன். என்னுடைய 13-வது வயதில் திருட ஆரம்பித்தேன். சிறைக்கு செல்வதும் பிறகு வெளியில் வருவதும் என் வாழ்க்கையில் வாடிக்கையானது. அப்பாவும் அம்மாவும் கூலி வேலை செய்துவருகின்றனர். 6-ம் வகுப்பு வரை படித்தேன். ஆரம்பத்தில் வயிற்றுப் பிழைப்புக்காகத் திருடினேன். திருவான்மியூர், துரைப்பாக்கம், செம்மஞ்சேரி ஆகிய காவல் நிலையங்களில் என் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

`பேசுவதை தவிர்த்தாள்; பழிவாங்கவே அப்படிச் செய்தேன்!' - சூலூரில் காதலியைப் பதறவைத்த காதலன்

ஐ.டி நிறுவனங்கள் அதிகம் உள்ள இந்தப் பகுதிகளில் ஏராளமான வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தங்கியிருக்கின்றனர். ஐ.டி நிறுவனத்தில் வேலை என்பதால் இரவு, பகல் என மாறி மாறி வேலை இருக்கும். அதை எனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வேன். முதலில் பைக்கில் நோட்டமிடுவேன். பிறகு, திறந்திருக்கும் வீட்டுக்குள் நுழைந்து லேப்டாப், செல்போன் எனக் கிடைக்கும் பொருள்களை பேக்கில் போட்டுக்கொண்டு எஸ்கேப் ஆகிவிடுவேன்.

ஐ.டி ஊழியர்கள் என்பதால் விலை உயர்ந்த செல்போன்கள், லேப்டாப்களைத்தான் பயன்படுத்துவார்கள். அவற்றைக் குறைந்தவிலைக்கு விற்று மது அருந்துவேன். எனக்கு விருப்பப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து வந்தேன். சிசிடிவி கேமராவால் சிக்கிக்கொண்டேன்' என்று கூறியுள்ளதாகப் போலீஸார் தெரிவிக்கின்றனர்.